Search
Close this search box.

மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் காயம்

சம்மாந்துறை பொலிஸ் வீதியில் திங்கட்கிழமை (17) காலை மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் அவ்வீதியால் துவிச்சக்கரவண்டியில் பயணித்த வயோதிபர் படுகாயமடைந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, விபத்தின் போது வீட்டின் முன்னால் அமர்ந்து இருந்த சிறுவன் மீதும் மோட்டார் சைக்கிள் மோதியதுடன், அச்சிறுவனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான வாக்குப்பெட்டிகளை தயார்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஏற்கனவே பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடைபெறவுள்ளதால், வாக்குப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். வாக்குச் சாவடிகள் குறித்த விபரங்கள் கிடைத்தவுடன், வாக்குப் பெட்டிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக சரிசெய்ய ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட்ட ஏராளமான வாக்குப்பெட்டிகள் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றை அரசு தொழிற்சாலைக்கு அனுப்பி சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தேர்தலை இலக்காகக் கொண்டு அதிகாரிகள் கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் எனத் தெரிவித்த ரத்நாயக்க, அடுத்த வாரம் உள்ளுராட்சி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுடன் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகள் குறித்தும் அங்கு விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க: பத்து நிபந்தனைகளை முன்வைத்துள்ள மொட்டுக்கட்சி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தம்மிடம் பத்து நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் வர்த்தகருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். தனியார் தொலைகாட்சிக்கு வழங்கிய விசேட நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், தற்போது அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 51% வாக்குகளைப் பெறுவது உறுதியானால், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தாம் போட்டியிடுவேன் என பதில் வழங்கியுள்ளதாக தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 115 நாட்களே உள்ளதால், எனைய நிபந்தனைகள் அனைத்தும் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

காவல் துறையினருக்கு அதிகரிக்கப்பட்டுள்ள வெகுமதித் தொகை

பொலிஸ் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் வெகுமதித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து கடமையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மக்களின் உயிரைப் பாதுகாக்கும் நோக்கில் தமது அன்றாட கடமைகளில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி, பொலிஸ் போக்குவரத்து பிரிவுகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் வெகுமதித் தொகையை மாதாந்தம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கடமையில் ஈடுபடும் போக்குவரத்து அதிகாரிக்கு வழங்கப்படும் வெகுமதி தொகை 2,500 ரூபாயில் இருந்து 7,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், புலனாய்வு தர அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வெகுமதித் தொகை 2,000 ரூபாவிலிருந்து 7,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு வழங்கப்படும் வெகுமதித் தொகையும் 1,800 ரூபாவிலிருந்து 6,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் போக்குவரத்துப் பிரிவிலுள்ள கான்ஸ்டபிளுக்கான வெகுமதித் தொகை 1,600 ரூபாவிலிருந்து 6,000 ரூபாவாகவும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதிக்கான வெகுமதித் தொகை 1,200 ரூபாவிலிருந்து 4,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிகளுடன் அகப்பட்ட கொள்ளை கும்பல்…!

துப்பாக்கிகள் மூலம் சொத்துக்களை கொள்ளையடித்த கும்பலொன்றின் சந்தேகநபர்களில் மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் நில் பனாகொட, திவுலபிட்டிய பின்னகலேவத்த மற்றும் தலுமொட்டாவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள், 8 துப்பாக்கி குண்டுகள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு, திருடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள், 6 கத்திகள், பல வீடுகளை உடைக்கும் கருவிகள் மற்றும் பல தங்க ஆபரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் களுமடை பிரதேசத்தில் உள்ள வைத்திய நிலையத்தில் வைத்தியர் ஒருவரின் கையிருப்பு தங்க நகைகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் விளைவாக சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவமானது, சந்தேகத்திற்கிடமான முறையில் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணிப்பதாக தெல்வகுர பிரதேசத்தில் இருந்து கிடைத்த தகவலின் பேரில், தெல்வகுர பகுதியில் பொலிஸ் குழுவொன்றினால் வீதித்தடை ஏற்படுத்தப்பட்டது. இதன் போது அவ் வீதியினூடாக தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபர்களின் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த வேளையில் பயணித்த இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களைக் கைது செய்த பொலிஸ் குழுக்கள் மேற்கொண்ட சோதனையின் போது சந்தேகநபர் ஒருவரின் பிறப்புறுப்பு பகுதியில் கைக்குண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. மற்றைய நபரிடம் இருந்து நான்கு துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் மினுவாங்கொட கட்டு அலேகம பிரதேசத்தில் இருந்து திருடப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. . மேலும், இவர்கள் மோட்டார் சைக்கிள்களில் போலி இலக்கத் தகடுகளுடன் பயணித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தேக நபர்களிடமிருந்து படல்கம பிரதேசத்தில் இரண்டு வழக்குகளும் , கட்டான மற்றும் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுகளில் தலா ஒரு வழக்கும் பொலிஸாரால் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

போரிடச் சென்ற இலங்கையர்களின் விபரங்கள்! கடும் மௌனம் காக்கும் உக்ரைன்

ரஷ்ய  – உக்ரைன்  போரில், உக்ரைனுக்காக போரிடும் இலங்கையர்கள் பற்றிய விபரங்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும் உக்ரைன் இதுவரை பதில் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் என்பன, அண்மையில் உக்ரைன் அதிகாரிகளிடம் முறைப்படி போர் முனையில் இருக்கும் இலங்கையர்கள் பற்றிய விபரங்களை வழங்குமாறு கோரியிருந்தன. அத்துடன், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் நினைவூட்டல் ஒன்றும் அனுப்பப்பட்டது, ஆனால் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், ரஷ்ய போர் முனையில் உள்ள தனது நாட்டினரை விடுவிப்பதில் இலங்கையின் முயற்சிகள் இப்போது தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அத்தகைய ஆட்சேர்ப்புகள் அதன் சட்டத்திற்கு இணங்க மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரஷ்யா வலியுறுத்துகிறது. இதன்படி, உக்ரைனுக்கு எதிரான போரில் தனது இராணுவத்தில் இணைந்து கொள்வதில் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இலங்கை நாட்டவர்கள் மதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ரஷ்யா கடைப்பிடிக்கிறது. இந்தநிலையில், இருதரப்பு உறவுகளில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இரு நாடுகளும் இப்போது இந்த விவகாரத்தை இராஜதந்திர ரீதியாக தீர்க்க முயல்கின்றன. இதுவரை, 400இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் ரஷ்யாவுக்காக போரிடச் சென்றுள்ளதுடன், உக்ரைனுக்கு குறைவான எண்ணிக்கையினரே சென்றுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியப் பிரதமர் மோடி இலங்கை விஜயம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரக (High Commission of India) வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய பிரதமராக நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் (S.Jaishankar) எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான பயணத்தின் போது இரு நாடுகளினதும் உறவை வலுப்படுத்துவதற்கான பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனா – இலங்கை இடையிலான 13ஆவது இராஜதந்திர சுற்று பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்

சீனாவின் தலைநகரில் இடம்பெறும் 13ஆவது இராஜதந்திர சுற்று ஆலோசனை மாநாட்டின் இலங்கை தூதுக்குழுவிற்கு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன( Aruni Wijewardana )தலைமை தாங்கவுள்ளார். பீய்ஜிங்கில் இன்று நடைபெறும் சீனாவுடனான ஆலோசனை மாநாட்டில் சீனாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சன் வெய்டாங் (Sun Weidong) தலைமையிலான குழுவுடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு ஈடுபாட்டின் துறைகளில் முன்னேற்றம் குறித்து இன்றைய அமர்வின்போது ஆய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் தூதுக்குழுவில் பீய்ஜிங்கின் இலங்கை தூதுவர் மகிந்த ஜெயசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சீனாவிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் ஆகியோரும் கலந்துக்கொள்ளவுள்ளனர். இருதரப்பு அரசியல் கலந்தாய்வுகளின் 12ஆவது சுற்று 2023 மே 30ஆம் திகதியன்று கொழும்பில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை

ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை, கிழக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களில் இன்று (17) சிறப்பாக நடைபெற்றது. பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் அம்பாறை (Ampara)  மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றன. இதன் போது மருதமுனை தாறுல் ஹுதா மகளிர் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் எம்.எல்.எம்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார்.இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். இதே வேளை அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை ,கல்முனை, சம்மாந்துறை ,நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில், உள்ளிட்ட முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் பெருநாள் தொழுகைகள் பரவலாக இடம்பெற்றன. இதன்பின் அனைவரும் தமது பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொண்டனர் கிண்ணியா (Kinniya) குறிஞ்சாக்கேனி வீசி மைதானத்தில் இன்று (17) காலை ஹஜ் பெருநாள் திடல் தொழுகை இடம் பெற்றது. இதில் பெரும்பாலானவர்கள் தொழுகையில் கலந்து கொண்டதுடன் குத்பா பிரசங்கமும் இடம் பெற்றது. மேலும். திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்னிலங்கையில் வெளிநாட்டவரால் ஏற்பட்ட விபரீதம் – தந்தை பலி, மகன் படுகாயம்

களுத்துறை நகரில் பாதசாரி கடவையில் வீதியை கடந்த தந்தை மகன் மீது சீனப் பிரஜைகள் பயணித்த சொகுசு கார் மோதி பாரிய விபத்து  இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை நாகொட சந்தர்ஷனாராம வீதியை சேர்ந்த 46 வயதுடைய சதுன் அரவிந்த என பொலிஸார் தெரிவித்தனர். காரை ஓட்டி வந்த சீன நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய காரை பொலிஸார் தமது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.