இலங்கை மாணவர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல் – சமூக வலைத்தளங்களால் வரும் ஆபத்து.
நாட்டில் பாடசாலை மாணவர்களிடையே சமூக வலைத்தளங்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குடும்ப சுகாதாரப் பணியகம் தெரிவித்துள்ளது. அத்துடன் சிறுவர்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் பாலியல் கொடுமைகள் அதிகரிப்பதற்கு பெற்றோரின் பொறுப்பற்ற நடத்தையும் காரணமாகவுள்ளதாகவும் குறித்த பணியகம் தெரிவித்துள்ளது. எனவே, சமூக வலைத்தளங்களால் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை பெற்றோர்கள் புரிந்துக்கொள்வது மிகவும் அவசியம் என குடும்ப சுகாதாரப் பணியகம் வலியுறுத்தியுள்ளது. குழந்தைகள் தற்செயலாக ஆபாசமான மற்றும் வன்முறையான சம்பவங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதால், பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் இவ்விடயத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் குடும்ப சுகாதாரப் பணியகம் வலியுறுத்தியுள்ளது
வடக்கை கண்காணிக்கப் போகும் இந்தியா : இலங்கை அரசிடம் கோரப்பட்டது அனுமதி
வடக்கு மாகாணத்தில் மன்னார் தீவின் மணல் திட்டுகள் உட்பட பல இடங்களில் ஆளில்லா விமான கமராக்களை பொருத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா(india) அனுமதி கோரியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. யோகா பயிற்சிகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் திட்டத்துக்காக என தெரிவித்து இந்த அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த அனுமதியை இலங்கை அரசிடம் கோரியுள்ளது மன்னாரின் மணல் திட்டுகள், மன்னாரின் இராட்சத மரம் மற்றும் நெடுந்தீவு உள்ளிட்ட எட்டு பிரபலமான இடங்களில் ஆளில்லா விமானக் கமராக்களை பொருத்துவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த கடிதம் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
தரமற்ற சவர்க்காரத்தை பயன்படுத்த வேண்டாம்!
தரமற்ற சோப்புகளை பயன்படுத்துவதால் சிசுக்களின் தோலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலை காரணமாக சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தரமற்ற குழந்தை சோப்பை பயன்படுத்துவதாகவும், அதன் விளைவு எதிர்காலத்தில் ஏற்படும் எனவும் அதன் பொருளாளர் திருமதி பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்தார். “இந்த நாட்களில் நாங்கள் குழந்தைகளுக்கு சில ஒவ்வாமைகளைப் புகாரளித்துள்ளோம். இதை ஆராய்ந்தபோது ஒரு விஷயம் புரிந்தது, தரமற்ற குழந்தை சோப்பை பயன்படுத்துவதால் இந்த நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, தாய்மார்கள் குழந்தைகளுக்கான சோப்பைப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய விடயம் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழுடன் கூடிய குழந்தை சோப்பைப் பயன்படுத்துவதேயாகும். குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது. எனவே இன்றல்ல பல வருடங்களில் இதன் பலன் தெரியும். எனவே, குறிப்பாக பொருளாதார சூழ்நிலையில், இதில் கவனமாக இருங்கள்” எனவும் பிரியங்கனி சுசங்கிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி – பங்களாதேஷ் பிரதமர் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சற்று முன்னர் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த சனிக்கிழமை (08) நாட்டிலிருந்து புறப்பட்டார். அந்த விஜயத்தின் போது இன்று (10) இந்த சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
காணி ஏல விற்பனையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்
காணி ஏல விற்பனையாளர்கள் காணிகளை கொள்வனவு செய்பவர்களுக்கு தெரிவிக்காமல் வங்கிகளில் அடமானம் வைப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக பொது கணக்கு குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர், அதற்கான சட்டரீதியான தீர்வொன்றின் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தனகல்லையில் முந்நூறு காணிகள் ஏலத்தில் விடப்பட்டமை தொடர்பிலும், ஏலதாரர்கள் அடமானம் வைத்த காணியை மீட்காத காரணத்தினால் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் கடுமையான கட்டுப்பாடு தேவை எனவும் உள்ளாட்சி அதிகாரிகளுக்கு அதிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இது போன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க தேவையான சட்ட நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஏலம் விடப்பட்ட நிலத்தை வங்கிகளில் அடமானம் வைக்க முடியாது என்ற நிலை உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உயிருக்கு அச்சுறுத்தல்..! விசாரணை தேவையில்லை என்கிறார் ஹர்ஷ டி சில்வா..!
தமக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவின் தலைவர் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார். இதன்படி, ஹர்ஷ டி சில்வாவின் கோரிக்கை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு திணைக்களம் அறிவித்துள்ளது. தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் அறிவித்ததையடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். இதனால் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் வாக்குமூலம் பெறுமாறு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டது. அப்போது விசாரணை தேவையில்லை என்று தெரிவித்தார். விசாரணையை ஆரம்பித்தமைக்காக பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும், நாடாளுமன்ற சிறப்புரிமையின் கீழ் பாராளுமன்றத்தில் தாம் அவ்வாறு கருத்து தெரிவித்ததாகவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தார். அவர் தொடர்பில் அவ்வாறான விசாரணைகள் தேவையில்லை எனவும், தேவைப்பட்டால் மீண்டும் அறிவிப்பதாகவும் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சர்வதேச விமான நிலையத்தில் பெருந்தொகை தங்கத்துடன் சிக்கிய இலங்கையர்..!
சென்னை விமான நிலையத்தில் வைத்து இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெருந்தொகை தங்க நகைகளை கடத்த முற்பட்ட வேளையில் சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 13.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் பெறுமதி சுமார் ஒன்பது கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து வந்த இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட இண்டிகோ விமான நிறுவன ஊழியர் ஒருவருடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். பாரிய தங்க கடத்தல் கும்பல் ஒன்றுடன் தொடர்புடைய ஒவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் தயார்..! நாமல் ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு…
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு பொருத்தமான வேட்பாளரை கண்டுபிடிக்க முடியாவிட்டால், தேர்தலில் போட்டியிட தான் தயார் என நாமல் ராஜபக்ஷ செயற்குழுவிற்கு அறிவித்துள்ளார். கடந்த 07 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக கட்சியின் உத்தியோகபூர்வ உடன்பாடு எட்டப்படவில்லை என்பதுடன் எவரும் எதிர்த்ததாக தெரிவிக்கப்படவில்லை. அக்கட்சியின் தேசிய அழைப்பாளராக ரோஹித அபேகுணவர்தனவின் பெயரையும் நாமல் ராஜபக்ச முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் எவ்வித தயக்கமும் இன்றி பதவியை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், நாமல் ராஜபக்சவின் உள்நோக்கம் குறித்து செயற்குழு உறுப்பினர்கள் குழப்ம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடனை செலுத்த அரசாங்கம் தீர்மானம்!
பெற்றோலிய கூட்டுத்தாபனம் மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றிற்கு செலுத்த வேண்டிய கடனை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சசாகல ரத்நாயக்க, இரு அரச வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாட்டில் எரிபொருள் பிரச்சினை ஏற்படுவதற்கு முன்னரே, பெற்றோலிய நிறுவனத்தின் கடன் சுமை படிப்படியாக அதிகரித்து, எரிபொருள் பிரச்சினை தோன்றியதன் மூலம் கடன் வேகமாக வளர்ந்தது. அரச வங்கிகளை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு நடவடிக்கையாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதேவேளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அந்தந்த வங்கிகளுக்கு 450 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 02 மாத குழந்தை பலி…..
ஓமந்தை – புதியவேலர் – சின்னக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின் வரவேற்பறை சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் குழந்தையொன்று உயிரிழந்தது. இந்த விபத்து நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 02 மாத குழந்தையே உயிரிழந்தது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.