திருகோணமலையில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
வர்த்தகரையும், அவரது கெப் ரக வாகனத்தையும் கடத்திச் சென்று அவரை கொலை செய்ததுடன், அதே வாகனத்தில் ஏற்றி தீ வைத்து எரிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றச்செயல் தொடர்பில் நேற்று முன்தினம் உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
தனிப்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக, விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
திருகோணமலை அலஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அலஸ்வத்த பிரதேசத்தில் கடையொன்றை நடாத்திவந்த குறித்த நபர், அங்கு தங்கியிருந்த போது சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அவரை தாக்கி கெப் வண்டியுடன் கடத்திச் சென்றுள்ளனர்.
குறித்த வர்த்தகரை கொலை செய்த பின்னர், மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனப்பகுதியில் சடலத்தை கெப் வண்டியில் வைத்து தீ வைத்து எரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 24 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.