Search
Close this search box.

கொழும்பில் பாதாள உலகக்கும்பலை சேர்ந்த இருவர் கைது

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20 விசேட குழுக்களால்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது பாதாள உலக கும்பலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் பொரள்ளை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 1,763 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் பிரபல ஊடகவியலாளரை குறி வைக்கும் மர்ம நபர்கள்

கொழும்பில் பிரபல ஊடகவியலாளர் வீடொன்றுக்குள் மர்ம நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பிலியந்தல வெவல கேம்பிரிட்ஜ் கோர்ட் வீட்டுத் தொகுதிக்குள் நுழைய முயன்ற இனந்தெரியாத இருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த வீட்டு தொகுதிக்குள் உட்பிரவேசிக்க முயன்றவர்கள் தொடர்பில் சந்தேகம் அடைந்து விசாரணைகளை மேற்கொண்ட போது உரிய பதிலை வழங்கவில்லை. கேள்வி கேட்ட வீட்டுத்தொகுதியின் பாதுகாவலரை சந்தேக நபர்கள் புகைப்படம் எடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவிற்கு ஏற்கனவே ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு பிரிவினால் ஆயுதங்கள் வழங்கப்பட்ட 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 2 இனந்தெரியாத நபர்கள் வந்துள்ளதாக கட்டடத்தின் பாதுகாப்பு அதிகாரி தொலைபேசி மூலம் குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்னர், ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்ரமவின் வீட்டின் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சாமுதித சாமர விக்கிரம பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், கல்கிசை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன பிராமண மற்றும் பிலியந்தலை பொலிஸ் பரிசோதகர் தினேஷ் அத்தரகம ஆகியோருக்கு தொலைபேசியில் தெரியப்படுத்தியுள்ளார்.

தேசிய அடையாள அட்டை தொடர்பில் ஆட்பதிவு திணைக்களத்தின் அறிவிப்பு

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்கள் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் இன்னும் உள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை 40 வயதுக்கு மேற்பட்ட தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதி வரை அதற்கான அவகாசம் உள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி குறிப்பிட்டார். இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப மார்ச் 31ஆம் திகதி வரை முதலில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் பிரதேச செயலாளர்களின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி மேலும் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள இலங்கை திட்டம்

சவுதி அரேபியாவிற்கும்(Saudi Arabia) இலங்கைக்கும் இடையேயான முதலீட்டு நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஒப்பந்தத்திற்கு அமைய நேரடி முதலீட்டை ஈர்க்கவும், முதலீட்டு சூழலை மேம்படுத்தவும் முடியும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் விசேட கூட்டத்தின் போது, புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து உறுதியான தீர்மானம் ஒன்று எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தும் போது, முதலீடு குறித்து முக்கிய கொள்கை மற்றும் சட்ட சீர்திருத்தங்களை செயற்படுத்துதல், உட்கட்டமைப்பை மேம்படுத்தல் மற்றும் முதலீட்டினை திறமையான செயல்முறைகளுக்கு அமைய முன்னெடுக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இது தவிர இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பிற்கான புதிய வழிகள் ஏற்படும் என கூறப்படுகின்றது. இதேவேளை இந்த ஒப்பந்தத்தினை மேற்கொள்வதற்கான அனுமதி அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பிற்கு விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யவுள்ளதாகக் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதியின் வருகை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார்.

இலங்கையின் சில இடங்களில் இன்று கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் சில பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில், சபரகமுவ,மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணிக்கு 40-50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.