நாளை முதல் 17 நாட்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு!
2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த எசல பண்டிகை நாளை ஆரம்பமாகவுள்ளதுடன், இதன் காரணமாக கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 17 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூலை 22ஆம் திகதி வரை அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கதிர்காமம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை முதல் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன
முல்லைத்தீவு அக்கராயன் குளத்துக்கு அருகில் ஆணின் சடலம் மீட்பு…!
முல்லைத்தீவு ஐயங்கன் குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதியை அண்மித்துள்ள பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று(05) மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான அக்கராயன் குளத்தின் பின் பகுதியிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக ஐயங்கன் குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒற்றை ஆட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்க எத்தனிக்கும் ரணில்.
ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் செயற்பாடுகளை ஜனாதிபதி ரணில் முன்னெடுத்து வருகிறார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “ஜனாதிபதி ரணில் சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியுதவியை பெற்றுக்கொள்வதற்காக சலுகைகளுக்கு விலைபோகக்கூடியவர்களை வைத்துக்கொண்டு பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்த உண்மைக்கு புறம்பான பிரசாரங்களை இந்திய மேற்குத்தரப்புக்கள் தெரிவித்து வருகிறார். ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை எந்த வகையிலும் நம்பிக்கை தரவில்லை, நாட்டை பொருளாதார வளர்ச்சியில் முன்னோக்கி கொண்டு செல்வதாக கதைகளை சொல்லி மக்களை ஏமாற்றி மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்த நாட்டில் 75 வருடமாக காணப்படும் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். மேலும் ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் செயற்பாடுகளை ரணில் முன்னெடுத்து வருகிறார்” என தெரிவித்தார்.
மைத்திரி – தயாசிறி உறவில் புதிய திருப்பம்: அவசரமாக விடுக்கப்பட்ட கோரிக்கை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டமையை எதிர்த்து அவர் தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திவந்த மேல் நீதிமன்றம், சுதந்திரக் கட்சியின் தீர்மானத்துக்கு நேற்று வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்தது. இதன் காரணமாக சு.கவின் பொதுச் செயலாளராக பணியாற்றும் அதிகாரம் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளதுடன், இன்று வெள்ளிக்கிழமை கட்சியின் தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்கவும் சென்றிருந்தார். என்றாலும், பொலிஸார் இவரை கட்சியின் அலுவலகத்துக்குள் உள்நுழைய விடாது தடுத்தனர். இதனால் கட்சியின் அலுவலகத்துக்கு முன்பாக தயாசிறி ஜயசேகர பதவியேற்றிருந்தார். இந்த நிலையில் தயாசிறி ஜயசேகரவுக்கு முன்னாள் ஜனாதிபதியும் சு.கவின் முன்னாள் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, வாழ்த்துத் தெரிவித்துள்ளடன், ஒன்றாக பயணிப்பதற்கான அழைப்பையும் விடுத்துள்ளார். தயாசிறி ஜயசேகரவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயற்பட முடியும் எனவும் கூறியுள்ளார். கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகளை சுமத்தி தயாசிறி ஜயசேகரவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியிருந்த மைத்திரிபால சிறிசேன, தற்போது மீண்டும் அவருடன் கைகோர்த்து செயல்படும் வகையில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பானது சுயநலம் கொண்டதாகும் என சு.கவின் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
வரி அடையாள இலக்கம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்.
வரி அடையாள இலக்கம் பெற்றவர்களுக்கான முக்கிய தகவல் ஒன்றை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) வெளியிட்டுள்ளார். அதன் போது, வரி அடையாள இலக்கம் (TIN) பெற்றவர்கள் வரி செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் இருந்து கடிதங்கள் அல்லது குறுஞ்செய்திகளைப் பெற்றால், தாங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறாதவர்களாக இருந்தால் அதனை அறிவித்து வரி செலுத்துவதை தவிர்க்கலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அருகில் உள்ள உள்நாட்டு இறைவரி திணைக்கள பிராந்திய அலுவலகத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பபிட்டுள்ளார். இது வரையில், 23 லட்சம் பேருக்கு வரி அடையாள இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜூன் மாதத்தில் மட்டும் 13 லட்சம் பேர் வரி இலக்கத்தை பெற்றுள்ளதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறியுள்ளார். இதேவேளை, ஜூலை மாத இறுதிக்குள் வரி இலக்கம் வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 73 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவை சைக்கிளில் சுற்றி வரும் இலங்கை ஆசிரியருக்கு ஐதரபாத்தில் இளைஞர்கள் வரவேற்பு.
இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்தவர் பிரதாபன் தர்மலிங்கம் (வயது 47) இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுற்றுச்சூழல் மீதும் மரங்கள் வளர்ப்பதிலும் அதிக ஈடுபாடு கொண்டவர் ஆவார். இவர் பூமி வெப்பமயமாவதை தடுக்கவும், மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கடந்த ஆண்டு ஜுலை மாதம் தமிழகம் முழுவதும் சைக்கிளில் 3000 கிலோமீட்டர் சுற்றுப்பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மரங்கள் வளர்ப்பது குறித்தும், பெண் பிள்ளைகள் பெண்கள் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி இந்தியா முழுவதும் சுமார் 15 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை 120 நாட்களில் சைக்கிளில் சுற்றி வர முடிவு செய்து, கடந்த ஜுலை 24 தேதி தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் துவக்கி வைத்து அவரது பயணம் வெற்றி பெற வாழ்த்துகள் தெரிவித்தார். பின்னர் பிரதாப தர்மலிங்கம் பார் கவுன்சிலில் இருந்து தனது பயணத்தை துவக்கினார். இந்த நிலையில் கடந்த ஆறு நாட்களாக தனது சைக்கிள் பயணத்தில் அவர் இன்று தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சென்றார். அங்குள்ள சார்மினார் சதுக்கம் அருகே சென்றபோது அங்குள்ள இளைஞர்கள் இவரின் விழிப்புணர்வு பயணத்தை அறிந்து அவருக்கு வரவேற்றனர். மேலும் அவருக்கு சால்வை அணிவித்து அவரை பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தனர்.
பிரிட்டன் தேர்தலில் வெற்றிபெற்ற ஈழத் தமிழ் பெண்; கிடைக்கவுள்ள பெருமை!
பிரிட்டன் தேர்தலில் ஈழத் தமிழ் பின்ணணியை கொண்ட உமாகுமரன் (Uma Kumaran) வெற்றிபெற்றுள்ளார். அதன்படி தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்ட உமாகுமரன் (Uma Kumaran) , லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று பெரும் வெற்றியடைந்துள்ள நிலையில், பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் பெண் அமைச்சர் என்ற பெருமையையும் (Uma Kumaran) அதேவேளை உமா குமரனை (Uma Kumaran) எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான கேன் பிளாக்வெல், 3,144 வாக்குகள் மட்டுமே பெற்று நான்காவது இடத்தில் உள்ளார். இந்த வெற்றிமூலம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கபோகும் முதலாவது ஈழத் தமிழ் பின்னணிகொண்ட பெண் என்ற பெருமை அவருக்கு கிட்டும். உமாகுமரன் ஸ்டிரபோர்ட் அன்ட் போவின் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை மூலம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும் என உமாகுமரன் (Uma Kumaran) தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தார். உலக அரங்கில் நீதிக்கான எங்கள் வேண்டுகோள்களை நாம் வலுப்படுத்தவேண்டும்- பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம் எனவும் உமாகுமரன் (Uma Kumaran) குறிப்பிட்டிருந்தார். அதேவேளை 2024 பிரிட்டன் பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றிப் பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரிட்டனின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer)பதவியேற்கவுள்ளார்.
பதுளையில் கோர விபத்து: சம்பவ இடத்திலேயே பலியான நால்வர்.
பதுளை – சொரனாதோட்டை வீதியில் லொறியொன்று வீதியின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (05.07.2024) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதோடு அவர்கள் சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதிகளில் பயணிகள் தங்குமிடங்களை அமைப்பதற்காக மொனராகலையில் இருந்து வந்தவர்களே இந்த கோர விபத்தில் சிக்கியுள்ளனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 6 கோடி மதிப்பிலான 35 நாய்கள்…!
பொலிஸ் திணைக்களத்திற்காக நெதர்லாந்தில் இருந்து 5 கோடி 80 இலட்சம் ரூபா பெறுமதியான 35 நாய்கள் இன்று(05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த நாய்களில் 13 பெல்ஜியன் மாலினோயிஸ் நாய்கள், 12 ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் மற்றும் 10 ஆங்கில ஸ்பானியல் நாய்கள் அடங்குகின்றன. அவை நெதர்லாந்தில் உள்ள K.-10 Working Dog என்ற தனியார் விலங்கு பண்ணையில் இருந்து வாங்கப்பட்டுள்ளன. இவ்வாறு இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நாய்களில் 21 பெண் நாய்களும், 14 ஆண் நாய்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நாய்களில் இரண்டு ஆங்கில ஸ்பானியல் பெண்கள் ஏற்கனவே கர்ப்பமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நாய்கள் விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலைய விலங்குகள் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள கால்நடை வைத்திய அதிகாரிகளினால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், நாய்களின் பயிற்சியாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான புதிய கடன் தொடர்பில் ஜப்பானின் நிபந்தனை.
இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதை பொறுத்தே, இலங்கைக்கு எந்தவொரு புதிய கடன்கள் குறித்தும் பரிசீலிக்கப்படும் என்ற நிலைப்பாட்டை ஜப்பான் (Japan) எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருதரப்புக் கடன் மறுசீரமைப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்தே ஜப்பான் இவ்வாறு தீர்மானித்துள்ளது. மேலும், ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இலங்கையில் இடைநிறுத்தப்பட்ட ஜப்பானின் அனைத்து திட்டங்களையும் மீள ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடினார். எனினும், ஆவணங்கள் மற்றும் ஏனைய பணிகள் முடிந்ததும் இந்தத் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க ஜப்பான் ஆர்வமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கம் உட்பட ஜப்பான், சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பான ஜெய்க்காவின் கீழ் 12 திட்டங்களை நிறுத்தியுள்ளது. எவ்வாறாயினும், தடைப்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைபடுத்துவது குறித்து நம்பிக்கை கொள்ளும் வரை இலங்கையில் புதிய கடன் திட்டங்களை ஆரம்பிக்க ஜப்பான் தயாராக இல்லை என்று தெரிய வருகிறது. முன்னதாக, கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) அரசாங்கத்தால் இரத்து செய்யப்பட்ட இலகு தொடருந்து திட்டமே (எல்.ஆர்.டி) ஜப்பானுடன் கருத்து வேறுபாடுகளுக்கு காரணமாக அமைந்திருந்தது. 2020இல் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தொடருந்து திட்டத்தில் இருந்து இலங்கை வெளியேறியது. எனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), ஜப்பானிய உதவியுடன் இந்த திட்டத்தை ஆரம்பிக்க விருப்பம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.