Search
Close this search box.

ஜனாதிபதித் தேர்தலுக்கான நகர்வு ஆரம்பம்: தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள உத்தரவு

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பயன்படுத்தக்கூடிய அரச அதிகாரிகள் மற்றும் அரச வாகனங்களின் கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய அரசு அதிகாரிகள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து ஆவணங்கள் பெறப்பட உள்ளன. இதேவேளை, மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அதற்கான சிறப்பு படிவம் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜுலை மாதம் பிற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் முழுமையாக தேர்தல்கள் ஆணைக்குழு வசமாக உள்ள நிலையில் முதல்கட்ட நடவடிக்கையாக ஆணைக்குழு இந்த நகர்வில் ஈடுபட்டுள்ளது. ஜுலை முதல் வாரத்தில் இருந்து தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்க நாட்டின் பிரதான கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. ஆளுங்கட்சியை தவிர ஏனைய இரண்டு பிரதான கட்சிகளான தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன தமது பிரசாரத்துக்கான அட்டவணைகளைகூட தயாரித்துவிட்டன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் இந்த நகர்வு அனைத்துக் கட்சிகளையும் விரைவில் தேர்தலுக்கான பிரசாரங்களை ஆரம்பிப்பதற்கான சமிக்ஞையை வழங்கியுள்ளது.

கிளிநொச்சியில் கும்பலொன்றினால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட நபர்!

கிளிநொச்சியில் 24 நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட நபரொருவர் சித்திரவதைக்குள்ளான நிலையில் இன்று பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். குறித்த நபர் கடந்த 2ம் திகதி கும்பலொன்றினால் கடத்திச் செல்லப்பட்ட நிலையில், தன்னை  அடைத்து வைத்திருந்த வீட்டிலிருந்து தப்பிச் சென்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது  தன்னை ஒரு கும்பல் கடத்தி வைத்து சித்திரவதை செய்ததாக வாக்குமூலம் அளித்த அவர், குறித்த கும்பல் தன்னை வெவ்வேறு இடங்களுக்கு மாற்றி சித்திரவதை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த நபர் தப்பி சென்ற வீட்டுக்கு அழைத்துச் சென்ற பொலிஸார், அங்கு  சாட்சியங்களைப்  பதிவு செய்ததுடன், தடயவியல் சான்றுகளையும் பெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில்  குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக குற்றத்தடுப்புப் பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலஞ்சம் பெற்ற கிராம உத்தியோகத்தர் கைது

வதிவிடப் பத்திரம் வழங்குவதற்காக பெண்ணொருவரிடம் 25000 ரூபா இலஞ்சம் பெற்ற கங்காவத்தை கோரளை பிரதேச செயலகத்தின் ஹிரஸ்ஸ கிராம உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கண்டி ஹந்தான வீதியில் வசிக்கும் நபர் ஒருவர் தான் வசிக்கும் வீட்டிற்கு மின்சாரம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைக்காக மின்சார சபைக்கு வழங்க வேண்டிய வதிவிட சான்றிதழை கிராம உத்தியோகத்தரிடம் கோரியுள்ளார். மேலும் அவ் கிராம உத்தியோகத்தர் அந்த நபரிடம் 25000 ரூபா பணத்தொகையை தருமாறும் அதன் பின் வதிவிட பத்திரம் தருவதாகவும் கூறியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட கிராம உத்தியோகத்தர் வதிவிடப் பத்திரத்தை வழங்க மறுத்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து குறித்த கிராம உத்தியோகத்தரது அலுவலகத்திற்கு சென்ற இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் குறித்த கிராம உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.  

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான போதைப்பொருள் வியாபாரி

இலங்கையின் கடற்பரப்பில் சுமார் 200 கிலோ கிராம் போதைப்பொருட்களுடன் பயணித்தபோது கைப்பற்றப்பட்ட படகின் சொந்தக்காரர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் கட்டுநாயக்க(Katunayake) விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் இருந்து தப்பித்துச் செல்ல முயற்சித்தபோதே அவர் இன்று(26.06.2024) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக  இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் 200 கிலோகிராம் போதைப்பொருளை ஏற்றிய உள்ளூர் பல நாள் கடற்றொழில் இழுவை படகு கைப்பற்றப்பட்டதுடன் 06 பேரை கைது செய்துள்ளதாக  இலங்கை கடற்படை நேற்று(25) தெரிவித்திருந்தது. இலங்கைக்கு மேற்கே சுமார் 121 கடல் மைல் தொலைவில் இலங்கையின் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இந்த படகு இடைமறிப்பு செய்யப்பட்டதாகவும் கடற்படை அறிவித்திருந்தது. இதனையடுத்து போதைப்பொருட்கள் ஏற்றப்பட்ட படகுடன் கைது செய்யப்பட்ட 6 பேர், இலங்கையின் கரையை நோக்கி அழைத்து வரப்பட்டு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்திருந்தது. இந்தநிலையிலேயே கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட குறித்த போதைப்பொருள் ஏற்றப்பட்ட படகின் உரிமையாளர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் இன்று விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சீனாவில் வெள்ளப்பெருக்கு-உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சீனாவின் தெற்கு பகுதியில் சில நாட்களாக கனமழை பெய்து வருவதாகவும், இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சீனாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் சீனாவின் ஹுனான் மாகாணம் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானசாலைக்கு எதிர்ப்பு; பெண்கள் உட்பட பலர் கைது-தமிழர் பகுதியில் சம்பவம்

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் மதுபானசாலை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றது. இதில் 11ஆண்களும் 4 பெண்களும் அடங்குவர். கைதானவர்களில் 5 ஆண்கள் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது ஏற்பட்ட அமைதியின்மையால் இரு பொலிஸார் மற்றும் பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் திருகோணமலை மாவட்ட மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் .

யாழில் பரபரப்பு; கடை மீது பெற்றோல் குண்டு வீச்சு

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றின் மீது, நேற்று செவ்வாய்க்கிழமை (25) இனம் தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள், புடவைக்கடைக்கு பின் புறமாக வந்து பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர். அதனை அவதானித்த கடை ஊழியர்கள் அப்பகுதியில் நின்றவர்கள் பெற்றோல் குண்டை வீசியவர்களை துரத்தி சென்ற போதிலும், அவர்கள் தப்பியோடி விட்டனர். சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நிவித்திகலையில் துப்பாக்கிச் சூடு…!

நிவித்திகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதகட பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திக்கோவிட்ட வத்த, பாதகட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய திருமணமான நபரொருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தின் போது இவர் உறவினரொருவருடன் வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்த போது அங்குச் சென்ற இனந்தெரியாத நபரொருவர் இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிசென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரின் காலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் நிவித்திகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிவித்திகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த துயரம்

இலங்கைக்கு சுற்றுலா வந்த நிலையில் உனவடுன கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 61 வயதான மலேசிய நாட்டைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்தவராவார். இந்த வெளிநாட்டவர் நேற்று (25) மாலை நீராடச் சென்ற வேளை நீரோட்டத்தில் சிக்கியுள்ளதாக ஹபராதுவ காவல்துறையினர் தெரிவித்தனர். பிரதேசவாசிகளின் தலையீட்டினால் மீட்கப்பட்டு காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதேவேளை, வெலிகந்த காவல்துறை பிரிவிற்குட்பட்ட அசேலபுர பிரதேசத்தில் உள்ள கால்வாயில் குளிப்பதற்குச் சென்ற பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த பெண் நேற்று (25) இரவு நீராடச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

மூதூரில் பாடசாலை மாணவர்கள் மீது குளவி கொட்டு : 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மூதூர் காவல் பிரிவிற்குட்பட்ட மூதூர் 5 பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் 30 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் சிலர் பாடசாலையில் மேலதிக வகுப்பில் கலந்துகொண்ட போதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், பாடசாலையை அண்மித்த பகுதியில் உள்ள வீட்டில் இருந்த குளவி கூட்டிலுள்ள குளவிகளே இவ்வாறு மாணவர்கள் மற்றும் ஆசிரியரை கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட 22 மாணவர்களும் எட்டு மாணவிகளும் மற்றும் ஆசிரியரும் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.