பொலிஸ் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் வெகுமதித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து கடமையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மக்களின் உயிரைப் பாதுகாக்கும் நோக்கில் தமது அன்றாட கடமைகளில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, பொலிஸ் போக்குவரத்து பிரிவுகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் வெகுமதித் தொகையை மாதாந்தம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து கடமையில் ஈடுபடும் போக்குவரத்து அதிகாரிக்கு வழங்கப்படும் வெகுமதி தொகை 2,500 ரூபாயில் இருந்து 7,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புலனாய்வு தர அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வெகுமதித் தொகை 2,000 ரூபாவிலிருந்து 7,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் போக்குவரத்து பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு வழங்கப்படும் வெகுமதித் தொகையும் 1,800 ரூபாவிலிருந்து 6,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் போக்குவரத்துப் பிரிவிலுள்ள கான்ஸ்டபிளுக்கான வெகுமதித் தொகை 1,600 ரூபாவிலிருந்து 6,000 ரூபாவாகவும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதிக்கான வெகுமதித் தொகை 1,200 ரூபாவிலிருந்து 4,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.