யாழில் தகாதமுறைக்குட்படுத்தப்பட்ட சிறுமி : 17 வயது சிறுவன் கைது
யாழில் (Jaffna) சிறுமியொருவரை தாகத முறைக்குட்படுத்திய குற்றச்சாட்டில்17 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், 15 வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு தகாதமுறைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு, பாதிக்கப்பட்ட சிறுமி பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில், கைது செய்யப்பட்ட சிறுவனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய வேளை குறித்த சிறுவனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜூலை மாதம் முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ள பொலிஸார்
பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிகளை கைப்பற்றும் நோக்கில் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இரண்டு மாத கால விசேட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் விடுத்துள்ள பணிப்புரையின் பிரகாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு ஆயுதப் படைகளின் துப்பாக்கிகள் பாரிய தடையாக இருப்பதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பொலிஸாரின் உதவியுடன் இந்த விசேட நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளனர். எவ்வாறாயினும், நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதி நடவடிக்கையை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்வி நிலையில் பாதிப்பு: போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள்
சுகயீன விடுமுறையை அறிவித்து நாடு தழுவிய ரீதியில் ஆசிரியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இரண்டாம் தவணை ஆரம்பமான நிலையில், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையானது மாணவர்களின் கல்வி நிலைக்கு பின்னடைவாக அமையும் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (26) ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை கொழும்புக்கு வரவழைத்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நிலவின் மண்,பாறை மாதிரிகளோடு பூமியை வந்தடைந்தது சாங் இ-6 விண்கலம்
சீனாவின் சாங் இ-6 என்கின்ற விண்கலம் நிலவின் தென் துருவத்திலிருந்து மண் மற்றும் பாறையின மாதிரிகளை சேகரிப்பதற்காக அனுப்பப்பட்டது. கடந்த 2ஆம் திகதியன்று இந்த விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இந்த விண்கலம் எய்ட்கென் படுகையில் தரையிறங்கி அங்கே இயந்திரக் கை மற்றும் துளையிடும் கருவியின் மூலம் நிலவின் மண், பாறையின் மாதிரிகளை சேகரித்தது. அத்துடன் நிலவின் மேற்பரப்பு புகைப்படங்கள் சிலவற்றையும் பூமிக்கு அனுப்பியது. இந்நிலையில் தற்போது சாங் இ-6 விண்கலம் மங்கோலியாவிலுள்ள பாலைவனத்தில் தரையிறங்கியுள்ளது. விண்கலத்திலிருந்த நிலவு மாதிரிகளை ஆய்வு கூடத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர் விஞ்ஞானிகள். இதுகுறித்து, விஞ்ஞானிகள் கூறுகையில், “கிரகங்களின் உருவாக்கம் மற்றும் அதன் தன்மை குறித்தும் அறிய இந்த மண் துகள்கள் நிச்சயம் பயன்படும். இந்த வெற்றியானது அனைத்து மனித குலத்துக்கும் சொந்தம்”எனக் கூறியுள்ளனர். இத் திட்டத்தில் பங்கேற்ற விஞ்ஞானிகள் அனைவருக்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
100 பில்லியன் டொலர்களை தாண்டிய அரசாங்க பொதுக்கடன்
2024 நிதியாண்டின் முதல் காலாண்டின் இறுதியில் அரசாங்க பொதுக்கடன் அளவு 100 பில்லியன் டொலர்களை தாண்டியுள்ளது. கடன் தொகை சுமார் 4 பில்லியன் டொலர்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கை நிதியமைச்சின் அறிக்கை தொடர்பிலும் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. உண்மையிலேயே, பொதுக்கடன் அளவு அதிகரித்து விட்டதா எவ்வாறு அதிகரித்தது என்ற கேள்வி பொருண்மிய அவதானிகள் மத்தியில் எழுந்துள்ளன. ”2023 இறுதியில் பொதுத்துறை கடன் = 96,170 மில்லியன் அமெரிக்க டொலர் 2024 மார்ச் மாத இறுதியில் பொதுத்துறை கடன் = 100,184 மில்லியன் அமெரிக்க டொலர் 2024 முதல் காலாண்டில் கடன் அதிகரிப்பு = 4,014 மில்லியன் அமெரிக்க டொலர்” மேற்குறிப்பிட்ட புள்ளிவிபரங்கள் நிதி அமைச்சு மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நான்கு மாத காலப்பகுதிக்குள் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களால் பொதுக்கடன் அளவு அதிகரித்துள்ளது. அப்படியெனில், குறித்த காலப்பகுதியில் புதிதாக கடன் தொகைப் பெற்ப்பட்டதா என்று ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது. எனினும், 2022 இல் இலங்கைத்தீவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா 4 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்கயிருந்து. 2019 ஆம் ஆண்டு தொடக்கம் காணப்பட்ட வரவு செலவு திட்ட பற்றாக்குறையுடன் டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியும் அதிகரித்தமையால் இந்த கடன் தொகை நிலையாக காணப்பட்டு வருவதாக நிதி அமைச்சின் அறிக்கை மறைமுகமாக வெளிப்படுத்துகிறது. பொதுக்கடன் என்பது வெளிநாட்டு கடன் மட்டுமல்ல. அவற்றில் பெரும்பாலானவை உள்நாட்டு வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட கடன்களாகும். கொழும்பில் உள்ள வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்தும் பிரத்தியேகமாகக் கடன்கள் பெறப்படுகின்றன. ஆகவே உள்ளூர் கடன்களில் சிறிய தொகையைத் தவிர, மற்ற கடன்கள் வெளிநாட்டு கடன்கள். வெளிநாடுகளிடம் இருந்து நேரடியாகப் பெறப்பட்ட கடன்களில் பெரும்பாலும் டொலர், யென், யூரோ அல்லது SDR (சர்வதேச நாணய நிதிய நாணயம்) போன்ற வெளிநாட்டு நாணயத்தில் குறிப்பிடப்படும் கடன்களாகும். இவ்வாறு, வெவ்வேறு நாணய அலகுகளில் பெறப்பட்ட அனைத்து கடன்களும் எளிதாக ஒப்பிடும் நோக்கில் அமெரிக்க டொலர்களில் மேலே உள்ள அட்டவணையில் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த கடன்கள் அனைத்தும் டொலர்களால் பெறப்பட்ட கடன்கள் அல்ல. இலங்கை வரலாற்றில் டொலர் ஒன்றின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. அதனால், ரூபாய் கடன்களின் டொலர் மதிப்பு குறைந்து, கடன்கள் குறைவாகக் காணப்பட்டன. டொலரின் விலை வீழ்ச்சி என்பது பொதுவாக இலங்கையில் நடைபெறாத ஒரு விடயம் ஆகும். எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், ஒரு டொலரின் விலை 323.92 ரூபாவிலிருந்து 301.17 ரூபாவாக குறைந்துள்ளது. இதன்போது, ரூபாய் கடன்களின் டொலர் மதிப்பு அதிகரிக்கிறது. அதேநேரம் இலங்கை இறக்குமதிப் பொருளாதாரத்தில் தங்கியிருப்பதால் சர்வதேச சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்யும்போது டொலர் பெறுமதி பயன்படுத்தப்படுகின்றது. இதன் காரணமாக இலங்கையின் சேமிப்புக் குறைவடைந்து கடன் அதிகரிக்கும் நிலையும் ரூபாவின் பெறுமதி அதிகரித்தாலும் அது இலங்கைப் பொருளாதார வளர்ச்சியில் பாரிய தாக்கத்தைச் செலுத்துவதில்லை என்பதும் அவதானிக்கப்பட வேண்டிய பிரதான காரணியாகும். எவ்வாறாயினும், தற்போது இலங்கையில் அரசாங்க செலவுகள் அதன் வருவாயை விடவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சத்திரசிகிச்சைகளுக்காக பயன்படுத்தும் மருந்துப் பொருளுக்கு தட்டுப்பாடு
சத்திரசிகிச்சைகளுக்கு அத்தியாவசியமாக பயன்படுத்தப்படும் லிடொகெய்ன் என்ற மருந்துப் பொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பிரதான வைத்தியசாலைகள் பலவற்றில் இந்த ஊசி மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. லிடோகெய்ன் என்ற இந்த மருந்து சத்திரசிகிச்சைகளின் போது மயக்க மருந்தாக பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த மயக்க மருந்து வகை, அனைத்து சத்திரசிகிச்சைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் இந்த மருந்து கட்டாயமாக வைத்தியசாலைகளில் கையிருப்பில் இருக்க வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்படுகின்றது. இந்த மருந்துப் பொருளுக்கான தட்டுப்பாடு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் நெருக்கடிகளை உருவாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும், வைத்தியசாலைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் மருந்து விநியோகத்தை வரையறுப்பது குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகவும் தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மருந்துப் பொருள் தட்டுப்பாடு குறித்த இந்த தகவல்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு அதிகாரபூர்வமாக இதுவரையில் எவ்வித பதில்களையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் உரை குறித்து சஜித்தின் ஆரூடம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ஆருடம் வெளியிட்டுள்ளார். நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டதாக ஜனாதிபதி இன்றைய தினம் நாட்டு மக்களிடம் கூறுவார் என அவர் தெரிவித்துள்ளார். எனினும் அவ்வாறு நாடு வங்குரோத்திலிருந்து மீண்டதாக ஜனாதிபதி கூற முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாட்டு வணிகக் கடன்கள் தொடர்பில் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என சஜித் தெரிவித்துள்ளார். கடன்களை மீளச் செலுத்தக்கூடிய இயலுமை கிடைத்தால் மகிழ்ச்சி அடைய முடியும் எனவும், அந்த நிலைமை குறித்து சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்கள் அறிவிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். வங்குரோத்து நிலைமை தெடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு நாட்டின் நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம் அல்லது நீதிமன்றிற்கு முடியாது என சஜித் குறிப்பிட்டுள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தீவிரமாக பரவும் நோய்! அவசரமாக கூடிய சுகாதார அமைச்சு
தற்போதைய பறவைக் காய்ச்சல் நிலைமையை தீர்ப்பதற்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் சுகாதார அமைச்சில் அவசர கூட்டமொன்றைக் நடத்தியுள்ளனர். சுகாதார செயலாளர் டாக்டர் பாலித மஹிபால தலைமையில் நேற்று (25) இடம்பெற்ற இக்கூட்டத்தில் பறவைக் காய்ச்சலின் அபாயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) நாடு முழுவதும் உள்ள 20 மருத்துவமனைகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை தினசரி பரிசோதனை செய்து வருகிறது. கடந்த 12 ஆண்டுகளாக, உலக சுகாதார அமைப்பின் பறவைக் காய்ச்சல் வெளிப்புற தர மதிப்பீட்டுத் திட்டத்தில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் MRI 100% துல்லியத்தைப் பராமரித்து வருகிறது. அண்டை நாடுகளில் வழக்குகள் பறவைக் காய்ச்சல் அதிகரித்து வருவதால், விழிப்புடன் இருப்பதன் முக்கியத்துவத்தை அதிகாரிகள் வலியுறுத்தினர். பறவைக் காய்ச்சல், அல்லது பறவைக் காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும், இது முதன்மையாக பறவைகளை பாதிப்பதுடன் மற்ற விலங்குகள் மற்றும் மனிதர்களையும் பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தை ஏமாற்றும் 56 அரசியல்வாதிகள்
அமைச்சர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அரச அதிகாரிகள் 56 பேர் தங்களுடைய தங்குமிடங்களுக்காக, பல கோடி ரூபாவுக்கும் மேலான வாடகையை செலுத்த தவறியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. அவற்றில் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய 14 லட்சம் ரூபாய்க்கான 19 நிலுவைகளும் உள்ளன. கடந்தாண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை 35 வீடுகளில் இருந்து சுமார் 23 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 32 நிறுவனங்களிடமிருந்து கட்டட வாடகையாக 33 கோடிக்கு மேல் அமைச்சுக்கு செலுத்தப்படவில்லை என்று அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஜய வடனா கிராம வீடுகளில் வசித்த 18 அரச அதிகாரிகளிடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூபா வசூலிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சுமார் 32 நிறுவனங்களிடமிருந்து கட்டட வாடகையாக 33 கோடிக்கு மேல் குறித்த அமைச்சுகளுக்கு செலுத்தப்படவில்லை என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 2023ஆம் ஆண்டின் வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிக்கு பின்னர் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார். இந்த நீட்டிப்பு 10 வருடங்களை கடந்த பின்னரும் அதற்கு ஒரு வருட செல்லுபடியாகும் காலம் வழங்கப்படுமாயின் இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கப்படும் வரை மாத்திரமே அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அதன்படி, நவம்பர் முதலாம் திகதி முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சாதாரணக் கடவுச்சீட்டு வைத்திருப்போர் விரைவாக இலத்திரனியல் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.