தமிழர் தலைநகரில் விபத்து : வீட்டுக்குள் நுழைந்த எரிபொருள் கொள்கலன்
திருகோணமலை (Trincomalee) – தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் எரிபொருள் கொள்கலன் ஒன்று வீட்டு மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்துள்ளது. இதேவேளை குறித்த வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். திருகோணமலை – கண்டி (Kandy) பிரதான வீதியின் 98ஆம் கட்டை பகுதியில் நேற்று (27) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பில் (Colombo) இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த எரிபொருள் கொள்வனவு வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாகவே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் எரிபொருள் கொள்கலனை செலுத்திய சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோரே விபத்தில் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பல விடயங்கள் குறித்து ஆராய்வு
திருகோணமலை (Trincomalee) மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டமானது ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர்கள் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமானது, நேற்று (27.06.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது, கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன. கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேச செயலக பிரிவுகளில் அரசுக்குரிய 300 மீற்றர் அகலமான கடற்கரை வலயத்தில் கனிய மணல் அகழ்வு செய்வதற்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் காணி வழங்க அங்கீகாரம் பெறுதல், நிலாவெளி தொடக்கம் கும்புறுப்பிட்டி கிழக்கு வரையான கடற்கரை 300 மீற்றர் பரப்பளவான அரச காணியை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு நீண்டகால அடிப்படையில் வழங்க அங்கீகாரம் பெறுதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. அதேவேளை, மாவட்டத்தில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் ஏனைய சுகாதார துறை வெற்றிடங்கள், மூதூர் கட்டைபறிச்சான் பால நிர்மாணம் தொடர்பான விடயம், மக்களின் கோரிக்கைக்கு அமைய புதிய நீர்க்குழாய் இணைப்பு வழங்குவதில் நிலவும் தாமதம் தொடர்பான விடயம், இலக்கம் 115, 22 யுனிற்றில் கிராம சபை கிணறு உள்ள இடத்தில் கந்தளாய் ரஜவெவ முதியோர் சங்கத்துக்கு காணி வழங்குதல் தொடர்பிலும் ஆராயப்பட்டன. மேலும், குச்சவெளி, திரியாய் கிராம பிரிவில் “மொபைல் பிளான்ற்” நிர்மாணிப்பதற்காக 1 ஏக்கர் காணியை இலங்கை கனிய மணல் வழங்குவதற்கு அங்கீகாரம் பெறுதல், பேண்தகு வன முகாமைத்துவம் ஊடாக காணி பிரச்சினைகளை தீர்த்தல், கந்தளாய் வீதியின் இருபுறங்களில் தயிர் வியாபாரத்தில் ஈடுபடுவதனால் நிரந்தரமாக வசிக்கும் மக்களின் காணி உரிமை பிரச்சினை, உப்பாறு, கண்டல்காடு விளைநிலங்களுக்கு ஏற்படும் சேதம், கிண்ணியா பிரதேச சபை பிரதேசத்துக்காக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை பிரதேச அலுவலகத்தை பெறுதல், போன்ற பல விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன. இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலப்பத்தி, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச உயரதிகாரிகள் மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுபானசாலைக்கு எதிர்ப்பு; பெண்கள் உட்பட பலர் கைது-தமிழர் பகுதியில் சம்பவம்
திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் மதுபானசாலை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றது. இதில் 11ஆண்களும் 4 பெண்களும் அடங்குவர். கைதானவர்களில் 5 ஆண்கள் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது ஏற்பட்ட அமைதியின்மையால் இரு பொலிஸார் மற்றும் பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் திருகோணமலை மாவட்ட மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் .
மூதூரில் பாடசாலை மாணவர்கள் மீது குளவி கொட்டு : 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி
மூதூர் காவல் பிரிவிற்குட்பட்ட மூதூர் 5 பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் 30 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் சிலர் பாடசாலையில் மேலதிக வகுப்பில் கலந்துகொண்ட போதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், பாடசாலையை அண்மித்த பகுதியில் உள்ள வீட்டில் இருந்த குளவி கூட்டிலுள்ள குளவிகளே இவ்வாறு மாணவர்கள் மற்றும் ஆசிரியரை கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட 22 மாணவர்களும் எட்டு மாணவிகளும் மற்றும் ஆசிரியரும் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பிற்கு விஜயம்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யவுள்ளதாகக் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதியின் வருகை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார்.
காத்தான்குடியில் இளந்தாய் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு: சந்தேகநபர் கைது
வீடொன்றில் மகனுடன் வசித்து வந்த பெண் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு சந்தேகநபர் தப்பி சென்றிருந்த நிலையில் காத்தான்குடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த துப்பாக்கி சூடு மட்டக்களப்பு (Batticaloa) – காத்தான்குடி காவல்துறை பிரிவிலுள்ள புதிய காத்தானகுடி மீன்பிடி இலாஹா வீதி அஹமட் வீதியில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றது. இதன் போது, வீட்டில் வசித்த இளந்தாய் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் சித்தீக் சிபானியா (வயது32) என்பவரே காயமடைந்துள்ளதுடன் பெண்ணின் கணவர் அவுஸ்திரேலியா (Australia) நாட்டில் தற்போது இருப்பதாகவும் இவர் ஒரு மௌலவி எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், காத்தான்குடி காவல்துறையினர் சம்பவ இடத்தில் உள்ள சி.சி.ரி.வி கமராக்களையும் சோதனை செய்து சந்தேக நபர் அடையாளம் கண்டு சந்தேக நபரை மாலை ஆரையம்பதி செல்வா நகர் கிழக்கிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்துள்ளனர். அத்துடன், காயமடைந்த பெண்ணின் வீட்டில் தடவியல் காவல்துறையினர் பிரிவினர் மேற்கொண்ட சோதனைகளில் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பெண் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வேம்பிலிருந்து வடியும் பால்; இனிப்பாக இருக்கும் அதிசயம்! அள்ளிச்சென்று பருகும் திருமலை மக்கள்…
திருகோணமலை – கந்தளாய் வான் எல பகுதியில் வேம்பம் மரத்திலிருந்து பால் போன்ற திரவம் வடியத் தொடங்கியதை கண்டு மக்கள் அதிர்ச்சிடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பகுதியில், குடியிருப்பு காணியில் உள்ள வேப்பமரம் ஒன்றிலிருந்து இவ்வாறான திரவம் வெளிவருவதை கடந்த ஆறாம் தேதி வீட்டு உரிமையாளர் அவதானித்ததாகவும், அதை குடித்த போது இனிப்பு சுவையுடையதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் இந்த செய்தி, பிரதேச முழுவதும் வேகமாக பரவியதால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பான நிலை காணப்பட்டது. இதன் காரணமாக மக்கள் குறித்த வேப்பமரத்தை பார்ப்பதற்கு படையெடுத்து வருகின்றனர் குறித்த மரத்தை பார்ப்பதற்கு அங்கு செல்லும் மக்கள் அதிலிருந்து வரும் திரவத்தை அருந்தி செல்வதையும் காணக் கூடியதாக உள்ளது.
விபத்தில் சிக்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம்..!
மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதான வீதியின் தளங்குடா பகுதியில் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றதாக கத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம், வீதியை விட்டு விலகி, மின்தூண் ஒன்றில் மோதுண்டுள்ளது. விபத்து நேரும் சந்தர்ப்பத்தில் வாகனத்தில் சிவமோகன் உள்ளிட்ட மூவர் பயணித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இந்த விபத்தில் காயமடைந்த நபர், தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதுடன், மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் மனுஷ நாணயக்கார திருகோணமலையில் சந்திப்பு
சமூக அபிவிருத்தி மற்றும் வலுவூட்டல் அமைப்பின் உறுப்பினர் ராம் நிக்கலஸின் ஏற்பாட்டில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களுடனான சமூக மட்ட பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கிடையிலான சந்திப்பு நேற்று மாலை திருகோணமலையிலுள்ள ரிங்கோ ரெஸ்ட் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் அமைச்சர் மனுஷ நாணயக்கார, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர், மாவட்ட செயலாளர் உட்பட அரச உத்தியோகத்தர்களும், சமூக மட்ட பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களும் கலந்து கொண்டிருந்தார்கள். இதன் போது வேலைவாய்ப்பு பணியகத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக தெரிவித்ததோடு மக்களுடைய குறைகளையும் அமைச்சர் கேட்டறிந்து கொண்டார். இந்நிலையில் வெளிநாட்டுக்கு செல்கின்ற பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும், புணர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு திட்டங்கள் மற்றும் திருகோணமலை இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் தொடர்பாகவும் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சாஹிரா கல்லூரி மாணவர்களின் பெறுபேறுகளில் விளையாடாதீர்கள்; அநீதி நீடித்தால் போராட்டம் வெடிக்கும்! எம்.எம்.மஹ்தி எச்சரிக்கை
திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 மாணவிகளின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாமல் இருப்பதானது மாபெரும் அநீதியாகும் என முன்னாள் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம் .எம். மஹ்தி தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (05) அவரால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். முஸ்லீம்களான அம் மாணவிகள் தங்களுடைய கலாச்சார ஆடையான பர்தாவை அணிந்து பரீட்சை மண்டபத்திற்கு சென்றதற்காக மேற்பார்வையாளர்களால் பல அசௌகரியங்களுக்கு உட்படுத்தப்பட்டது மாத்திரமன்றி தற்போது பெறுபேறுகளும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் அம் மாணவிகள் பாரிய மன உளைச்சல்களுக்கு உட்பட்டது மாத்திரமன்றி அவர்களுக்கான ஆடை சுதந்திரமும் மறுக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்திகள் ஏதேனும் முரண்பாடாக நடந்து கொண்டால் மேற்பார்வையாளர்கள் உடனடியாக அதற்கான நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். அல்லது மாணவர்களை வெளியேற்றி இருக்க வேண்டும். மாறாக பரீடசையை எழுதுவதற்கு அனுமதித்து விட்டு இவ்வாறு பழிவாங்கியிருப்பதானது ஒரு வகை இனரீதியான வெறுப்புணர்வின் வெளிப்பாடாகும். இந்த சம்பவம் குறித்து பல அரசியல் தலைமைத்துவங்கள் அமைச்சரிடமும் பரீட்சை ஆணையாளரிடமும் முறையிட்டதன் பிரகாரம் எதிர்வரும் 7ம் திகதி அளவில் பெறுபேறுகள் கிடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தவறும் பட்சத்தில் அம் மாணவர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுப்பதற்காக மாணவர்களையும் பொது மக்களையும் இணைத்து பல போராட்டங்களை நடத்துவதோடு நீதிமன்றில் வழக்கும் தொடரப்படும் எனவும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.