Search
Close this search box.

ரணிலுக்கே சம்பந்தன் ஆதரவு! – ஐ.தே.க. அதீத நம்பிக்கை

“வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எடுப்பார் என்று நம்புகின்றோம். அந்தத் தீர்மானத்துக்கு வடக்கு – கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் இணங்குவார்கள் என்றும் நம்புகின்றோம்.”- இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த சிங்களத் தலைவர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முக்கிய இடம் வகிக்கின்றார். அதேவேளை, மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவர்களில் இரா.சம்பந்தன் முக்கிய இடம் வகிக்கின்றார். இருவரும் தவிர்க்க முடியாத ஆளுமைகள். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எடுப்பார் என்று நம்புகின்றோம். அந்தத் தீர்மானத்துக்கு வடக்கு – கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் இணங்குவார்கள் என்றும் நம்புகின்றோம். எனவே, வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் அமோக வாக்குகளால் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவார் என்றும் நம்புகின்றோம். ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை ரணில் விக்கிரமசிங்க வரலாற்று வெற்றியை நிலைநாட்டுவார் என்றும் நம்புகின்றோம். தமிழ்ப் பொது வேட்பாளர் பயனற்ற விடயம். அதைப் பற்றிப் பேசி நாம் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. தேவையில்லாத விடயத்தைப் பேசி காலத்தை வீணடிக்கக்கூடாது.” – என்றார்.  

யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து நள்ளிரவில் கோர விபத்து – மூவர் உடல்சிதறிச் சாவு..!

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில்   இடம் பெற்ற கோர விபத்தில் மூவர் உடல்சிதறி உயிரிழந்ததோடு, இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து நேற்று இரவு  11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று பழுதடைந்ததன் காரணமாக, ஏ9 வீதியில் 228வது கிலோமீற்றர்  பகுதியில்  நிறுத்தி வைக்கப்பட்டது. இதன்போது பேருந்தில் வருகை தந்தவர்கள் இறங்கி, பேருந்தின் பின்புறமாக நின்று கொண்டிருந்த போது, அதே திசையில் வருகை தந்த பாரவூர்தி  ஒன்று குறித்த நபர்கள் மீதும் பேருந்தின் மீதும் மோதியுள்ளது. இதன்போதே  வீதியில் நின்ற மூவர் பார ஊர்தியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு உடல்சிதறி  உயிரிழந்துள்ளனர். பாரவூர்தி  சாரதி மற்றும் பேருந்தில்  பயணித்த ஒருவர் என இருவர் படுகாயமடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

நாட்டில் பலத்த மழைவீழ்ச்சி! வெளியான அறிவிப்பு

நாட்டின் காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் குருணாகலை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

தரம் குறைந்த மின் கம்பிகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் தரம் குறைந்த மின் கம்பிகள் விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த மின் கம்பிகள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எஸ்.எல்.எஸ் அல்லது இலங்கை தர நிர்ணயசபையின் சான்றிதழ் இல்லாத இந்த மின் கம்பிகளில் உற்பத்தி நிறுவனத்தின் பெயர் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது. எனினும், பிரபல பண்டக்குறிகளுக்கு நிகரான பெயர்களைக் கொண்ட பெயர்களில் இவை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மின் கம்பிகள் செப்புக் கம்பிகளினால் உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும், இந்த தரம: குறைந்த மின் கம்பிகளை உற்பத்தி செய்ய அலுமினியம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனவே இந்த மின் கம்பிகளை பயன்படுத்துவதனால் மின்சார இயந்திரங்கள் பழுதடைவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெசாக், பொசோன் நிகழ்வுகளின் போது அலங்காரம் செய்வதற்கு இந்த மின் கம்பிகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புறக்கோட்டையிலிருந்து இந்த மின் கம்பிகள் நாடு முழுவதிலும் விநியோகம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தரம் குறைந்த இந்த மின் கம்பிகள் ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாவிற்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. போலியான தரம் குறைந்த மின் கம்பி உற்பத்திகள் சந்தையில் விற்பனை செய்வது குறித்து இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை இன்று விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளது.