Search
Close this search box.

ரயிலில் மோதுண்டு இளைஞன் பரிதாப மரணம்..!

காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் இகலமுல்லவத்தை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டுகொட ரயில் வீதியின் நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நேற்று (18) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் களத்தை தீவிரமாக்கும் 22ஆம் திருத்த சட்டமூலம்..!

நாடாளுமன்றத்தில், எதிர்வரும் வாரங்களில் 22ஆம் திருத்தச்சட்டமூலம் கொண்டு வரப்படமாட்டாது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு பின்னர், 22ஆம் திருத்த சட்டமூலம் முன்வைக்கப்படும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் 22ம் திருத்த சட்டத்திற்கு நாடாளுமன்றில் ஆதரவு கிடைக்காவிட்டால் அன்றைய தினமே நாடாளுமன்றை கலைப்பதற்கு வர்த்தமானி அறிவித்தல் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பான வர்த்தமானியில் வெளியிடுவதை தவிர்க்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நீதியமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இந்த சட்ட மூலத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவினை பெற்றுக்கொள்வதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சவால்களை எதிர்நோக்குவதால் நாடாளுமன்றை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்ட 5000 கோடி: அவசரமாக இலங்கைக்கு விரையும் சர்வதேச பொலிஸ்

இலங்கையில் 5000 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பிய இணையக் குற்றவாளிகள் தொடர்பில் விசேட விசாரணைக்காக சர்வதேச பொலிஸ் மற்றும் சீன பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நாட்டிற்கு வரவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று (18) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்த இணையக் குற்றவாளிகள் நீர்கொழும்பு பெய்த்துகல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கணனி ஆய்வு கூடம் ஒன்றை நடத்தி பல இலட்சம் ரூபாவை இணையம் மூலம் மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்  நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். பல நாடுகளைச் சேர்ந்த சந்தேகநபர்கள் சுற்றுலா விசாவில் நாட்டுக்கு வந்து இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்ட சீனப்பிரஜைகள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் டுபாயில் சைபர் முகாம் ஒன்றை நடத்தி வருவதாகவும், டுபாய் பொலிஸார் அந்த முகாமை சோதனையிட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த குற்றவாளிகள் டுபாயில் மக்களை ஏமாற்றி பெரும் தொகையை மோசடி செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்த குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள், இது தொடர்பான 100 வங்கிக் கணக்குகளையும் விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட சீன பிரஜை ஒருவர் நீர்கொழும்பில் 30 அறைகள் கொண்ட மூன்று மாடிகள் கொண்ட ஹோட்டலை 80 இலட்சம் ரூபா வாடகை அடிப்படையில் 3 மாத காலத்திற்கு பெற்று அதனை பயன்படுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கணக்குகளை பயன்படுத்தி 5000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தேகநபர்கள் சில நாட்களில் 800 இலட்சம் ரூபாவிற்கு மேல் சம்பாதித்துள்ளதாகவும் அதனை கொண்டாடும் வகையில் நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விருந்து ஒன்றையும் நடத்தியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர் இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 39 சந்தேக நபர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கறுப்பு பணம் வைத்திருப்போருக்கு தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ள சலுகை

நாட்டில் கறுப்பு பணம் வைத்திருப்போருக்கு விசேட சலுகை ஒன்றை வழங்க உள்ளதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. பொலனறுவையில் நடைபெற்ற கூட்டமொன்றில் தேசிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியினால் நிறுவப்படும் அரசாங்கத்தில் கறுப்பு பணத்தை முதலீடு செய்வதற்காக விசேட நிதியம் உருவாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு சேர்க்கப்படாத பணம் மக்களிடம் உள்ளதாக, அவ்வாறான பணம் கறுப்புப் பணமாகக் கூட இருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான கறுப்பு பணத்தை அரசாங்க செயற்திட்ட நிதியத்திற்கு இந்தப் பணத்தை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.நாட்டின் எந்தவொரு நபரும் முதலீடு செய்யக்கூடிய வகையில் இந்த நிதியம் உருவாக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

திரையரங்கில் நடந்த சட்டவிரோத செயல்! மக்களுக்கு விதிக்கப்படவுள்ள தடை

இலங்கை திரைப்பட இயக்குநர்கள் திரையரங்குகளுக்குள் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு செல்வதை தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் ஒரு திரைப்படத்தை சட்டவிரோதமாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றிய சம்பவத்தை தொடர்ந்தே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் திரையரங்கு உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரைப்பட இயக்குனர் ஜயந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார். இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனமும் திரையரங்குகளுக்குள் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு செல்வதை தடை விதித்து உத்தியோகபூர்வ உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் ஜயந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இயங்குநிலை தென்மேற்கு பருவ பெயர்ச்சி நிலைமை காரணமாக இவ்வாறு காற்று நிலைமை அதிகரிக்கும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கைதிகளுக்கும் வாக்களிக்க வாய்ப்பு – உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அது தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்க, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவைப் பிறப்பிக்குமாறு, அந்த மனுவின் ஊடாக கோரப்பட்டுள்ளது. விளக்கமறியலில் உள்ள ஒருவர் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட 9 பேர்  பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். பல வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்குத் தேர்தல்களில் வாக்களிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய மனுதாரர், அவர்கள் தமது ஜனநாயக உரிமையை இழந்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மொட்டு கட்சிக்குள் தொடரும் குழப்பம்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தம்மிக்க பெரேராவை களமிறக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் கடந்த திங்கட்கிழமை தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக இதுவரை அறிவிக்கவில்லை. அதேவேளை பொதுஜன பெரமுனவினால், ஜனாதிபதி வேட்பாளராக தம்மை முன்வைத்தால் அதுபற்றி பரிசீலிக்க தயார் என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், தாம் எந்த வகையிலும் வேட்பாளராக போட்டியிடப் போவதில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு..

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும விண்ணப்பங்களை ஏற்கும் காலம் கடந்த 13ம் திகதியுடன் முடிவடைந்தது. இரண்டாம் கட்டமாக 75,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அஸ்வெசும நலன்புரி சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார். அஸ்வெசுமவின் முதல் கட்டத்தில் கணக்கிடப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 34 இலட்சம் ஆகும், அதில் 18 இலட்சம் பேர் அஸ்வெசுமவின் பலன்களுக்கு தகுதி பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.

சட்டவிரோத மீன்பிடி: ஆபத்தை எதிர்கொள்ளும் கடல் பாலூட்டிகள்?

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால்  இலங்கையின் கடற்பகுதிகளைச் சுற்றி உள்ள ஆமைகள் மற்றும்  டொல்பின்கள் போன்ற கடல் பாலூட்டிகள் இறக்கின்றன என வனவிலங்கு திணைக்களம் அறிவித்துள்ளது.  மீன்பிடிக்க சட்ட விரோதமான (Bottom trawling) பொட்டம் டிராலிங் முறையை கடைபிடிப்பதால் கடல் பாலூட்டிகள் உட்பட அனைத்து மீன்களும் கொல்லப்படுகின்றன என்று அவர்கள் மேலும் தெரிவிக்கின்றன. இலங்கையின் மேற்குக் கரையோரப் பகுதியில் ஒரு வாரத்திற்குள் இறந்த நிலையில் 10 ஆமைகளை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். வனவிலங்கு கால்நடை  மருத்துவர்களால் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், சுவாசிப்பதில் சிரமம், காயங்கள் மற்றும் ஃபிலிப்பர்கள் சேதமடைந்ததால், இந்த ஆமைகள் இறந்தது தெரியவந்துள்ளது.  மேலும் இறந்த சில ஆமைகள் ஏற்கனவே அழுகிய நிலையில் இருந்ததால் பிரேதப் பரிசோதனை செய்வதில் சிரமம் ஏற்பட்டதென்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  சட்டவிரோத மீன்பிடி முறைகள் கடல் ஆமைகளை காயப்படுத்துவது மற்றும் கொல்வது மட்டுமல்லாமல், டொல்பின்கள் போன்ற கடல் பாலூட்டிகளுக்கும் தீங்கு விளைவதாக குறித்த திணைக்களம் கூறியுள்ளது. சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பிலும் கடல் பாலூட்டிகளைப் பாதுகாப்பதற்காகன முக்கியத்துவம் குறித்தும்   திணைக்களம் பொதுமக்களிடம் ஏற்கனவே பல முறை எச்சரிக்கைகளை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.