மலையகத் தமிழன்” என்பது எனது அடையாளம்! ஆனால், “நான் ஒரு இலங்கையன்”. அதை என்னால் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் முகமாக, “ஒன்றாக வெல்வோம்” என்ற தொனிப் பொருளிலான பொதுக்கூட்டத் தொடரின், இரண்டாவதுப் பேரணி கண்டி பொது வர்த்தக நிலையத்திற்கு முன்பாக நேற்று (14) இடம்பெற்றிருந்தது.
இக்கூட்டத் தொடரில் கலந்துக்கொண்டு தொடர்ந்து உரையாற்றிய போதே அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மெலும் கருத்து தெரிவித்த அவர்,
2024 ஆம் ஆண்டில் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் ரணில் விக்ரமசிங்க தான். அந்த அடையாளத்துக்கு ஒரு தீர்வு கட்டாயம் கிடைத்தாக வேண்டுமென்றால், அடுத்த ஜனாதிபதியாக அவரே வந்தாக வேண்டும்.
“கெஞ்சி கேட்டால் பிச்சை துணிந்து கேட்டால் உரிமை”. நாம் இந்த 1700 ரூபாய் சம்பளத்தை மட்டும் இறுதிக் கோரிக்கையாக வைக்க கூடாது ஏனென்றால், நம்மை பொறுத்த வரைக்கும் “அடையாளப் பிரச்சினை” ஒன்று இருக்கின்றது.
அந்த அடையாளத்திற்கு கட்டாயம் ஒரு தீர்வு கிடைத்தாக வேண்டும். ஒரு தீர்வு கிடைத்தாக வேண்டுமென்றால், கட்டாயம் அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க வந்தாக வேண்டும்.
அப்படி இருக்கும் போது, நான் என்னுடைய மக்களிடம் ஒரே ஒரு விடயத்தை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். நான் ஒரு “மலையகத் தமிழன்” என்று எவ்விடத்திலும் சொல்ல போவது கிடையாது.
இன்றைக்கு நிறைய பேர் இந்த பதவியை பார்த்து பயந்து ஓடிப்போய் இறுதியில் ஒன்றுமே செய்ய முடியாமல், “நான் தான் நாட்டுக்கு அடுத்த ஜனாதிபதி” என்று சொல்ல வருகிறார்கள். ஆனால், மக்கள் எல்லோருக்கும் தெரியும். யார் நின்று வெற்றிப் பெற்றது என்று.
இப்படி இருக்கும்போது, மக்கள் எல்லோருமே ஒன்று திரண்டு, அனைவருமே ஒன்றிணைந்து, ஒழுக்கமாக, கட்டுக்கோப்பாக இருந்து அடுத்த ஜனாதிபதியாக யாரை தெரிவுசெய்யப் போகின்றோம்? நிச்சயம் அது ரணில் விக்ரமசிங்க அவர்களாகவே இருக்க வேண்டும்.
“காணி உரிமை” கட்டாயம் நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் நான் ஜனாதிபதியிடம் ஒரு கோரிக்கையை முன் வைத்தேன். மக்களிடம் காணி உரிமையை கொடுங்கள், கட்டாயம் அவர்கள் மேலே வருவார்கள். எமக்கு இலவச வீடு தேவையில்லை. வீடு கட்டுவதற்கான வாய்ப்பை உருவாக்கித் தாருங்கள். அது போதும் என்று நான் அவரிடம் கூறினேன்.
இன்றைக்கு நம்மை பொறுத்த வரைக்கும் ஜனாதிபதி அவர்கள், கிட்டத்தட்ட 4,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்து இருக்கின்றார். அந்த நிதி ஒதுக்கீடு செய்வதற்கான காரணம் என்னவென்றால், மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே ஆகும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில், பல்வேறு அரசியல் கட்சியினரை பிரதிநிதித்துவப்படுத்திய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்துக் கொண்டிருந்தனர், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானும் பங்கெடுத்திருந்தார் என்பதும் குறிப்படத்தக்கது.