இலங்கையர்களுக்கு விசா இன்றி தாய்லாந்து செல்ல அனுமதி
இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல இன்று (15) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக முதல் தடவையாக இலங்கையர்களுக்கு விசா இன்றி தாய்லாந்து செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தாய்லாந்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய கொள்கையின்படி, ஒரு சுற்றுலாப் பயணி 60 நாட்களுக்கு விசா இல்லாமல் நாட்டில் தங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விசா இல்லாமல் தாய்லாந்திற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகள் தங்குமிட நிதி மற்றும் திரும்புவதற்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும் என்பதுடன், அந்நாட்டின் குடிவரவு அதிகாரிகளின் ஒப்புதலைப் பெறுவதும் கட்டாயமாகும். தாய்லாந்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ராஜபக்சர்களுக்கு துணை போகும் ஜே.வி.பி: சஜித் குற்றச்சாட்டு
ராஜபக்சர்களை ஆட்சிக்கு கொண்டு வர வாக்குத் திரட்டும் திட்டத்தை ஜே.வி.பி. தரப்பினரே முன்னெடுத்தனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) குற்றஞ்சாட்டியுள்ளார். களுத்துறையில் நேற்று (14.07.2024) நடைபெற்ற மக்கள் அரண் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ராஜபக்சர்களை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு வீடு வீடாகச் சென்று அடிமட்ட பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்தது ஜே.வி.பி. தரப்பினரே. அவர்கள் ராஜபக்சர்களை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு டீல் போட்டு வீடு வீடாகச் சென்று சுவரொட்டிகளை ஒட்டினர். இவர்களைப் போன்று திருடர்களுடன் எனக்கு எந்த டீலும் இல்லை. மகிந்த ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டு வர கிராமத்தில் வீடு வீடாகச் சென்று வாக்குத் திரட்டும் திட்டத்தை இந்த மக்கள் விடுதலை முன்னனணியினரே முன்னெடுத்தனர். நாட்டை அழித்த திருடர்களை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக மக்கள் விடுதலை முன்னனணியினர் செயற்பட்டாலும், அந்தத் திருடர்களுடன் இணைந்து பதவிகளை ஏற்றுக்கொள்ள நான் ஒருபோதும் விரும்பவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முழு நாட்டுக்கும் நகைச்சுவைகளை முன்வைத்து வருகின்றார். புண்ணியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான ஒருவர், தேர்தலுக்குப் பயந்து தேர்தலை நடத்தாமல் அதிகாரத்தில் இருந்து கொள்வதற்குப் பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகின்றார். இவ்வாறான ஒருவரை நான் எனது வாழ்க்கையில் பார்த்தில்லை. போட வேண்டிய ஒவ்வொரு முடிச்சுக்களையும் அவர் போடுகின்றார். சிறப்புரிமைகளை வைத்து பயனடைய நினைக்கின்றார். சலுகைகள், வரப்பிரசதாசங்களை வழங்கி கட்சித் தலைவர்களை வளைத்துப் போடும் வேலையிலும் அவர் இறங்கியிருக்கின்றார். கட்சித் தலைவர்களும் அவ்வாறான நடவடிக்களையும் முன்னெடுத்துள்ளனர். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சலுகைகளை அடிப்படையாகக் கொண்டு தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் மோசமான அரசியல் கலாசாரத்துக்கும், அவ்வாறான அரசியலை முன்னெடுப்பவர்களையும் நிறுத்துகின்ற இந்தப் பேராசை அரசியலையும் முடிவுக்குக் கொண்டு வரும் காலம் நெருங்கி விட்டது. ஜனாதிபதியும் அரச தரப்பினரும் தேர்தலைக் கண்டு அஞ்சமடைந்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியால் ஐக்கிய தேசியக் கட்சி பூச்சியத்துக்கு வீழ்ந்ததுடன், புண்ணியத்தால் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தாலும் அதனை ஏற்று கொள்வதற்கு கூட பல மாதங்கள் பிடித்தன. மூலோபாய ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக அவர்கள் தங்கள் இருப்பைப் பாதுகாக்கும் விதமாகவே இவ்வளவு காலமும் செயற்பட்டு வந்துள்ளனர். இத்தகைய சுயநல போக்குகளை விடுத்து, மக்களின் யுகத்தை உருவாக்கி, சாரதாண மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் அரசொன்றே தற்போது நாட்டுக்கு அவசியம்” என சுட்டிக்காட்டியள்ளார்.
சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்
சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்திற்கு முன்பாக இன்று காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டிருந்த வைத்தியர் அர்ச்சுனா கடந்த திங்கட்கிழமை விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது விடுமுறை காலம் முடிந்து இன்று மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்லவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்ப்பதற்காக பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்குள் காரணம் ஏதுமின்றி எவர் ஒருவரையும் பொலிஸார் அனுமதிக்கவில்லை என்றும், தங்களது கட்டுப்பாட்டில் சாவகச்சேரி வைத்தியசாலையை பொலிஸார் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழர் பகுதியில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்.
திருகோணமலையில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். வர்த்தகரையும், அவரது கெப் ரக வாகனத்தையும் கடத்திச் சென்று அவரை கொலை செய்ததுடன், அதே வாகனத்தில் ஏற்றி தீ வைத்து எரிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்செயல் தொடர்பில் நேற்று முன்தினம் உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக, விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். திருகோணமலை அலஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அலஸ்வத்த பிரதேசத்தில் கடையொன்றை நடாத்திவந்த குறித்த நபர், அங்கு தங்கியிருந்த போது சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அவரை தாக்கி கெப் வண்டியுடன் கடத்திச் சென்றுள்ளனர். குறித்த வர்த்தகரை கொலை செய்த பின்னர், மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனப்பகுதியில் சடலத்தை கெப் வண்டியில் வைத்து தீ வைத்து எரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 24 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனாதிபதியிடம் ஜீ.எல்.பீரிஸ் எழுப்பியுள்ள கேள்வி
நாட்டின் பொருளாதாரம் வலுவாக கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும், நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரகடனப்படுத்தினால், தேர்தலை நடத்துவதற்கு என்ன அச்சம் என்று முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் வினவியுள்ளார். அட்டமஸ்தானாதிபதி கலாநிதி பல்லேகம ஹேமரதனவை நேற்று (14) சந்தித்து ஜனாதிபதி தேர்தல் குறித்து உரையாடி ஆசி பெற்ற பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”ஜனாதிபதி தேர்தலை யாராலும் ஒத்திவைக்க முடியாது. நாட்டின் பொருளாதாரம் வலுவாக கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும், நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரகடனப்படுத்தினால், தேர்தலை நடத்துவதற்கு என்ன அச்சம். எனவே ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு எந்தவொரு நபருக்கும் இடமில்லை. ஜனாதிபதி தேர்தல் நடத்துவது தொடர்பாக அட்டமஸ்தானாதிபதி கலாநிதி ஹேமரத்தன தேரருடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினேன். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடினோம்.”என்று கூறியுள்ளார்.
காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவயில் திணைக்களம், பொது மக்களை அறிவுறித்தியுள்ளது.
நாட்டு மக்களுக்கு சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள அறிவுறுத்தல்
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் டெங்குவை தடுக்கும் வகையில் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறும், நுளம்புகள் பெருகும் இடங்களை அழிக்குமாறும் சுகாதார அதிகாரிகள் மக்களை அறிவுறுத்தியுள்ளனர். இலங்கையின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கணிசமான மழை பெய்ய தொடங்கியுள்ள நிலையிலே சுகாதார அதிகாரிகள் இவ்வாறு மக்களை அறிவுறுத்தியுள்ளனர். 2024 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30,057 ஐத் தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 6,910 க்கும் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் 11,661 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது மாகாண வாரியாக அதிகபட்சமான எண்ணிக்கை எனவும் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் நடந்த மோசமான செயல் – ஆபத்தான நிலையில் 11 மாணவர்கள்
பாடசாலை மாணவர்கள் 11 பேர் சுகயீனமடைந்து ஆபத்தான நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மிஹிந்தலை வைத்தியசாலையினால் பாடசாலை மாணவர்கள் குழுவொன்றுக்கு, வழங்கப்பட்ட ஊசி மருந்து காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊசி மருந்து ஏற்றியதன் காரணமாக ஆபத்தான நிலைக்குத தள்ளப்பட்ட மாணவர்கள், மிஹிந்தலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் 06 வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. குறித்த மாணவர்கள் மிஹிந்தலை வைத்தியசாலைக்கு சளிக்காக சிகிச்சை பெறச் சென்ற போது, அங்கு வழங்கப்பட்ட ஊசி மருந்து காரணமாக சுகயீனமடைந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதனையடுத்து மேலதிக சிகிச்சைக்காக மாணவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சம்பவம் தொடர்பில் வடமத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆபத்தான நிலையில் இலங்கை தொடருந்து சேவைகள்! மக்களுக்கு ஏற்படவுள்ள சிரமம்
மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த தொடருந்து பண்டாரவளை மற்றும் ஹீல் ஓயாவிற்கு இடையில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாகவே மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த மாதத்தில் மலையகம் மற்றும் கடலோர தொடருந்து பாதைகளில் மொத்தம் பதினொரு தொடருந்துகள் தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. தொடருந்து தண்டவாளங்கள், தொடருந்து என்ஜின்கள், பெட்டிகள் மற்றும் புவியியல் காரணங்களினால் ஏற்பட்ட பராமரிப்பு பிழைகள் காரணமாகவே தொடருந்துகள் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின்படி, பெரும்பாலான தொடருந்துகள் என்ஜின்கள் மற்றும் பெட்டிகளில் உள்ள சக்கரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மலையக பாதையில் தண்டவாளங்களின் மோசமான பராமரிப்பு காரணமாக சில தொடருந்துகள் தடம் புரண்டுள்ளன. இப்பகுதியின் புவியியல் சூழ்நிலை காரணமாக பெரும்பாலான தொடருந்து பாதைகள் பழுதுபார்க்க முடியாத நிலையில் உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.