அடுத்த வாரம் 1300 வைத்தியர்களுக்கு புதிய நியமனம்.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் 1300 புதிய வைத்தியர்களுக்கு புதிய நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். எமது செய்தி பிரிவுக்கு கருத்து தெரிவித்த அவர், நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு இந்த வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வைத்தியர்களைநியமிப்பதன் மூலம் தற்போது நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறை தவிர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரமின்றி 13 ஆவது திருத்தம் நடைமுறை: ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பொலிஸ் அதிகாரமின்றி 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்துக் கலந்துரையாடிவருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுவதை முற்றாக நிராகரிப்பதாகவும், அது ஒருபோதும் தமிழர் விரும்பும் அரசியல் தீர்வாக அமையாது எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். இவ்வாறான கருத்துக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் மத்தியில் அவருக்குப் பாரிய பின்னடைவையே தேடித்தரும் எனத் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மறைந்த பெருந்தலைவர் இரா.சம்பந்தன் பிரிக்கப்படாத ஒருமித்த நாட்டுக்குள் அரசியல் தீர்வைக் கோரியதாகவும், தற்போது அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை பொலிஸ் அதிகாரமின்றி, மத்திய அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட வேறு பல அதிகாரங்களுடன் நடைமுறைப்படுத்துவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் ஞாயிற்றுக்கிழமை இரா.சம்பந்தனின் இறுதிக்கிரியை நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ஜனாதிபதியின் இக்கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை பொலிஸ் அதிகாரமின்றி நடைமுறைப்படுத்துவது ஓரளவுக்கேனும் ஏற்றுக்கொள்ளத்தக்க அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக அமையாது எனவும் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “சம்பந்தன் பிளவுபடாத, ஒருமித்த இலங்கைக்குள் அரசியல் தீர்வினைக் கோரியதாக ஜனாதிபதி கூறுகின்றார். இருப்பினும் அவர் பிளவுபடாத இலங்கைக்குள் தமிழர்களைத் தேசிய இனமாக அங்கீகரிக்கக்கூடிய, சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டி முறையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வையே கோரினார். மாறாக அவர் ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வைக் கோரவில்லை. அவ்வாறிருக்கையில் பொலிஸ் அதிகாரங்களின்றி 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடிவருவதாக ஜனாதிபதி கூறுகின்றார். அது ஓரளவுக்கேனும் ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வாக ஒருபோதும் அமையாது. எனவே உரையில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்தை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம். அதுமாத்திரமன்றி ஏற்கனவே மாகாணங்களுக்கான கல்வி மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும், எனவே மேலும் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படுவதை கிஞ்சித்தும் ஏற்கமுடியாது. மேலும் தமிழ் மக்களை தேசிய இனமாக அங்கீகரித்து, சுயநிர்ணய உரிமையை உறுதிசெய்யக்கூடிய விதத்தில், சமஷ்டி அடிப்படையிலான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்குவது குறித்து இதயசுத்தியுடன் பேசுவதற்கு ஜனாதிபதி எம்மை அழைத்தால், அப்பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்கு தமிழரசுக்கட்சி தயாராக இருக்கின்றது. அத்தோடு ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் ஜனாதிபதி ஆற்றிய உரை தமிழ்மக்களின் எண்ணங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும் எனவும், அது எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்” எனவும் அவர் தெரிவித்தார்.
5 ஆயிரம் தந்தால் பரீட்சை பெறுபேறு… மாணவனிடம் டீல் போட்ட கிளிநொச்சி பாடசாலை நிர்வாகம்!
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த பழைய மாணவன் தனது கல்வி பொதுத் தர உயர்தர பரீட்சை பெறுபேற்றுப் பத்திரத்தை கல்லூரியில் பெறச்சென்றுள்ளார். இன் நிலையில் குறித்த பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஆயுட்காலச் சந்தாவாக ரூபா 5,000 செலுத்தி உறுப்பினரால் மட்டுமே பரிட்சை பெறுபேற்றுப் பத்திரத்தை வழங்க முடியும் என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவ் விடயம் தொடர்பில் கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாள் காயத்திரியை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை என அவ் மாணவன் மேலும் தெரிவித்துள்ளார்.
கடல் மார்க்கமாக பறவைகள் மற்றும் ஊர்வன கடத்தல்!
சட்டவிரோதமான முறையில் பறவைகள் மற்றும் ஊர்வனவற்றை கடல் வழியாக கடத்திய ஐந்து சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். பல நாள் மீன்பிடி படகைப் பயன்படுத்தி இவர்கள் இந்தக் கடத்தலை மேற்கொண்டுள்ளதாகவும், குறித்த படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கடத்தல் தொடர்பில் கடற்படை புலனாய்வு பிரிவினரின் நீண்டகால விசாரணையின் பலனாக, சுரக்ஷா கப்பலினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் தென்கடலில் பயணித்த இந்த பலநாள் மீன்பிடி படகு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது, குறித்த பலநாள் மீன்ப்பிடி படகில் இருந்து 13 அரியவகை மலைப்பாம்புகள், கிளிகள், ஆமைகள், உடும்பு உள்ளிட்ட பறவைகள் மற்றும் ஊர்வன கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஐந்து சந்தேகநபர்கள் படகில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடையைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த கப்பல் நீர்கொழும்பில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்டு கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கடற்படையினர் மேற்கொண்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட பறவைகள் மற்றும் ஊர்வன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹிக்கடுவை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட ஐந்து மீனவர்களும், படகும் மேலதிக விசாரணைக்காக வன பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சொத்துக்களை அழித்த குற்றச்சாட்டில் எம்.பி ஒருவரை கைது செய்ய நீதிமன்றம் பகிரங்க பிடியாணை.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமான திருமதி அயோனா விமலரத்ன, கற்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளார். கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருச்சநம்பிட்டியை தளமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனமொன்று புத்தளம் நீதவான் நீதிமன்றில் பாராளுமன்ற உறுப்பினரை பொறுப்புக்கூறும் வழக்கை விசாரித்த போதே நீதவான் இந்த உத்தரவை வழங்கினார். இதற்கு முன்னரும், பாராளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, உறுப்பினர் சார்பில் சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடத்திற்குள் நுழைந்து சொத்துக்களை அழித்த குற்றச்சாட்டு தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்க்கு எதிராக கற்பிட்டி பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனேடிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிளுடன் விசேட சந்திப்பை மேற்கொண்ட கபே அமைப்பு.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் ( CaFFE) மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகராலய அரசியல் பிரிவு பிரதிநிதிகளுடன் அண்மையில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. கணேடிய உயர்ஸ்தானிகராலய இரண்டாவது செயலாளர் (அரசியல்) பேட்ரிக் பிக்கரிங் மற்றும் அரசியல் பிரிவு பொறுப்பாளர் .ஜி.சாஹித்யனன் ஆகியோர் இராஜகிரியவில் உள்ள கபே தலைமை அலுவலகத்தில் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். தற்போதைய அரசியல் நிலவரம், எதிர்வரவிருக்கும் தேர்தலுக்கான தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைககள், கடந்தகால தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் வாக்காளர்கள் அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் மற்றும் அரசியலில் பெண்கள் பங்கேற்பு போன்றவற்றை உள்ளடக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது. கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் கபே குழுவுடனான கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கினார். இந்த கலந்துரையாடலில் கபே நிர்வாக பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ஷவும் கலந்து கொண்டார்.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதியை விரைவில் அறிவிக்க நடவடிக்கை.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான திகதி இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (A.M.A.L. Rathnayakke) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “அரசியல் அமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி தேர்தல், ஒரு ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர், மற்றும் இரண்டு மாதங்களுக்குள் ஒரு திகதியில் நடத்தப்பட வேண்டும். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) பதவிக்காலம், 2024 நவம்பர் 18ஆம் திகதியுடன் முடிவடைகிறது. எனவே, ஒக்டோபர் 18ஆம் திகதிக்குள்ளான காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.அதேவேளை, வேட்புமனுக்கள், வேட்பாளர்களிடமிருந்து 16 நாட்களுக்கு குறையாத மற்றும் 21 நாட்களுக்கு மிகாமல் ஒரு நாளில் ஏற்று கொள்ளப்படும். அதேவேளை, வேட்புமனுக்கள் வேட்பாளர்களிடமிருந்து 16 நாட்களுக்கு குறையாத மற்றும் 21 நாட்களுக்கு அதிகரிக்காமல் ஒரு நாளில் ஏற்று கொள்ளப்படும். அதற்குப் பிறகு, நான்கு அல்லது ஆறு வாரங்களுக்கு முன் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். இந்நிலையில், தேர்தலுக்கான ஆயத்த நடவடிக்கைகளில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக, பொலிஸ் மா அதிபர், தபால் மா அதிபர் மற்றும் அரச அச்சக அதிகாரி ஆகியோருடனான கூட்டத்திற்கு ஆணைக்குழு இன்று (09) அழைப்பு விடுத்துள்ளது. இதன்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குச் சீட்டுகள் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்கள், தபால் மூலம் வாக்களிப்பு மற்றும் வாக்கு சீட்டுக்களை அச்சிடுவது குறித்து கலந்துரையாடப்படும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத தாக்குதல் – 5 இராணுவத்தினர் பலி.
ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் மச்சேதி பகுதியில் இந்திய ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதோடு, 6 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கத்துவா நகரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் பத்னோட்டா கிராமத்தில் ராணுவத்தினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த போது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முதலில் கையெறி குண்டு வீசிய பயங்கரவாதிகள் பின் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்திய போதிலும், பயங்கரவாதிகள் அருகாமையில் உள்ள காட்டின் வழியே தப்பிச் சென்றுள்ளனர். மேலும், சில பகுதிகளில் ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் கூடுதல் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக இந்திய இராணுவம் அறிவித்துள்ளது.
தன்னை காப்பாற்றியவர்களுக்கு கும்பிட்டு நன்றி தெரிவித்த யானை.
அனுராதபுரத்தில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த காட்டு யானை 5 மணித்தியால நடவடிக்கையின் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. கெபத்திகொல்லேவ, கிரிகெட்டுவெவ பிரதேசத்தில் தனியார் காணியில் உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்த காட்டு யானை 5 மணித்தியால நடவடிக்கையின் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. கஹட்டகஸ்திகிலிய வனஜீவராசிகள் காரியாலயத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யானையை மீட்டு பத்திரமாக காட்டுக்குள் விடுவித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு இந்த காட்டு யானை கிணற்றில் விழுந்துள்ளது. கஹட்டகஸ்திகிலிய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள், கெபத்திகொல்லேவ பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கிராமவாசிகள் சுமார் 40 அடி கிணற்றிற்குள் விழுந்த யானையை பேக்கோ இயந்திரம் மூலம் மீட்டுள்ளனர். அதன்பின், கிணற்றில் இருந்து வெளியே வந்த காட்டு யானை, கிட்டதட்ட 5 நிமிடங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கும்பிட்டுவிட்டு அமைதியாக வனப்பகுதிக்கு சென்றது. சுமார் 12 அடி உயரம் கொண்ட இந்த காட்டு யானை தொடர்ந்து கிராமத்தை தாக்கி வருவதாக கிராம மக்கள் தெரிவித்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
‘இணைய வசதி இலவசம்’ என வரும் குறுஞ்செய்திகளில் ஆபத்து..! மக்களுக்கு எச்சரிக்கை.
அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் இலவச இணைய இணைப்புகளை வழங்குவதாகக் தெரிவித்து அலைபேசிகளுக்கு வரும் குறுஞ் செய்திகளை அணுகுவதன் மூலம் சமூக ஊடக கணக்குகள் மற்றும் மொபைல் போன் தரவுகளை மற்ற தரப்பினருக்கு அனுப்ப முடியும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்தார். குறுஞ்செய்திகள், வாட்ஸ்அப், மெசஞ்சர் மற்றும் தொலைபேசிக்கு ஒரு சாதாரண குறுஞ்செய்தி மூலம் இலவச டேட்டாவைப் பெற முடியும் என இந்நாட்களில் செய்தி அனுப்பப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். மேலும், இவ்வாறான இணைப்புகளில் இணைந்து தமது தரவுகளை வேறு தரப்பினர் பெற்றுக் கொள்வதாக வழமையான முறைப்பாடுகள் காணப்படுவதாகத் தெரிவித்த பணிப்பாளர், அவ்வாறான இணைப்புகளைத் தவிர்க்குமாறு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.