ரயிலில் பாய்ந்து உயிரிழந்த இளைஞன் – பொலிஸார் மீது குற்றம்சுமத்தும் பெற்றோர்
அங்குலான பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில், குறித்த இளைஞனின் பெற்றோர் பொலிஸார் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். 22 வயதான சுபுன் ரந்திக எனும் இளைஞனே உயிரிழந்தவராவார். அங்குலான பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (14) இரவு இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது இளைஞன் ஒருவன் தகறாறு செய்தமை தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. பின்னர் அங்குலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு சென்று நேற்றிரவு இளைஞனை அழைத்துச் சென்றபோது, குறித்த இளைஞன் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார். இவ்வாறு பொலிஸாரிடம் இருந்து தப்பி ஓடிய இளைஞனை பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்து இரவு உணவு கொடுத்த பின் உறங்கச் செய்துள்ளனர். அதன் பின் இன்று (15) அதிகாலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று தமது வீட்டிற்கு வந்ததாகவும், தமது மகன் அவர்களிடம் இருந்து தப்பிச் சென்றதாகவும் இளைஞனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். பின்னர் இன்று காலை 7 மணி அளவில் தமது மகன் ரயிலில் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தமக்கு அறிவித்ததாக உயிரிழந்த இளைஞனின் பெற்றோர்கள் தெரிவித்தனர். அங்குலான மயானத்திற்கு அருகில் உள்ள ரயில் பாதையில் இன்று காலை உயிரிழந்த இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து – 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி
தலங்கம – கொஸ்வத்த பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். மீகொட – புறக்கோட்டை மற்றும் கடுவெல – கொள்ளுப்பிட்டி பயணிக்கும் பேருந்துகளே இவ்வாறு விபத்துக்குளாகியது. மீகொடயிலிருந்து புறக்கோட்டை நோக்கிச் சென்ற பேருந்து பத்தரமுல்லை தலாஹேனையை கடந்து பயணிக்கும் போது, கடுவெலயிலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிச் சென்ற பேருந்து பின்னால் வந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனடாவில் வேலை – பணத்தை மோசடி செய்த இருவர் கைது
கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பொரளை பிரதேசத்தில் இயங்கும் நிறுவனம் ஒன்று கனடாவில் நிதித்துறையில் தொழில் வழங்குவதாக கூறி 10 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்ட போதிலும், வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை என நபர் ஒருவர் பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் விசாரணை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறித்த நிறுவனம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி நடத்தப்பட்ட சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இதன்படி, குறித்த நிறுவன உரிமையாளர் உட்பட மேலும் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு…!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(15) மேலும் அதிகரித்த நிலையில் பதிவாகியுள்ளது. அதனடிப்படையில், செலான் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 297.80 முதல் ரூ. 295.50 மற்றும் ரூ. 307.30 முதல் ரூ. முறையே 305.00. மக்கள் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 296.65 முதல் ரூ. 295.91, விற்பனை விகிதமும் ரூ. இருந்து குறைந்துள்ளது. 307.29 முதல் ரூ. 306.53. கொமர்ஷல் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 296.95 முதல் ரூ. 295.68 மற்றும் விற்பனை விகிதம் ரூ. இருந்து குறைந்துள்ளது. 306.75 முதல் ரூ. 305.50. சம்பத் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் ரூ. 298 முதல் ரூ. 297 மற்றும் ரூ. 307 முதல் ரூ. முறையே 306 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம யாழிற்கு விஜயம்…!
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கும் நான்கு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராய முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இன்றையதினம்(15) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். யாழில் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெறும் மூன்று மாவட்டங்களுக்கான கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தில் இரு திட்டங்களும், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தலா ஒரு திட்டமும் முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது. இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் பகுதியில் 980 ஏக்கர் நிலப் பரப்பில் ஒரு திட்டம் குறித்தும், கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் பகுதியில் 170 ஏக்கர் நிலப் பரப்பில் மற்றொரு திட்டம் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளன. அதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காங்கேசன்துறை கடற்கரைப் பூங்கா மற்றும் காங்கேசன்துறை விசேட முதலீட்டு வலயம் என்பன தொடர்பில் ஆராயப்படவுள்ளன.
ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர் ஜீவன்
மலையகத் தமிழன்” என்பது எனது அடையாளம்! ஆனால், “நான் ஒரு இலங்கையன்”. அதை என்னால் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் முகமாக, “ஒன்றாக வெல்வோம்” என்ற தொனிப் பொருளிலான பொதுக்கூட்டத் தொடரின், இரண்டாவதுப் பேரணி கண்டி பொது வர்த்தக நிலையத்திற்கு முன்பாக நேற்று (14) இடம்பெற்றிருந்தது. இக்கூட்டத் தொடரில் கலந்துக்கொண்டு தொடர்ந்து உரையாற்றிய போதே அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மெலும் கருத்து தெரிவித்த அவர், 2024 ஆம் ஆண்டில் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் ரணில் விக்ரமசிங்க தான். அந்த அடையாளத்துக்கு ஒரு தீர்வு கட்டாயம் கிடைத்தாக வேண்டுமென்றால், அடுத்த ஜனாதிபதியாக அவரே வந்தாக வேண்டும். “கெஞ்சி கேட்டால் பிச்சை துணிந்து கேட்டால் உரிமை”. நாம் இந்த 1700 ரூபாய் சம்பளத்தை மட்டும் இறுதிக் கோரிக்கையாக வைக்க கூடாது ஏனென்றால், நம்மை பொறுத்த வரைக்கும் “அடையாளப் பிரச்சினை” ஒன்று இருக்கின்றது. அந்த அடையாளத்திற்கு கட்டாயம் ஒரு தீர்வு கிடைத்தாக வேண்டும். ஒரு தீர்வு கிடைத்தாக வேண்டுமென்றால், கட்டாயம் அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க வந்தாக வேண்டும். அப்படி இருக்கும் போது, நான் என்னுடைய மக்களிடம் ஒரே ஒரு விடயத்தை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். நான் ஒரு “மலையகத் தமிழன்” என்று எவ்விடத்திலும் சொல்ல போவது கிடையாது. “மலையகத் தமிழன்” கலாச்சாரமாக என்னுடைய அடையாளம். ஆனால், நான் ஒரு “இலங்கையன்” அதை நான் எந்த ஒரு இடத்திலும் விட்டுக்கொடுக்க முடியாது. அப்படி இருக்கும் தருணத்தில் உங்கள் எல்லோரிடமும் நான் ஒரே ஒரு விடயத்தை தான் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். இன்றைக்கு நிறைய பேர் இந்த பதவியை பார்த்து பயந்து ஓடிப்போய் இறுதியில் ஒன்றுமே செய்ய முடியாமல், “நான் தான் நாட்டுக்கு அடுத்த ஜனாதிபதி” என்று சொல்ல வருகிறார்கள். ஆனால், மக்கள் எல்லோருக்கும் தெரியும். யார் நின்று வெற்றிப் பெற்றது என்று. இப்படி இருக்கும்போது, மக்கள் எல்லோருமே ஒன்று திரண்டு, அனைவருமே ஒன்றிணைந்து, ஒழுக்கமாக, கட்டுக்கோப்பாக இருந்து அடுத்த ஜனாதிபதியாக யாரை தெரிவுசெய்யப் போகின்றோம்? நிச்சயம் அது ரணில் விக்ரமசிங்க அவர்களாகவே இருக்க வேண்டும். “காணி உரிமை” கட்டாயம் நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் நான் ஜனாதிபதியிடம் ஒரு கோரிக்கையை முன் வைத்தேன். மக்களிடம் காணி உரிமையை கொடுங்கள், கட்டாயம் அவர்கள் மேலே வருவார்கள். எமக்கு இலவச வீடு தேவையில்லை. வீடு கட்டுவதற்கான வாய்ப்பை உருவாக்கித் தாருங்கள். அது போதும் என்று நான் அவரிடம் கூறினேன். இன்றைக்கு நம்மை பொறுத்த வரைக்கும் ஜனாதிபதி அவர்கள், கிட்டத்தட்ட 4,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்து இருக்கின்றார். அந்த நிதி ஒதுக்கீடு செய்வதற்கான காரணம் என்னவென்றால், மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே ஆகும் என தெரிவித்தார். இந்நிகழ்வில், பல்வேறு அரசியல் கட்சியினரை பிரதிநிதித்துவப்படுத்திய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்துக் கொண்டிருந்தனர், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானும் பங்கெடுத்திருந்தார் என்பதும் குறிப்படத்தக்கது.
பாதாளஉலகத்துடன் தொடர்புபட்ட அச்சுறுத்தும் சுவரொட்டிகள்- பொலிஸார் தீவிரவிசாரணை
பாதளஉலகத்துடன் தொடர்புபட்ட அச்சுறுத்தும் சுவரொட்டிகள் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துருகிரிய துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்ட பின்னர் தெமட்டகொட மகரஹம பகுதிகளில் காணப்பட்ட மர்மசுவரொட்டிகள் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கிளப்வசந்தவின் இறுதிநிகழ்வுகள் இடம்பெற்ற தினத்தன்று பாதளஉலகத்தலைவர் மதுஸின் உடல் புதைக்கப்பட்ட கொடிகமுவ மயானத்தில் பாதளஉலகத்தினரால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் காணப்பட்டுள்ளன. மதுஸின் படத்துடன் காணப்பட்ட சுவரொட்டிகளில் அன்புக்குரிய சகோதரரே நாங்கள் ஒவ்வொருவராக அனுப்பிக்கொண்டிருக்கின்றோம்,எங்களுக்காக காத்திருங்கள் என்ற வாசகங்கள் காணப்பட்டுள்ளன. மதுசுடன் உறவிலிருந்து பெண்ணொருவர் கிளப்வசந்த கொல்லப்பட்ட தினத்தன்று மதுசின் கல்லறைக்கு சென்று மெழுகுதிரி ஏற்றியுள்ளார். 2012 வெலிக்கடைசிறைச்சாலை வன்முறையில் கொல்லப்பட்ட களுதுசாரவின் மனைவியான இவர் பின்னர் மதுசுடன் துபாயில் வாழ்ந்துள்ளார். மேலும் இந்த பெண் வசிக்கும் பகுதியில் ( மஹரஹம) மதுஸ் சென்ற இடத்திற்கு பாதளஉலகத்தை சேர்ந்த அனைவரும் செல்வதற்கு தயாராக உள்ளனர் , கஞ்சிப்பானை குடும்பத்திற்கும் இதே தண்டனை போன்ற சுவரொட்டிகளும் காணப்பட்டுள்ளன. ஹிருசெவன தொடர்மாடி மற்றும் தெமட்டகொடயில் இவ்வாறான சுவரொட்டிகள் காணப்பட்டுள்ளன.
நஷ்ட ஈட்டை செலுத்தி முடிக்க கால அவகாசம் கோரும் மைத்திரிபால
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாவில் 58 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதுடன் மீதி பணத்தை செலுத்தி முடிக்க கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, மீதி பணத்தை செலுத்தி முடிக்க 6 வருடகால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணி மூலம் உயர் நீதிமன்றத்துக்குக் கோரிக்கை விடுத்துள்மை குறிப்பிடத்தக்கது.
பிறப்பு, திருமணங்கள் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்
நாட்டில் உள்ள சில பதிவாளர்கள் பிறப்பு, திருமணங்கள் மற்றும் இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்த பின்னர் சம்பந்தப்பட்ட பிரதிகளை அந்தந்த பிரதேச செயலகங்களுக்கு அனுப்புவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெற்றோர், திருமணமான தம்பதிகள் மற்றும் பாதுகாவலர்களுக்கு ஒரு நகலை வழங்கினாலும் ஏனைய பிரதிகள் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்படுவதில்லை என கூறப்படுகின்றது. இதனால் பிறப்பு, திருமணம், இறப்பு நகல்களை பெற்றுக்கொள்வதற்காக ஆவண காப்பகத்திற்கோ அல்லது சம்பந்தப்பட்ட பிரதேச செயலக அலுவலகங்களுக்கோ சென்றாலும் பிரதிகள் இல்லாமையினால் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், சில பதிவாளர்கள் பிறப்பு, திருமணம், இறப்பு பதிவு செய்தாலும், சம்பந்தப்பட்ட புத்தகத்தில் உள்ள தகவல்களை நகல் எடுப்பதில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 400 பிறப்பு, திருமண, இறப்பு பதிவாளர்கள் இருப்பதாகவும், அவ்வாறான சம்பவம் ஏதேனும் ஒரு இடத்தில் இடம்பெற்றிருந்தால், அது தொடர்பில் ஆராய முடியும் எனவும் பதிவாளர் நாயகம் டபிள்யூ.ஆர்.ஏ.என்.எஸ்.விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் இன்று வெளியாகவுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு!
திருத்தப்பட்ட மின்கட்டணத்தை பொது பயன்பாட்டு ஆணையம் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் மின்சார சபையின் முன்மொழிவுகளை மீளாய்வு செய்து, உரிய தரவுகளை ஆராய்ந்து, பொதுமக்களின் கருத்துக்களைக் கருத்திற்கொண்ட பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் இது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன் பிற்பகலில் மின் கட்டண திருத்தம் தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை, மின் கட்டணத்தை சுமார் 30 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் வீடு மற்றும் மத தலங்களில் மின் கட்டணம் 18 சதவீதத்தாலும், கைத்தொழில்சாலைகள், ஹோட்டல்களுக்கான மின் கட்டணம் 12 சதவீதத்தாலும், அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கான மின் கட்டணம் 24 சதவீதத்தாலும் குறைக்கப்படும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.