போராட்டத்தில் இறங்கிய ஆசிரியர்கள், அதிபர்கள் – மாணவர்கள் பெரும் சிரமம்!
சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக ஆசிரியர்கள், அதிபர்கள் முன்னெடுக்கும் சுகவீன விடுமுறைப்போராட்டத்தினால் நாடளாவிய ரீதியில் கல்வி நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் வரவுகள் குறைவான நிலையிலேயே காணப்படுகின்றது. சில பாடசாலைகளில் இன்றைய தினம் அதிபர்கள், ஆசிரியர்கள் வருகைதந்துள்ள நிலையில் மாணவர்களின் வரவுகள் குறைவாக காணப்படுகின்றது. பெரும்பாலான பாடசாலைகளில் ஆசிரியர்களின் வரவின்மை காரணமாக பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்கள் திரும்பிச்சென்றதை காணமுடிந்தது. பாடசாலைகளுக்கு முச்சக்கர வண்டிகளிலும் பாடசாலை வாகனங்களிலும் வருகைதந்த மாணவர்கள் ஆசிரியர்கள் வருகைதராத காரணத்தினால் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கியதையும் காணமுடிந்தது.
அமெரிக்காவுக்கு அனுப்புவதாக தெரிவித்து பண மோசடி செய்த பெண்!
அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த பெண்ணொருவர் வவுனியா பிரதேசத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா போகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது சகோதரியின் ஊடாக அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாக கூறி 10 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு உறுதியளித்தப்படி வேலை வாங்கித் தரவில்லை என கம்பஹா பிரதேசவாசி ஒருவர் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவில் அண்மையில் முறைப்பாடு செய்திருந்தார். சந்தேகநபரான பெண் மீது பணியகத்திற்கு 5 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து, அதன்படி செயற்பட்ட விசாரணை அதிகாரிகள் குறித்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று கைது செய்துள்ளனர். முறைப்பாடுகளின் படி, பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் உண்மைகளை அறிக்கையிட்டு, குறித்த பெண்ணுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். விசாரணையின் போது, அவர் நாட்டில் உள்ள ஒரு பிரபலமான காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகின்றமை தெரியவந்துள்ளதாக பணியக அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இம்மாதம் 7ஆம் திகதி வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல்.
யாழ்ப்பாணத்தில் உள்ள மரக்காளை ஒன்றின் உரிமையாளரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளனர். ஓட்டுமடம் பகுதியில் உள்ள மரக்காளை ஒன்றின் உரிமையாளரின் வீட்டினுள், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை அத்துமீறி நுழைந்த கும்பலே வன்முறையில் ஈடுப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த உரிமையாளரின் மகன், யாழில் இயங்கிய வன்முறை கும்பலுடன் முன்னர் சேர்ந்து இயங்கிய நபர் எனவும், தற்போது பிரான்ஸ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் கடமையேற்பு!
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர கோபாலமூர்த்தி ரஜீவ் இன்றையதினம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். சுகாதார அமைச்சின் கடிதத்திற்கு அமைய, வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரன, யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் முன்னிலையில் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகராக இருந்த ராமநாதன் அர்ச்சுனாவை மாற்றக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் பதில் வைத்திய அத்தியட்சகருக்கு ஆதரவாக தென்மராட்சி பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களின் ஏற்பாட்டில் நேற்று பாரிய போராட்டம் நடாத்தப்பட்ட நிலையில், பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா சுகவீன விடுமுறை என தெரிவித்து கொழும்புக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைனின் பல நகரங்கள் மீது ரஸ்யா தாக்குதல் – 37 பேர் பலி
உக்ரைனின் தலைநகரில் உள்ள சிறுவர் வைத்தியசாலை உட்பட பல நகரங்களின் மீது ரஸ்யா மேற்கொண்ட தாக்குதலில் 30க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனின் பல நகரங்களை இலக்குவைத்து வழமைக்கு மாறான பகல்நேர தாக்குதல் இடம்பெற்றுள்ளது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது உக்ரைன் தலைநகரில் உள்ள பிரதான சிறுவர் மருத்துவமனையான ஒக்மாடிட் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையிலிருந்து புகைமண்டலம் வெளியாவதையும் இடிபாடுகளிற்குள் தேடுதல்கள் இடம்பெறுவதையும் தாக்குதல்கள் இடம்பெற்றவேளை சிறுவர்களை எவ்வாறு காப்பாற்ற முயன்றனர் என்பதை மருத்துவமனையின் பணியாளர்கள் விபரிப்பதையும் காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. நான் கடும் அச்சமடைந்தேன் ஆனால் உயிர் தப்பிவிட்டேன் அது பாரிய சத்தம் ஜன்னல்கள் சிதறின என மருத்துவமனையின் தாதியொருவர் தெரிவித்துள்ளார். எச்சரிக்கை சமிக்ஞை ஒலித்ததும் சிறுவர்களை பாதுகாப்பான இடங்களிற்கு கொண்டு சென்றோம் முழுவதும் புகைமண்டலமாக காணப்பட்டது சுவாசிக்க முடியவில்லை மருத்துவர்கள் குண்டு சிதறல்களால் காயமடைந்தனர் கதவுகளும் ஜன்னல்களும் உடைந்து விழுந்த ஒரு தாதிகடும் காயங்களிற்குள்ளானார்,என அந்த தாதி தெரிவித்துள்ளார் எனது கைகள் இன்னமும் நடுங்குகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது 11 வயது மகன் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டான் என தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய பாராளுமன்ற உறுப்பினர் பதவியேற்பு!
திருகோணமலை மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கதிரவேலு சண்முகம் குகதாசன் சற்றுமுன்னர் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் மறைவை அடுத்து கடந்த ஜூலை 02 ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டிருந்தார். பாராளுமன்ற அமர்வு இன்று (09) காலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இவர் பதவியேற்றார். திருகோணமலை, திரியாயைப் பிறப்பிடமாகக் கொண்ட குகதாசன், நீண்ட காலம் கனடாவில் வசித்து வந்தார். 2020 முதல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவராகப் பணியாற்றுகிறார். 2020 பாராளுமன்றத் தேர்தலில் குகதாசன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 16,770 வாக்குகளைப் பெற்றார். இத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு உறுப்பினரையே தமிழரசுக் கட்சி பெற்றது. இரா. சம்பந்தனுக்கு அடுத்து அதிக வாக்குகளை பெற்ற அடிப்படையில் இவர் சம்பந்தனின் மறைவை அடுத்து பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்.
25000/- கோரி இன்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள்!
25,000 ரூபா கொடுப்பனவை கோரி சுமார் 200 அரச சேவை தொழிற்சங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்று (09) முன்னெடுக்கப்படுள்ளது. நிறைவேற்று தர உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவை ஏனைய அனைத்து ஊழியர்களுக்கும் வழங்குமாறு கோரி அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்றும் (08) இன்றும் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச நிறுவனங்களின் ஊழியர்கள் நேற்றைய தினம் பணிக்கு சமூகமளிக்காததால், அரச நிறுவனங்களின் அன்றாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. தமது கோரிக்கைக்கு இதுவரை அதிகாரிகள் உரிய பதில் அளிக்காததால், இன்றும் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்க சம்மேளனத்தின் இணை அழைப்பாளர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்தார். அரச ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்புடன், தபால் தொழிற்சங்கங்களும் நேற்று நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறை அறிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று நள்ளிரவு வரை பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என ஒன்றிணைந்த தபால் சேவை சங்கத்தின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார். இதனிடையே, அரச ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக இன்று சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு ஆசிரியர்- அதிபர் சங்கங்களும் தீர்மானித்துள்ளன. தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு அரச ஊழியர்களின் கோரிக்கைகளை வழங்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரச நிறுவன பிரதானிகளுக்கு அழைப்பு!
அரச அச்சகமா அதிபர், காவல்துறை மா அதிபர் மற்றும் அஞ்சல் மா அதிபர் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதானிகள் சிலர் இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயங்கள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் எதிர்வரும் 17 ஆம் திகதியின் பின்னர், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குக் கிடைக்கப் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்.
2024 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பான மக்களின் வாய்மூல கருத்துக் கோரல்கள் கோரப்படவுள்ளன. இந்நிகழ்வு இன்று (09) இடம்பெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (Public Utilities Commission) தெரிவித்துள்ளது. பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நாளை முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 4.30 வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பான எழுத்து மூலக் கருத்துக் கோரல்கள் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளன. கட்டண திருத்தம் தொடர்பான ஆணைக்குழுவின் இறுதி முடிவு ஜூலை 15 ஆம் திகதி பொதுமக்களின் ஆலோசனைக்குப் பின்னர் வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.
இலங்கையிலிருந்து (Sri Lanka) தொழிலுக்காக வெளிநாட்டிற்கு சென்று நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துபவர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படுவார்கள் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று (08) நடைபெற்ற இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணிக்குச் செல்லும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு விமானச் சீட்டு வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் “நாங்கள் முதல் கட்டமாக இஸ்ரேலுக்கு (Israel) அனுப்பிய பணிக் குழுக்களின் நெருக்கடிகள் காரணமாக, இஸ்ரேலிய விவசாயத் துறையில் வேலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. இலங்கையில் நடத்துவதைப் போன்று எம்மவர்களின் சிலர் அங்கு போராட்டம் நடத்தியதால் இவ்விளைவு ஏற்பட்டது. எனவே நாம் தொடர்ந்தும் இஸ்ரேலிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் எங்களுக்கு மீண்டும் விவசாயத் துறையில் பணியாளர்களை அனுப்ப வாய்ப்பு கிடைத்துள்ளது. நாளை இஸ்ரேலில் விவசாயத்துறையில் பணிக்காக செல்லும் 43 குழுவினர் சிறந்த முறையில் பணியாற்றுவதன் மூலம் இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்பு நிமிர்த்தம் செல்லக் காத்திருக்கும் 8000 பேருக்கு வாய்ப்புக்கள் கிடைக்கும். அதுமட்டுமின்றி இன்று எங்களுக்கு ஒரு நற் செய்தி கிடைத்துள்ளது. அதாவது, ஹோட்டல் பிரிவுக்கு திறமையான தொழிலாளர்களாக அனுப்ப எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. அவை தொடர்பான ஒப்பந்தங்கள் கூட பெறப்பட்டுள்ளன. வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேல் சென்று முறைகேடாக நடப்பவர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து அவர்கள் மீண்டும் வெளிநாட்டிற்கு செல்ல முடியாவாறு கறுப்புபட்டியலில் இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம்“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.