அங்குலான பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில், குறித்த இளைஞனின் பெற்றோர் பொலிஸார் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
22 வயதான சுபுன் ரந்திக எனும் இளைஞனே உயிரிழந்தவராவார்.
அங்குலான பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (14) இரவு இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது இளைஞன் ஒருவன் தகறாறு செய்தமை தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
பின்னர் அங்குலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு சென்று நேற்றிரவு இளைஞனை அழைத்துச் சென்றபோது, குறித்த இளைஞன் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இவ்வாறு பொலிஸாரிடம் இருந்து தப்பி ஓடிய இளைஞனை பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்து இரவு உணவு கொடுத்த பின் உறங்கச் செய்துள்ளனர்.
அதன் பின் இன்று (15) அதிகாலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று தமது வீட்டிற்கு வந்ததாகவும், தமது மகன் அவர்களிடம் இருந்து தப்பிச் சென்றதாகவும் இளைஞனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இன்று காலை 7 மணி அளவில் தமது மகன் ரயிலில் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தமக்கு அறிவித்ததாக உயிரிழந்த இளைஞனின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
அங்குலான மயானத்திற்கு அருகில் உள்ள ரயில் பாதையில் இன்று காலை உயிரிழந்த இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.