Search
Close this search box.

கெஹெலியவின் மனைவி மற்றும் மகள்களின் வங்கி கணக்குகள் முடக்கம்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் மகள்களின் ஒன்பது கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 16 நிலையான வைப்புக்கணக்குகள் மற்றும் மூன்று ஆயுள் காப்புறுதிப்பத்திரங்களை முடக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் காரணமாக தனியார் வங்கியொன்றின் கணக்குகள் மற்றும் காப்புறுதிகள் தடை செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச்சட்டத்தின் 53(1) பிரிவின்படி பணமோசடி குற்றத்தின் கீழ் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, தடை உத்தரவை மேலும் நீட்டிக்கவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவும் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதேவேளை, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் ஒப்படைக்கப்பட்ட கார் மற்றும்  உத்தியோகபூர்வ வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் ஆணைக்குழு அண்மையில் விசாரணைகளை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கண்டியில் பாரிய தீ விபத்து: மூடப்பட்ட பிரதான வீதி.

கண்டி (Kandy) அக்குரணையில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் மாத்தளை – கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தற்போது, அப்பகுதியில் நான்கு கட்டிடங்களுக்கு தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கண்டி மாநகர சபையின் தீயணைப்பு படை தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதேவேளை, தீ பரவியதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலை நடாத்த இது உகந்த நேரம் அல்ல…! விக்னேஸ்வரன் எம்.பி சுட்டிக்காட்டு…!

ஜனாதிபதி தேர்தலை பிற்போட வேண்டும் என்பதே எனது கருத்து என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய அரசாங்கம் அமைப்பது நாட்டுக்கு நல்லது. ஆனால் தமிழ்க் கட்சிகள் தேசிய அரசாங்கத்தில் இணைவது பொருத்தமானதல்ல. தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கக்கூடிய தேசிய அரசாங்கத்தை தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைக்க வேண்டும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அத்தோடு இப்போது தேர்தல் நடைபெற்றால் எந்த வேட்பாளரும் 50% வாக்குகளைப் பெற முடியாது, பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு நிலையான ஆட்சி அமைய வேண்டும். ஆனால்,தற்பொழுது தேர்தல் நடைபெற்று குறுகிய காலத்தில் ஆட்சி மாறினால் பாரிய பிரச்சினை ஏற்படும். இந்த நாட்டில் இன்னொரு பிரச்சினை ஏற்பட்டால், நாட்டை மீட்க முடியாது. மக்களின் பாதுகாப்புத் தொடர்பிலும் நாம் சிந்திக்க வேண்டும். ஆகவே, தேர்தலை பிற்போட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கொழும்பில் உயிரிழந்த மாணவர்கள் – தொலைபேசியில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்

கொழும்பு அல்டெயார் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயது மாணவனும் மாணவியும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் இருவரே உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் சடலங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் 03வது மாடியில் குளிரூட்டிகள் பொருத்தப்பட்டுள்ள இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதுடன், இயந்திரங்களில் விழுந்துள்ளதாக உடல்கள் சிதைவடைந்திருந்தாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாணவனும் மாணவியும் நெருங்கிய நண்பர்கள் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும், குறித்த மாணவி உயரமான இடங்களில் புகைப்படம் எடுப்பதில் நாட்டம் கொண்டவர் எனவும், அவரது தொலைபேசியில் இதுபோன்ற பல புகைப்படங்கள் இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். அதன்படி, அவ்வாறான புகைப்படங்களை எடுக்க முற்பட்ட போது இருவரும் 67வது மாடியில் இருந்து கீழே விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எவ்வாறாயினும், விபத்து ஏற்படுவதற்கு முன்னர் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. அல்டெயார் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பிற்கு செல்வதற்கு அங்கு வசித்த அவர்களது நெருங்கிய நண்பர் ஒருவரால் அனுமதி வழங்கப்பட்டது. அந்த நண்பர் காரணமாக மாணவனும் மாணவியும் அடிக்கடி குடியிருப்புத் தொகுதிக்கு வந்து செல்லும் நிலையில், அன்றைய தினம் அங்கு வருவதை பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக மாணவன் மற்றும் மாணவியின் தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கொம்பனித் தெரு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கபில விஜேமான்ன தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவர்களது சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, சம்பவத்தன்று மாணவி பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக வெளியான செய்திகள் பொய்யானவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சமூக வலைத்தளங்களுக்கு 6 நாட்கள் தடை!

பெரும்பாலான பாகிஸ்தான் மக்கள் வட்ஸ்எப், பேஸ்புக், டிக்டொக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் போன்ற  சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஜூலை 13-ஆம் திகதி முதல் 18-ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு வெறுப்பு பேச்சு போன்றவற்றை தவிர்க்க பாகிஸதானில் தடைவிதிக்கப் படுகிறது. முகரம் பண்டியை முன்னிட்டு ஜூலை 13-ஆம் திகதி முதல் ஜூலை 18-ஆம் திகதி வரை (முகரம் மாதம் 6-ஆம் திகதி முதல் 11-ஆம் திகதி வரை) பஞ்சாப் மாகாணத்தில் தடைவிதிக்க வேண்டும் அம்மாகாண முதல்வர் மரியம் நவாஸின் சட்டம் ஒழுங்கிற்கான அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது. வெறுப்பு பேச்சு, வன்முறை போன்ற சம்பவங்களை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக பஞ்சாப் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் அரசு ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான மத்திய அரசுக்கு இது தொடர்பாக வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய அரசு தடைவிதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமை ஜெனரல் ஆசிம் முனிர் ஏற்கனவே, சமூக வலைத்தளங்களை தீய மீடியா என குறிப்பிட்டள்ளார். அவற்றை டிஜிட்டில் பயங்கரவாதம் என அழைத்த அவர், அதை எதிர்த்து போராடுவது அவசியம் என வலியுறுத்தியுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் தேர்தல் முடிவுகள் மாற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் எக்ஸ் தளம் முடக்கப்பட்டது. ஏப்ரல் 2022-ல் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வெளியேற்றப்பட்டதில் இருந்து இராணுவம் மற்றும் அரசாங்கம் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் மாகாணத்தில் சுமார் 12 கோடி மக்கள் வசித்து வருகிறன்றமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் திடீரென களமிறக்கப்பட்ட இராணுவத்தினர்…!

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ சுற்றிவளைப்புக்களில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள கல்லாறு பகுதியில் இன்று(05) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இந் நடவடிக்கையினை பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்டனர். இதன்போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக ஐஸ் போதைப்பொருள், மோட்டார் சைக்கிள் ஒன்று உள்ளிட்டவை மீட்கப்பட்டதுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பொலிஸ் விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

எரிபொருளைத் திருடி விற்கும் கும்பல் – இலங்கையில் பாரிய மோசடி சுற்றிவளைப்பு

கெரவலபிட்டிய  – யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் உலை எண்ணெய் திருடப்பட்டு, அவற்றை வேறு நிறுவனங்களுக்கு விற்கும் மோசடியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. கொலன்னாவ பெட்ரோலிய சேமிப்பு முனையத்தின் புலனாய்வுப் பிரிவு நேற்று (04) இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சுற்றிவளைப்பின் போது, ​​திருடப்பட்ட 33,000 லீற்றர் உலை எண்ணெயுடன் கொள்கலன் வாகனம் மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது பெரிய அனல் மின் நிலையமான கெரவலப்பிட்டிய – யுகதனவி மின் உற்பத்தி நிலையம் 300 மெகாவோட் கொள்ளளவை தேசிய அமைப்பிற்கு அனுப்புகிறது. இந்த ஆலையில் இருந்து மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உலை எண்ணெயினை திருடும் மோசடிக் கும்பல் பற்றி வத்தளை, போபிட்டிய பிரதேசத்தில் இருந்து தகவல் வெளியாகியிருந்தது. யுகதனவி மின் உற்பத்தி நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் உலை எண்ணெய் வத்தளை, போபிட்டிய பிரதேசத்தில் உள்ள கொள்கலன் வாகன முற்றம் ஒன்றில் சாதுர்யமான முறையில் திருடப்பட்டு வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, கிடைத்த தகவலுக்கு அமைய கொலன்னாவை களஞ்சிய நிலைய புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று பிற்பகல் குறித்த இடத்தை சுற்றிவளைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஆசிரியர் ஒருவருக்கு மிரட்டல் விடுத்த கிராம அலுவலர் பிணையில் விடுதலை.

வவுனியாவில் ஆசிரியர் ஒருவருக்கு போலி முகநூலில் அவதூறை ஏற்படுத்தி தொலைபேசியில் மிரட்டல் விடுத்த கிராம அலுவலர் ஒருவர் கைதாகி நீதிமன்றத்தால் நேற்று வியாழக்கிழமை (04) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வவுனியா வடக்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த தரணிக்குளம் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கிராம அலுவலரின் ஆதரவுடன் இடம்பெற்ற காடழிப்பு தொடர்பில் கிராம அபிவிருத்தி சங்கம் ஊடாக வெளிப்படுத்தியமையால் குறித்த ஆசிரியருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் போலி முகநூலில் அவ் ஆசிரியர் தொடர்பாக தவறான தகவல்கள் பகிரப்பட்டதுடன், தொலைபேசியிலும் ஆசிரியருக்கு அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட குறித்த ஆசிரியர் ஜனாதிபதி செயலகம், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, ஒம்புட்ஸ்மன், மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர் என பலரிடமும் முறையிட்டதுடன், குறித்த சம்பவம் தொடர்பில கணனி பயன்பாட்டு கட்டுப்பாட்டு பிரிவு பொலிசாருக்கும் முறைபாடு செய்திருந்தார். குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்த பொலிசார் குறித்த முகநூல் கிராம அலுவலருடையது என்பதை கண்டறிந்ததுடன் அதனை முடக்கியிருந்தனர். இந்நிலையில் வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் தொலைபேசியில் அச்சுறுத்தியமை மற்றும் போலி முகநூலில் அவதூறை ஏற்படுத்தியமை தொடர்பில் கிராம அலுவலருக்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நேற்றையதினம் வழக்கு விசாரணை இடம்பெற்ற போது மன்றின் கட்டளைக்கு அமைய நீதிமன்ற சிறையில் அடைக்கப்பட்ட கிராம அலுவலர் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டார். அத்துடன் வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப்பொருள்.

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ கடற்கரையில் எண்ணெய் மற்றும் தார் போன்ற அடையாளம் தெரியாத மர்ம பொருள் கரையொதுங்கியுள்ளதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த பொருட்கள் பரிசோதனைக்காக ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. தார் பந்து போன்ற பொருள் என்ன என்பது இன்னும் சரியாக அடையாளம் காணப்படவில்லை என்று செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ஆனால், இது கப்பலில் இருந்து தூக்கி எறியப்பட்ட பொருளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை, கரையோர பாதுகாப்பு திணைக்களம், இலங்கை பொலிஸ் மற்றும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆதரவுடன் நேற்று இந்த எண்ணெய் மற்றும் தார் பொருட்களை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திருமலைக்கு எடுத்து செல்லப்பட்ட சம்பந்தனின் பூதவுடல்: ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியை.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றையதினம் விமானம் மூலம் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனின் பூதவுடலுக்கு நேற்று(04) பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் , அஞ்சலி நிறைவுக்கு வந்து பூதவுடல் அங்கேயே வைக்கப்பட்டது. தந்தை செல்வா கலையரங்கில் இருந்து இன்று காலை கார் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து திருகோணமலைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. திருகோணமலையில் இரண்டு தினங்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியை நடைபெறவுள்ளது.