நாட்டுக்குத் தேவையான மருந்துகள், எரிபொருள், உரம் போன்றவற்றைக் கொள்வனவு செய்ய பணமில்லாமல் துன்பப்பட்ட கடந்த காலத்தை யாரும் மறந்துவிடக்கூடாது என்றும், இவ்வாறான இருண்ட அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லாமல் புதிய பொருளாதார மாற்றத்தின் ஊடாக இலங்கையை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்றிட்டத்தில் அனைவரும் இணைந்துகொள்ள வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பொரலஸ்கமுவ கோல்டன் ரோஸ் ஹோட்டலில் நேற்று பிற்பகல் நடைபெற்ற அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் 9ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
அத்தோடு, கடந்த கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியின்போது வேறிடங்களுக்கு தப்பித்து ஓடாமல், அந்த சூழ்நிலையை எதிர்கொண்டு நாட்டுக்காக தமது பொறுப்புகளை நிறைவேற்றிய மருந்தக உரிமையாளர்கள் சங்கத்துக்கு ஜனாதிபதி தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
2015 புதிய மருந்துகள் சட்டம் இயற்றப்பட்டதன் பின்னர் அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் நிறுவப்பட்டது.
நாட்டில் மருந்து விலையை கட்டுப்படுத்தல், மருந்துத் தட்டுப்பாடு ஏற்படாமல் மேற்கொள்ளப்படும் பணிகளில் நிபந்தனையற்ற பங்களிப்பை வழங்குதல், அரசின் சிறுநீரக நிதி, சுகாதார நிதியை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல சமூக நலத் திட்டங்களுக்கு இந்தச் சங்கம் பங்களித்துள்ளது.
அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தேஷமான்ய சந்திக கங்கந்தவுக்கும், சிறந்த மாவட்ட சங்கங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது விருதுகளை வழங்கிவைத்தார்.
மேலும், அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் பணிப்பாளர் சபையினால் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது.