இந்திய வெளிவிவகார அமைச்சருடன் இரகசிய சந்திப்பு நடத்திய பசில்!
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அரசாங்கத் தலைவர்களுடன் முன்னெடுக்கப்பட்ட இருதரப்பு கலந்துரையாடல்களுக்கு மேலதிகமாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராசபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஸ்தாபகர் பசில் ராசபக்ச மற்றும், நாமல் ராசபக்ச உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தியா நிதியுதவியில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் அனைத்தும், எந்த அரசாங்கத்தாலும் தடம் புரளாமல் இருப்பது முக்கியம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ராஜபக்ச தரப்பிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிற்கு நிதியளிக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் போன்ற இந்தியா நிதியுதவியில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் எந்த அரசாங்கத்தாலும் தடம் புரளாமல் இருப்பது முக்கியம் என இலங்கை விஜயத்தின்போது தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவரது சந்திப்புகளில், சூரியசக்தி திட்டங்கள், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே முன்மொழியப்பட்ட பெட்ரோலியக் குழாய் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் வரும் எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் இந்தத் திட்டங்கள் தொடர்வதை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். முன்மொழியப்பட்ட பெட்ரோலியக் குழாய்த்திட்டத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், இந்தியா நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் இதேபோன்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளது என்றும், அத்தகைய இணைப்பின் ஒரு பகுதியாக இலங்கை இருக்க விரும்புவதாகவும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
சிவனொளிபாதமலை தரிசனம் மேற்கொள்ள வந்த 183 பேர் கைது…!
2023-2024 சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலத்தில், பல்வேறு போதை பொருட்களுடன் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த போதைக்கு அடிமையான 183 பேர் ஹட்டன் போதைப் பொருள் குற்ற தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஹட்டன் தலைமையக பொலிஸ் குற்ற தடுப்பு ஊழல் ஒழிப்பு பிரிவின் உயர் அதிகாரி ஒருவர், கடந்த ஆறு மாத கால சிவனொளிபாத மலைக்கு யாத்திரை காலத்தில் பல்வேறு போதைப் பொருட்களுடன் சிவனொளிபாத மலைக்கு வழிபட வந்த183 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் நிபுன தெஹிகம மற்றும் ஹட்டன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம். பாரூக் மற்றும் ஹட்டன் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் ஜயசேன ஆகியோரின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் எனவும் இவர்கள் போதைப் பொருளின் பக்கம் திரும்புவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். முடிந்த வரையில் சிறு வயதில் இருந்தே தங்களது பிள்ளைகளை மிகவும் கட்டுப்பாடு தெய்வ வழிபாடு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்க்க பெற்றோர்கள் முன் வர வேண்டும். அதேபோல் இன்றைய சிறு பராயத்தில் உள்ள, குறிப்பாக 16 வயது முதல் 28 வயது உடைய அனைவரும் வீட்டிற்க்கும் நாட்டிற்கும் நல்ல பிரஜையாக வாழ வேண்டும் என அந்த அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெடுந்தீவு பொலிஸ் நிலையம் முன்பாக சடலத்துடன் போராட்டம்
நெடுந்தீவில் அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இளைஞரின் சடலத்துடன் நெடுந்தீவு பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நெடுந்தீவு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 23 வயதான ஒருவர் கொல்லப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சகல சந்தேகநபர்களையும் கைது செய்யுமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை, நெடுந்தீவு இளைஞர் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஒருவர் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதயத்தின் நிபந்தனைகளால் தயங்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள்
ஜனாதிபதித் தேர்தலை எதிர்நோக்கவுள்ள இலங்கைத்தீவு அதற்கான ஆயத்தங்களிலும் ஈடுபட்டு வருகிறது. இம்முறை நடத்தப்படவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் உறுதியாக போட்டியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. எனினும், இவர்களுள் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் நாட்டை முன்னேற்றமான பாதையில் கொண்டு செல்வது கடினமாக அமையுமா என்ற கேள்வி தற்போது அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் தொகையை வழங்கும் போது மேற்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் ஒரு போதும் மீள மாற்றியமைக்கப்படாது என்பது மேற்குறிப்பிட்ட நிலைப்பாட்டுக்கான காரணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இரு கட்சிகளினதும் வேட்பாளர்கள் தயக்கத்தில் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. சில சந்தேர்ப்பங்களில் பதவி கிடைத்தால் தன்னுடைய தலைவர்களுக்கு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியமா என்ற கேள்வி கட்சிகளுக்குள்ளும் எழுந்துள்ளதாக அறியப்படுகின்றது. சிந்தித்து செயற்பட வேண்டிய வாக்காளர்கள் இவ்வாறான நிலையில் பொது மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் ஒருபோதும் மாற்றப்படாது என தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனை மாற்றுவதாகவும் சட்டமூலங்கள் கொண்டு வருவதாகவும் எதிர்க்கட்சிகள் பொதுமக்களுக்கு கொண்டுவரும் உறுதிகள் நம்பத்தகுந்தவையா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. “அரகலய” போராட்டத்தின் பின்னர் கூட பொதுஜன பெரமுனவின் கீழ் இருக்கும் இந்த அரசாங்கம் மாறுபட வேண்டும். அதாவது மீண்டும் ஒரு “அரகலய” போராட்டத்தை உருவாக்காத வகையில் நாட்டின் தலைமைத்துவம் இருக்க வேண்டிய வகையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை பயன்படுத்த வேண்டும். நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டது என்பதால் திறமை இல்லாதவர்களுக்கு இடம் வழங்காமல் பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடனை மீள செலுத்தக் கூடிய வகையில் மீண்டும் வரிசை யுகம் உருவாகாத வகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் தலைவரை உருவாக்குவது அனைத்து தேர்தல் வாக்காளர்களினதும் கடமையாக உள்ளது. அப்போது காணப்பட்ட பல சிக்கல்களிலிருந்து தற்போது பொதுமக்கள் விடுவிக்கப்பட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. ஆகவே, வாக்களிக்கும் போது வாக்காளர்கள் அதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எவ்வாறாயினும், நாட்டின் தற்போதைய நிலைமையின் படி, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டை பொறுப்பேற்கும் தலைவருக்கு நாட்டை தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமா என்ற தயக்கம் கட்சிகள் மத்தியில் காணப்பட்டாலும் கூட, ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான தயக்கம் வாக்காளர்களுக்கு இருக்க கூடாது எனவும் பல அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மன்னாரில் மர்மம்…! அடுத்தடுத்து மடியும் உயிர்கள்- அச்சத்தில் மக்கள்
மன்னார் உப்புக்குளம் நளவன் வாடி பகுதியில் வீட்டு வளர்ப்பு நாய்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவமானது கடந்த சில தினங்களாக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில்,, மிகவும் ஆரோக்கியமாக அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டு கிரமமான முறையில் பராமரிக்கப்பட்டு வந்த நாய்கள் திடீரென இறப்பது தங்களுக்கு வேதனையளிப்பதாகவும் தெரிவித்தனர். குறித்த நாய்கள் வீட்டில் இருந்து வெளியில் சென்ற நிலையிலே குறித்த சம்பவம் இடம்பெற்று வருகின்றது. இதுவரை 8 நாய்கள் இவ்வாறு உயிரிழந்த நிலையில் மேலும் மூன்று நாய்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் குறித்த நாய்களுக்கு அப்பகுதியில் யாரோ நஞ்சு கலந்த உணவை வழங்கியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் நாய்கள் மாத்திரமன்றி காகங்கள் மற்றும் கோழிகளும் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவம் குறித்து உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாய்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலவும் சீரற்ற காலநிலை: கொழும்பில் உள்ள மரங்களை ஆய்வு செய்ய தீ்ர்மானம்
கொழும்பில்(Colombo) முறிந்து விழும் அபாய நிலையில் இல்லாத மரங்களின் வேர்கள் மற்றும் நிலத்தடி தன்மை என்பன தொடர்பில், புதிய ஆய்வொன்றை நடத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “சீரற்ற காலநிலையினால் கொழும்பில் அண்மைக்காலமாக முறிந்து வீழ்ந்த பெரும்பாலான மரங்கள், முறிந்து விழக்கூடிய அபாய நிலையில் இருந்திருக்கவில்லை. கொழும்பு நகரில் மாத்திரம் 500 மரங்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவற்றில் 200 பழமையான மரங்கள் முறிந்து விழக்கூடிய அபாய நிலையில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இதுவரையான காலப்பகுதியில் அவற்றில் 160 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. ஏனைய ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குழாய் நீர் பொருத்துதல் மற்றும் ஏனைய பணிகளின் போது மரங்களின் வேர்கள் பாதிக்கப்படும் என்பதால் அவை குறித்து அவதானம் செலுத்தப்படுகின்றது. எதிர்காலத்தில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் உதவியுடன் அதற்கான ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கு அதி நவீன தொழில்நுட்பக் கருவிகளும் தேவைப்படுகின்றது.” என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொலிஸ் அதிகாரிகளுக்கு இந்தியாவில் சிறப்புப் பயிற்சி
இலங்கையின் 23 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று, இந்தியாவில் ஜூன் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு வார பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ளது என இலங்கையின் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, ஜெய்ப்பூர் மத்திய துப்பறியும் பயிற்சி நிறுவனம் போன்ற முதன்மையான பொலிஸ் பயிற்சி நிறுவனங்களில் இலங்கை பொலிஸாருக்கு ஏற்ப திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஏற்கனவே, 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து, இளைய, நடுத்தர மற்றும் மூத்த அதிகாரிகள் உட்பட 60க்கும் மேற்பட்ட பொலிஸாருக்கு இந்தியாவில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்போது, குற்றங்கள், முகாமைத்துவம், செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையக் குற்ற விசாரணை, மற்றும் முக்கியஸ்தர் பாதுகாப்பு பயிற்சி போன்ற பல்வேறு பாடங்களில் உயர்தர பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை, இந்திய – இலங்கை தொழில்நுட்ப மற்றும் பொருளதார திட்டத்தின்கீழ் இந்த ஆண்டு 130க்கும் மேற்பட்ட இலங்கை பொலிஸ் அதிகாரிகள் இந்தியாவில் பயிற்சி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த காலத்தை யாரும் மறக்கக் கூடாது ஜனாதிபதி தெரிவிப்பு
நாட்டுக்குத் தேவையான மருந்துகள், எரிபொருள், உரம் போன்றவற்றைக் கொள்வனவு செய்ய பணமில்லாமல் துன்பப்பட்ட கடந்த காலத்தை யாரும் மறந்துவிடக்கூடாது என்றும், இவ்வாறான இருண்ட அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லாமல் புதிய பொருளாதார மாற்றத்தின் ஊடாக இலங்கையை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்றிட்டத்தில் அனைவரும் இணைந்துகொள்ள வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொரலஸ்கமுவ கோல்டன் ரோஸ் ஹோட்டலில் நேற்று பிற்பகல் நடைபெற்ற அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் 9ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். அத்தோடு, கடந்த கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியின்போது வேறிடங்களுக்கு தப்பித்து ஓடாமல், அந்த சூழ்நிலையை எதிர்கொண்டு நாட்டுக்காக தமது பொறுப்புகளை நிறைவேற்றிய மருந்தக உரிமையாளர்கள் சங்கத்துக்கு ஜனாதிபதி தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். 2015 புதிய மருந்துகள் சட்டம் இயற்றப்பட்டதன் பின்னர் அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் நிறுவப்பட்டது. நாட்டில் மருந்து விலையை கட்டுப்படுத்தல், மருந்துத் தட்டுப்பாடு ஏற்படாமல் மேற்கொள்ளப்படும் பணிகளில் நிபந்தனையற்ற பங்களிப்பை வழங்குதல், அரசின் சிறுநீரக நிதி, சுகாதார நிதியை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல சமூக நலத் திட்டங்களுக்கு இந்தச் சங்கம் பங்களித்துள்ளது. அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தேஷமான்ய சந்திக கங்கந்தவுக்கும், சிறந்த மாவட்ட சங்கங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது விருதுகளை வழங்கிவைத்தார். மேலும், அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் பணிப்பாளர் சபையினால் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது.
மன்னார் முருங்கன் பகுதியில் கோர விபத்து ; வயோதிப பெண் பலி
மன்னார் -மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இசைமாலைத் தாழ்வுப் பகுதியில் ஹயஸ் ரக வாகனம் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியதில் அதில் பயணித்த 14 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவமானது நேற்று (21)மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,,, கல்முனையில் இருந்து மன்னார் மறிச்சுக்கட்டி பிரதேசத்திற்குக் குறித்த வாகனத்தில் வருகை தந்தவர்களின் வாகனம் முருங்கன், இசைமாலை தாழ்வு, நரிக்காடு வளைவு பகுதியில் உள்ள மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த அனைவரும் முருங்கன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக 7 பேர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இவர்களில் வயோதிப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வாகனத்தில் பயணித்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சார்ந்த உறவினர்கள் எனத் தெரிய வருகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடற்கரைக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த கதி – 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி
பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜெல்லிமீன் உடலில் பட்டதால் ஏற்பட்ட தோல் ஒவ்வாமை காரணமாக அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மீன் இனம் உடலில் பட்ட பகுதிகளில் சிவத்தல், அரிப்பு மற்றும் வலி போன்ற அறிகுறிகள் தோன்றியுள்ளன. குறித்த குழுவினர் பாணந்துறை அடிப்படை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் மேலும் பாணந்துறை கடலில் செல்பவர்கள் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.