முல்லைத்தீவில் அபகரிக்கப்படும் தமிழ் மக்களின் காணிகள்: எழுந்துள்ள குற்றச்சாட்டு
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய பூர்வீகக் காணிகள் அபகரிக்கப்பட்டு பெரும்பான்மை மக்களுக்கு வழங்கப்படுவதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இன்றையதினம் (17.06.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டம் 2415 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் உள்ளதோடு கிட்டத்தட்ட 5 இலட்சத்து தொண்ணூறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாக கணிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்களுக்கு காணி இல்லை. போர் முடிவடைந்ததன் பின்னர், பூர்வீகமான மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்யப்பட்டது. தற்போது, அரசாங்கத்தினால் தமிழ் மக்களுடைய பூர்வீகக் காணிகள் அபகரிக்கப்பட்டு 4238 பெரும்பான்மை குடும்பங்களுக்கு காணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டு கூறக்கூடிய விடயம் என்னவெனில் தமிழ் மக்களுக்கு சொந்தமாக இருந்த பூர்வீகமான நீர்ப்பாசனக் குளங்களும் அதனுடன் சேர்ந்த காணிகளும் அபகரிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, 2022ஆம் ஆண்டு 28676 இளைஞர், யுவதிகளுக்கு ஒரு ஏக்கர் காணி வீதம் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், இன்று வரை அவர்களுக்கான எதுவித காணிகளும் வழங்கப்படவில்லை என்பதோடு அதற்கான முயற்சிகளும் நடக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம்! மிக நல்ல சாதனை – நிதி இராஜாங்க அமைச்சு தெரிவிப்பு
உலக வங்கியின் கணிப்புகளின்படி, இலங்கையின் பொருளாதாரம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் 2.2% வளர்ச்சியடையும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கைப் பொருளாதாரம் 5.3% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், கைத்தொழில் துறையும் 11.8% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. 2022 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் 12% க்கும் குறைவான எதிர்மறையான பொருளாதாரத்தை கொண்ட ஒரு நாடாக பதிவான இந் நாட்டின், இந்த நிலைமையை நேர்மறையான கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்கள் இலங்கையின் பொருளாதார பயணத்தை நம்பிக்கையுடன் பார்க்க முடியும். உலக வங்கியின் கணிப்புகளின்படி, இலங்கையின் பொருளாதாரம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் 2.2% வளர்ச்சியடையும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டின் பொருளாதாரம் குறைந்த (மைனஸ்) 7 இற்கு மேல் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட ஒரு நாட்டில், இரண்டு வருடங்களில் 2% க்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடிந்தமை மிகவும் நல்ல சாதனை என குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலைமை
கனடாவின்(Canada) ஆல்பர்ட்டா மாகாணத்தின் கல்கரி நகரில் அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நகரத்தின் மேயர் இந்த அவசரகால நிலைமையை பிரகடனம் செய்துள்ளார்.நகரில் நிலவிவரும் நீர் தட்டுப்பாடு காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் நிலக்கீழ் நீர் விநியோக கட்டமைப்பின் ஓர் பகுதியில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதனால் நீர்விநியோகம் பாதிக்கப்பட்டது.இந்த நீர் கசிவினை அடையாளம் கண்டு பழுது பார்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நகர மக்களுக்கு போதிய அளவு நீரை விநியோகம் செய்வதில் நகர நிர்வாகம் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றது.இந்த நெருக்கடி நிலைமை காரணமாக அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்துள்ளது. நீர்த்தட்டுப்பாட்டு நிலைமையை கருத்தில் கொண்டு அல்பர்ட்டா மாகாண அரசாங்கம் வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றி பாராட்டுவதாக நகர மேயர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நிலவிவரும் நீர் தட்டுப்பாடு காரணமாக நகர மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலர் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளதுடன் பல்வேறு தரப்பினர் இந்த அவசரகால நிலைமை அறிவிப்பினை விமர்சனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை வரும் சீனாவின் கடற்படை கப்பல்
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கடற்படை மருத்துவமனைக் கப்பலான “அமைதிப் பேழை” (“Peace Ark”)இலங்கை உட்பட பல நாடுகளுக்குச் செல்வதற்காக சீனாவின் இராணுவத் துறைமுகமான சுசானில் இருந்து நேற்று (16) புறப்பட்டுள்ளது. இந்த கப்பல் தமது பயணத்தின் போது, சீசெல்ஸ், தான்சானியா, மடகாஸ்கர், மொசாம்பிக், தென்னாப்பிரிக்கா, அங்கோலா, கொங்கோ குடியரசு, காபோன், கெமரூன், பெனின், மொரிட்டானியா, ஜிபூட்டி மற்றும் இலங்கை ஆகிய 13 நாடுகளுக்கு சென்று உள்ளூர் மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கவுள்ளது. அத்துடன் பிரான்ஸ் மற்றும் கிரிஸுக்கு துறைமுக அழைப்பு பயணங்களையும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த கப்பல் எப்போது இலங்கைக்கு வரும் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இது 2008 ஆம் ஆண்டு இந்த கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது “அமைதிப் பேழை” கப்பல், உள்ளூர்வாசிகள், சீன நிறுவனங்களில் உள்ளவர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள சீனர்கள் ஆகியோருக்கு பொதுவான மற்றும் பரவலான நோய்களுக்கான இலவச நோயறிதல் மற்றும் சிகிச்சையை வழங்குகிறது. இந்த கடல்சார் மருத்துவமனையில் 100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். இதில் 17 மருத்துவ பிரிவுகளும் 5 துணை நோயறிதல் பிரிவுகளும் அமைந்துள்ளன. “அமைதி பேழை” என்பது சீனாவினால், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மருத்துவமனைக் கப்பல் ஆகும். இது 45 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்குச் சென்று, 290,000 பேருக்கு மேல் மருத்துவ சேவைகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்படவுள்ள மாற்றம்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சையில் இருந்து மாத்திரம் பெற முடியாது என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தரம் 4-5 இல் வகுப்பறையில் படிக்கும் போது பரீட்சை மதிப்பெண்களில் 30% பெற வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், அதை முறையாக மதிப்பிடுவது ஆசிரியரின் பொறுப்பு என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கல்வி சீர்த்திருத்தங்களின் படி, தரம் 1 தொடக்கம் 10 வரையான முன்னோடித் திட்டங்கள் 2025 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலமாக எதிர்காலத்தில் மாணவர்கள் 21 வயதிற்குள் முதல் பட்டங்களையும், 23 வயதிற்குள் முதுகலைப் பட்டங்களையும், 27 வயதிற்குள் கலாநிதிப் பட்டங்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்
2025 ஆம் ஆண்டிற்குள் தனியார் வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் தற்போது, வாகனங்கள் இறக்குமதி மட்டுமே இறக்குமதி வரம்புக்கு உட்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு முதல் காலாண்டில், பத்து சதவீத பொருளாதாரம் சுருங்கியிருந்த நிலையில், தற்போது 5.3 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் உள்ளது. அதன்படி, வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதுடன், 2025 ஆம் ஆண்டளவில் தனியார் வாகனங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதினையும் அரசாங்கம் நோக்கமாக கொண்டுள்ளது. நாட்டில் சுதந்திர சந்தைக்குத் தேவையான சூழலை உருவாக்கும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும். 2023 முதல் காலாண்டில் 10 வீதத்தால் சுருங்கிய பொருளாதாரம் தற்போது 5.3 வீத பொருளாதார வளர்ச்சி வீதமாக மாறியுள்ளது. இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தற்போதைய பொருளாதார வளர்ச்சி வரை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் மூன்றாவது தவணை சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்டது. இலங்கையை உடைக்க முடியாத பொருளாதாரமாக மாற்றி, நீண்டகால பொருளாதார வேலைத்திட்டத்திற்கு தேவையான கட்டமைப்பை உருவாக்கி, சர்வதேச நாணய நிதியம் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றி, மக்கள் இலகுவாக வாழக்கூடிய நாட்டை உருவாக்குவது அரசாங்கத்தின் நம்பிக்கையாகும். சமூகத்தை நல்ல முறையில் பேணுவதற்கு அரசாங்க அமைப்பை டிஜிட்டல் மயப்படுத்துவதிலேயே அரசாங்கத்தின் கவனம், சுதந்திர சந்தைக்கு தேவையான சூழலை நாட்டில் உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் களம்
மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ்.குமாரசிறி, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று (16) நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டின் போதே அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிப் பகுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் காலப்பகுதியில் கட்சித் தாவல்கள் அதிகமாக இடம்பெறுகின்றன. இதனால் கொழும்பு அரசியல் சமீப நாட்களில் சூடுபிடித்துள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவுக்கு விற்பனை செய்யப்படும் பாலியல் நேரலை காட்சிகள்
பாலியல் காட்சிகளை நேரலையாக ஒளிபரப்பு செய்து சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் பெரிய அளவிலான மோசடியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பிலியந்தலை படகெத்தர பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த இளம் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின் போது, முன்னர் கொள்ளுப்பிட்டியில் வசித்த குறித்த தம்பதியினர் கடந்த மார்ச் மாதம் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், பொலிஸ் சோதனையின் போது, மற்றொரு ஜோடி குறித்த வீட்டில் இருந்து, பாலியல் காட்சியில் நேரடியாக ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதேவேளை, கைது செய்யப்பட்ட 22, 23, 26 மற்றும் 27 வயதுடைய இரு ஜோடிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
UK செல்ல முயன்ற இளம் பெண் விமான நிலையத்தில் கைது
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்திற்கு செல்ல முயன்ற திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் பயணத்திற்கு உதவிய தரகர் ஒருவரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரான பெண் அனைத்து அனுமதி நடைமுறைகளையும் முடித்துவிட்டு குடியகல்வு சேவை கரும பீடத்திற்குச் சென்று கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். இதன்போது கடவுச்சீட்டில் உள்ள புகைப்படம் அவருடையது அல்ல என்பதைக் கண்டறிந்ததால், அவர் தலைமை குடிவரவு அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனையில், மற்றொரு பெண்ணின் கடவுச்சீட்டில் இந்த பெண்ணின் தகவல்கள் பதிவு செய்து போலியாக தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
2 சிறுமிகள் துஷ்பிரயோகம்: பிக்கு சிக்கினார்
12 மற்றும் 13 வயதுகளையுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், அப் பிரதேசத்தைச் சேர்ந்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தனமல்வில பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. தபால் மூலமாக கிடைத்த இரகசிய முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், அவ்விரு சிறுமிகளையும், அவ்விரு சிறுமிகளின் தாய்மார்களையும் பொலிஸார் அழைத்து விசாரணைக்கு உட்படுத்தியதில் மேற்படி சம்பவம் அம்பலமானது. உடல் ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் மன உபாதைகளுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டிக் கைது செய்யப்பட்ட பிக்குவை, நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (17) ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.