கொழும்பில்(Colombo) முறிந்து விழும் அபாய நிலையில் இல்லாத மரங்களின் வேர்கள் மற்றும் நிலத்தடி தன்மை என்பன தொடர்பில், புதிய ஆய்வொன்றை நடத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “சீரற்ற காலநிலையினால் கொழும்பில் அண்மைக்காலமாக முறிந்து வீழ்ந்த பெரும்பாலான மரங்கள், முறிந்து விழக்கூடிய அபாய நிலையில் இருந்திருக்கவில்லை.
கொழும்பு நகரில் மாத்திரம் 500 மரங்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவற்றில் 200 பழமையான மரங்கள் முறிந்து விழக்கூடிய அபாய நிலையில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரையான காலப்பகுதியில் அவற்றில் 160 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. ஏனைய ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
குழாய் நீர் பொருத்துதல் மற்றும் ஏனைய பணிகளின் போது மரங்களின் வேர்கள் பாதிக்கப்படும் என்பதால் அவை குறித்து அவதானம் செலுத்தப்படுகின்றது. எதிர்காலத்தில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் உதவியுடன் அதற்கான ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்கு அதி நவீன தொழில்நுட்பக் கருவிகளும் தேவைப்படுகின்றது.” என குறிப்பிட்டுள்ளார்.