எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் எரிசக்தி அமைச்சு தகவல்
கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில்உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 27% வீழ்ச்சியடைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடைந்துள்ள போதிலும் நாட்டில் எரிபொருட்களின் விலைகளை உடனடியாக குறைப்பது கடினமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் (power and energy ministry) செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கொள்வனவு நடவடிக்கைகளின் பிரகாரம், இலங்கையில் எரிபொருள் விலை குறைப்பு முறையாக மேற்கொள்ளப்பட வேண்டுமென சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் (Singapore) வர்த்தகக் குறியீட்டின்படி சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இதன்படி, அங்கு தீர்மானிக்கப்படும் விலைகளுக்கு அமைய இலங்கையில் எரிபொருள் விநியோகிக்கப்பட வேண்டுமெனவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் மொத்தத் தேவையில் சுமார் 35 சதவீதமான மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு சுத்திகரிக்கப்படுவதால், உலக சந்தை விலைகளுக்கு அமைவாக சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ள முடியாதெனவும் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பரில் ப்ரெண்ட் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 94 அமெரிக்க டொலராக காணப்பட்டது. தற்போது 74 டொலராக குறைவடைந்துள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். இந்நிலையில் , நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கணிசமாகக் குறையாததால் போக்குவரத்துச் செலவு மற்றும் பொதுவான வாழ்க்கைச் செலவு குறைவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சஜித்துடன் இணைந்த மொட்டு கட்சி எம்.பி..!
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ். குமாரசிறி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ரஜரட்ட விவசாயிகள் மாநாடு நேற்று (16) பிற்பகல் அனுராதபுரம் சல்காடு விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதன்போதே அவர் சஜித் முன்னிலையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். இந்த மாநாட்டில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, லண்டன் அல்லது வேறு எந்த நாட்டிற்கும் செல்வதை விட ரஜரட்ட விவசாயியுடன் நேரத்தை செலவிடுவதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெறும் குற்றச்செயல்கள்: காவல்துறை மா அதிபர் வெளியிட்ட தகவல்
நாடளாவிய ரீதியில் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட யுக்திய விசேட நடவடிக்கையினால் நாட்டில் குற்றச்செயல்கள் 23 வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்களை அவர்களது குடும்பங்களுடன் ஒன்றிணைக்கும் நிகழ்வின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து குற்றச்செயல்கள் 23 வீதம் குறைவதற்கு வழிவகுத்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், இவ்வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் 50 வீதமாக குறையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அத்துடன், ஆறு மாதங்களுக்குள் விசேட நடவடிக்கையின் மூலம் 5,000 போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, போதைப்பொருள் வலையமைப்பில் 90 வீதத்திற்கும் அதிகமானவற்றை அழித்துவிட்டதாகவும் காவல்துறை மா அதிபர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்புக்கான நீர் விநியோகம் தாமதமாகலாம்: வெளியான காரணம்
லபுகம நீர்த்தேக்கத்தில் இருந்து கொழும்புக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பெரிய குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு ஹைலெவல் வீதியின் கொடகம பகுதியில் இன்று (17) அதிகாலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி குழாயில் மோதியதில் இவ்வாறு உடைப்பு ஏற்பட்டுள்ளது. நீர் குழாயில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதால் அதிகளவில் நீர் வெளியேறி வீணாகி வருவதுடன் குறித்த இடத்தில் உள்ள மின்கம்பமும் உடைந்து வீதியில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் சிக்கிய கார் சாரதி உட்பட இருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கார் அதிவேகமாக வந்து வீதியை விட்டு விலகி தண்ணீர் குழாயில் மோதி கவிழ்ந்தமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நீர் குழாயில் ஏற்பட்ட பாரிய சேதம் காரணமாக கொழும்புக்கான நீர் விநியோகம் தாமதமாகலாம் என நீர் வழங்கல் சபையின் மஹரகம வலய அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கை வாழ் மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கை வாழ் மக்களுக்கு பொலிஸ் தலைமையகம் அவசர பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனக் கூறி நபர்களை அல்லது சொத்துக்களை தேடும் போது, அவர்களின் அடையாளத்தை உறுதி செய்ய அட்டையை கோரும் உரிமை பொது மக்களுக்கு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் குற்றச்செயல்களை தடுக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் மக்களை அறிவுறுத்தியுள்ளது. மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடவாமுல்ல சந்தியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான கைத்தொலைபேசி மற்றும் பணப்பையை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். பொருட்கள் மீள வேண்டுமென்றால் 35 ஆயிரம் ரூபாயுடன் மருதானை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர். இது தொடர்பான முறைப்பாட்டை பெற்றுக்கொண்ட பொலிஸாரின் விசாரணையில் போதைப்பொருள் கடத்தலுக்கு தொடர்புடையவர்களே இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, திருடப்பட்ட தொலைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடற் பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டி- அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு கடற் பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டியொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது… அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பெட்டியை கண்ட அனலைதீவு மீனவர்கள் ஊர்காவற்றுறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஊர்காவற்றுறை பொலிசார் மேற்படி பெட்டியை மீட்டுள்ளனர். மேற்படி பெட்டியினுள் தொலைத் தொடர்பு கருவி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.