முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மத்திய மாகாணத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கடந்த 4 மாதங்களாக வாடகை பணத்தை செலுத்தவில்லை என மத்திய மாகாண முதலமைச்சர் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அவருடைய மாதாந்த சம்பளத்தில் 10 வீத அடிப்படையில் குறித்த வீட்டிற்கு வாடகை செலுத்திவந்திருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்ட நாள்முதல் வாடகை பணம் செலுத்த தவறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பணத்தை செலுத்த 19 நாட்கள் கடந்துள்ள நிலையில், முன்னறிவித்தல் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், அரகலய போராட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் கெஹலியவின் வீடு எரித்து நாசமாக்கப்பட்டது. இதனையடுத்து கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள மலபார் வீதியில் அமைந்துள்ள முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லம் அவருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து சுகாதார அமைச்சராகவும், சுற்றாடல் அமைச்சராகவும் இருந்த காலத்தில் தனது மாதாந்த சம்பள பணத்தில் 10 விதத்தை வாடகை பணமாக பெற்றுக்கொள்ளும் உடன்படிக்கை அடிப்படையில் குறித்த இல்லம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், பணம் செலுத்தப்பட்டிருந்தாலும் தற்போது குறித்த பணம் செலுத்துவதை நிறுத்தியுள்ளதாக துறைசார் அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் லங்காதீப(Lankadeepa) பத்திரிகைக்கு தகவல் வழங்கியுள்ளார்.
மேலும், கடந்த பெப்ரவரி மாதம் முதல் கெஹலிய ரம்புக்வெல்ல சிறையில் இருக்கும் நிலையில், நாடாளுமன்ற செயலாளரிடம் குறித்த பணத்தை பெற்றுக்கொடுக்குமாறு எழுத்து மூலம் கெஹலிய கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த வாடகை பணத்தை மீட்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்து கடிதமொன்றை வங்கினால் அந்த பணத்தை வசூலிக்கும் அதிகாரம் நாடாளுமன்ற செயலாளருக்கு உண்டு என்றும் அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு, தற்போது விளக்கமறியலில் உள்ள முன்னாள் அமைச்சருக்கு 10 வீத சம்பளத்தை பிடிக்கச் செய்ய சம்மதம் கோரி மத்திய மாகாண முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளதாகவும், ஆனால் இதுவரை பதில் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.