Search
Close this search box.

வெளிநாட்டில் பதுங்கியிருந்தவர்: கட்டுநாயக்காவில் தரையிறங்கியவேளை கைது

2022 ஆம் ஆண்டு கம்பகாவில் பாதாள உலக குழுவைச் சேர்ந்த சமன் ரோஹித பெரேரா என அழைக்கப்படும் ‘பாஸ் போட்டா’ கொலைக்கு காரணமானவர், நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஜூலை 30, 2022 அன்று கம்பகா(Gampaha) மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அருகில் ‘பாஸ் போடா’ சுட்டுக் கொல்லப்பட்டார், மேலும் இருவர் காயமடைந்தனர். நீர்கொழும்பு, கிம்புலாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 28 வயதான அவிஷ்க மதுசங்க என்ற நபர் இன்று(10) காலை கைது செய்யப்பட்டு கம்பகா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, மதுசங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜாவுக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. குறித்த சந்தேகநபருக்கு கம்பகா நீதவான் நீதிமன்றம் பயணத்தடை விதித்திருந்ததுடன், குடிவரவு திணைக்கள அதிகாரிகள் அவர் நாடு திரும்பியதும் அடையாளம் கண்டு அவரை கைது செய்துள்ளனர்.

இலங்கையில் பராமரிப்பு நிலைய சிறுமிகள் பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை..! பொலிஸார் தீவிர விசாரணை

கண்டி – வெலம்பொடை பிரதேசத்தில் உள்ள சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுமிகளை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்ததாக கூறப்படும் கண்காணிப்பாளரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த, மடாட்டுகம பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமியொருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவின் பிரகாரம் முறைப்பாடு செய்த சிறுமி கடந்த ஜனவரி மாதம் குறித்த சிறுவர் தடுப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். கண்காணிப்பாளரால் சிறுமிகள் பல்வேறு நபர்களுக்கு விற்கப்படுவதாகவும், சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் உள்ள மருத்துவ அறையில் பாலியல் செயல்பாடுகளுக்கான வசதிகளை வழங்குவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மடாட்டுகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி முறைப்பாடு செய்த சிறுமியின் மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக அவரை அநுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வெலம்படை பொலிஸாரும் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

பழைய புலிகள் முகாமில் தங்கத்திற்கான அகழ்வாராய்ச்சி

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அழகாபுரி பகுதியில் அதி நவீன ஸ்கேனர்களைப் பயன்படுத்தி தங்கத்தை தேடிக்கொண்டிருந்த 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் தெரிவித்தனர். கிளிநொச்சி முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய அதன் அதிகாரிகள் குழுவொன்று குறித்த  பகுதிக்குச் சென்று ஸ்கேனர்களைப் பயன்படுத்தி தங்கத்தை தேடும் வேளையில் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். குறித்த நிலையம், போரின் போது விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பிற்குச் சொந்தமான அன்பு முகாம் இருந்த இடமாக சந்தேகிக்கப்படுவதுடன், சந்தேகநபர்கள் இந்த ஸ்கேனர்களைப் பயன்படுத்தி அந்த அமைப்பினால் புதைத்த தங்கத்தை கண்டுபிடிக்க முயற்சித்திருக்கலாம் என பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் மேலதிகமாக அதி தொழில்நுட்பத்துடன் கூடிய இரண்டு ஸ்கேனர்கள், ஒரு கார் போன்றவையும் கைப்பற்றப்பட்டது. சந்தேகநபர்களில் இருவர்  கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய சந்தேக நபர்கள் கிளிநொச்சியை வசிப்பிடமாக கொண்டுள்ளவர்கள் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பிலுள்ள கிணறொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆபத்தான வெடிபொருட்கள்

புதுக்குடியிருப்பிலுள்ள தேவிபுரம் எனும் பகுதியில்  கிணற்றிலிருந்து 992 விமான எதிர்ப்பு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்தனர். மேற்படி கிணறு அமைந்துள்ள காணியின் உரிமையாளர், காணியில் உள்ள பழைய கிணற்றை துப்புரவு செய்யும் போதே குறித்த குண்டுகள் இருப்பதை கண்டறிந்துள்ளார். அதனையடுத்து புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இவ் வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் கண்டெடுக்கப்பட்ட இவ் வெடிபொருட்கள் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாமென பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறியுள்ள இலங்கை

சர்வதேச நாணய நிதிய (IMF) திட்டத்தின் கீழ் கண்காணிக்கக்கூடிய 100 உறுதிமொழிகளில் 29ஐ இலங்கை பூர்த்தி செய்துள்ளதுடன், 2023 மே மாத இறுதிக்குள் அவற்றின் மூன்று உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாகவும் வெரிடே ரிசர்ச்சின் ‘IMF கணிப்பான்’ எனும் கருவி தெரிவித்துள்ளது. நிறைவேற்ற தவறியுள்ள இரண்டு உறுதிமொழிகள் வருமானம் தொடர்பானவை. முதலாவதாக, வரி வருவாயை 2023 மார்ச் மாதத்திற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2.1% அல்லது 650 பில்லியன் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பதாகும். ஆனால் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 578 பில்லியன் ரூபாவா மாத்திரமே ஆகும்.   இரண்டாவது உறுதிப்பாடு மே மாதம் 30ம் திகதியன்று பிரகடன படுத்தப்பட்ட வரி முன்மொழிவின் அடிப்படையில் பந்தயம் மற்றும் சூதாட்ட வரி தொடர்பான வரி விகிதங்களை அதிகரிப்பதாகும். சூதாட்டத்திற்கான வருடாந்த வரியை ரூ.500 மில்லியனாகவும், முகவர்கள் மூலம் பந்தயம் கட்டுவதற்கான வருடாந்த வரி ரூ.5 மில்லியனாகவும், நேரடி ஒளிபரப்பு மூலம் பந்தயம் கட்டுவதற்கான வருடாந்த வரி ரூ. 75,000, மற்றும் மொத்த வசூல் மீதான வரி 15% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 4 ஆம் திகதி முன்வரைவு சட்டம் பிரகடன படுத்தப்பட்டாலும், முன்வரைவு சட்டத்திற்கு எந்த திருத்தமும் சமர்ப்பிக்கப்படவில்லை. மே மாத இறுதிக்குள், நிகழ்நிலையில் நிதி வெளிப்படைத்தன்மையை காட்டும்  வகையிலான தளத்தை அமைப்பதற்கான உறுதிமொழி பகுதியளவு நிறைவேற்றப்பட்டுள்ளது. (i) குறிப்பிடத்தக்க பொதுக் கொள்முதல் ஒப்பந்தங்கள், (ii) முதலீட்டுச் சபையால் வழங்கப்பட்ட வரி விலக்களிப்புகளால் பயனடையும் நிறுவனங்களின் பெயர் பட்டியல் மற்றும் (iii) சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வரி விலக்களிப்புகளுக்கு உட்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவதே இந்த தளத்தின் நோக்கமாகும். இத் தகவல்களை அரையாண்டு அடிப்படையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஊழியர்களுடன் கலந்தாலோசித்து தயாரிக்கப்பட்ட புதிய மத்திய வங்கிச் சட்டத்திற்கு பாராளுமன்ற அங்கீகாரம் வழங்குவது நிறைவேற்றப்படாத மூன்றாவது உறுதிமொழியாகும். மார்ச் 7ம் திகதி முன்வரைவுச் சட்டம் வெளியிடப்பட்டாலும், சட்டத்திற்கு எவ்வித திருத்தமும் செய்யப்படவில்லை. மே மாத இறுதியில், கணிப்பான் மூலமாக அடையாளம் காணப்பட்ட ஆறு உறுதிமொழிகளின் முன்னேற்ற நிலை தெரியவில்லை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த உறுதிமொழிகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு தேவையான தகவல்கள் கிடைக்கவில்லை என்பதை இது காட்டுகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுடன் ஒப்பிடுகையில் சில முன்னேற்றங்கள் காணப்பட்ட போதிலும், தரவுகள் இல்லாதது கவலையளிக்கக் கூடியதாகும். சர்வதேச நாணய நிதிய (IMF) நிகழ்ச்சிதிட்டத்தில் சரியான நேரத்தில் முன்னேற்றம் காண்பது இரண்டு நன்மைகளைப் பெற்றுத்தரக்கூடியது என்று வெரிடே ரிசர்ச் குறிப்பிடுகிறது. முதலாவதாக, பெரும்பாலான (அனைத்தும் அல்ல) செயல்கள் பொருள் நன்மைகளை விளைவிக்கும். இரண்டாவதாக, இலங்கையின் ஆட்சி மீதான நம்பிக்கையை மேம்படுத்தி, அதன் மூலம் கடந்தகால கடன் சுமைகளை மறுசீரமைக்கப் பேச்சுவார்த்தைகளுக்கு உதவுவதுடன் எதிர்கால பொருளாதார மீட்சிக்கான பாதையை விரைவுபடுத்த தேவையான பேச்சுவார்த்தைகளுக்கும் உதவுகிறது. 2023 மார்ச் 20 அன்று அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக சர்வதேச நாணய நிதியத்திற்கான (IMF) இலங்கையின் உள்நோக்கக் கடிதத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள 100 அடையாளம் காணப்பட்ட உறுதிமொழிகளை முறையாகக் கண்காணிக்கும் இலங்கையின் முதல் மற்றும் ஒரே தளம் ‘IMF கணிப்பான்’ ஆகும். இத்தளம், அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம், (IMF) தங்களது உறுதிமொழிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நன்கு புரிந்துகொண்டு அவற்றை கண்காணிப்பதற்கு உதவும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

கண்டி (Kandy) ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலை சேர்ந்த ஹரிவதனி என்ற உயர்தர மாணவி காணாமல் போயிருந்த நிலையில் நேற்று (09) சடலமாக கண்டெடுக்கப்பட்டார். குறித்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையிலேயே மாணவியின் பிறந்த நாளான நேற்று தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது மாணவியை யாரும் கடத்தவில்லை என தெரியவந்துள்ளது. உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கண்டி போதன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அணு மின்சார உற்பத்தி: முதலீடுகளில் அதிக ஆர்வம் காட்டும் சீனா

இலங்கையின் அணு மின்சார உற்பத்தித்துறையிலும் முதலீடுகளை மேற்கொள்ளும் முயற்சிகளில் சீனா (China) ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே, அணு மின் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்திருத்தம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருவதுடன் இலங்கை அணுசக்தி சபை, வருங்கால முதலீட்டாளர்களிடமிருந்து திட்டங்களை எதிர்பார்க்கிறது. இந்தநிலையில், சீனாவின் தேசிய அணுசக்தி கழகத்தின் பிரதிநிதிகள், இது குறித்து கலந்துரையாட இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, இலங்கையின் அணு ஆலைக்கான திட்டங்களை சமர்ப்பித்த அமைப்புகளில் சீனாவின் சி.என்.என்.சி நிறுவனமும் உள்ளடங்கியுள்ளது. அது மாத்திரமன்றி, ரஸ்யாவின் (Russia) ரோசாடோமை , பிரான்சின் லெக்ட்ரிகிட் டி பிரான்ஸ (Électricité de France) மற்றும் டென்மார்க்கின் சீபோர்க் (Seaborg) ஆகிய அமைப்புக்களும் தமது திட்டங்களை சமர்ப்பித்துள்ளன. இதற்கிடையில், இலங்கை அரசாங்கத்தின் இந்த திட்டத்துக்கமைய, அண்மையில், சர்வதேச அணுசக்தி நிறுவன நிபுணர்களின் குழு, ஏழு நாள் பாதுகாப்பு மதிப்பாய்வுகளை நடத்தியது. இதன் மூலம், அணு மின் நிலையங்களை உருவாக்குவதற்கான சாத்தியமான தளங்களை, அந்த நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. இதனையடுத்து, வருங்கால முதலீட்டாளர்களிடமிருந்து ஆர்வத்தை வெளிப்படுத்துவதற்காக சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர முயற்சிக்கப்படுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அமெரிக்காவின் (US) அல்ட்ரா அணுசக்தி கழகம் மற்றும் கனடாவின் அணுசக்தி கனடா லிமிடெட் ஆகியவையும் இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனது ஆட்சியின் கீழ் பொலிஸ் திணைக்களம் சுயாதீனமானதாக்கப்படும் : அனுரகுமார

பொலிஸ் திணைக்களம் சுயாதீனமான நிறுவனமாக மாற்றப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மஹரகமவில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரிகளின் உரிமையாளர்களாக அரசியல்வாதிகள் இருக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். தமது ஆட்சியின் கீழ் எதிர்காலத்தில் பொலிஸ் திணைக்களம் மட்டுமன்றி ஒட்டு மொத்த அரச இயந்திரமும் அரசியல் கைப்பாவைகளாக செயற்படுவது தவிர்க்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொலிஸ் திணைக்களத்தின் சுயாதீனத்தன்மையையும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கௌரவத்தையும் உறுதி செய்யக் கூடிய வகையில் ஆட்சி முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்வதனை தடுக்கும் முனைப்புக்களில் ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஈடுபட்டு வருவதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (10.6.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.94 ஆகவும் விற்பனைப் பெறுமதி 307.53 ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377.74 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 392.61 ஆகவும் பதிவாகியுள்ளது. யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319.08 ஆகவும் விற்பனைப் பெறுமதி 332.72 ஆகவும் பதிவாகியுள்ளது. கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215.18 ஆகவும் விற்பனைப் பெறுமதி 224.59 ஆகவும் பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 194.49 ஆகவும் விற்பனைப் பெறுமதி 204.37 ஆகவும் பதிவாகியுள்ளது. சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி218.46 ஆகவும் விற்பனைப் பெறுமதி 228.84 ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடற்கரை பகுதியிலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம் – பொலிஸார் தீவிர விசாரணை..

வாதுவை – பொஹத்தரமுல்ல கடற்கரை பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இவர் 40 முதல் 45 வயதுக்குட்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் நீல நிற காற்சட்டையும் வெள்ளை நிற சட்டையும் அணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.