மூன்றாவது தேசிய வைத்தியசாலையாக கராபிட்டிய,…
கராபிட்டிய போதனா வைத்தியசாலையை நாட்டின் மூன்றாவது தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். தற்போது இலங்கையில் அபிவிருத்தியடைந்த தேசிய வைத்தியசாலைகளாக கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள் மட்டுமே உள்ளன. இதன்படி கராபிட்டிய போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது வைத்தியர்கள், தாதியர்கள் போன்றவர்களுக்கு பயிற்சி அளிப்பதில் கராபிட்டிய வைத்தியசாலை சுகாதார துறைக்கு அதிகளவு பங்களிப்புச் செய்வதாக தெரிவித்த அமைச்சர், ருஹுனு பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பயிற்சியை வழங்கும் வைத்தியசாலையாக வருடாந்தம் 1000 இற்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெறுவதாகவும் குறிப்பிட்டார். இதேவேளை, பொத்துவில் ஆதார வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தினால் அபிவிருத்தி செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகும் அமைச்சர் தெரிவித்தார்.
யாழில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்ல இராணுவம் தடை…! பொதுமக்கள் அச்சம்
வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவித்த நிலங்களுக்குள் செல்ல இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர் குறித்த பகுதிகளுக்குள் வெடிபொருட்கள் இருக்கின்றன என்று தெரிவித்தே மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நிலங்களைப் படையினர் மீள ஆக்கிரமிக்கக்கூடும் என்று அஞ்சுவதாக அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அமெரிக்கத் தூதுவரிடம் நிலங்களின் உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர். அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் (Ranil Wickremesinghe) கடந்த மார்ச் 22ஆம் திகதி வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய கிராமங்களான ஜே/244,245,252, 253, 254, ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து 234 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டது. நில உரிமையாளர்களும் அழைக்கப்பட்டு நிகழ்வுகளும் இடம்பெற்ற போதும் அந்த நிலங்களுக்கான பாதை விடுவிக்கப்படவில்லை. இராணுவ முட்கம்பி வேலிகளும் அகற்றப்படவில்லை. இவ்வாறு விடுவிக்கப்பட்ட நிலங்களை உரிமையாளர்கள் இராணுவச் சோதனைச் சாவடி ஊடாக 5 கிலோமீற்றர் தூரம் கால்நடையாகப் பயணித்தே பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இந்த விடயத்தை நிலங்களின் உரிமையாளர்கள் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். இதனால் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குப் பாதை திறக்கப்பட்ட போதும் முட்கம்பி வேலிகள் அகற்றப்படாமலேயே காணப்பட்டன. முட்கம்பிகள் அகற்றப்படாதமை ஏதேனும் காரணத்தைக் கூறி விடுவிப்புச் செய்ததாகக் கூறப்படும் நிலங்களைப் படையினர் மீள ஆக்கிரமிக்கக்கூடும் என்று அஞ்சுவதாக அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அமெரிக்கத் தூதுவரிடம் நிலங்களின் உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர். விடுவிக்கப்பட்ட 234 ஏக்கர் நிலங்களில் 55 ஆயிரம் சதுர அடி நிலங்களில் வெடிபொருள்கள் காணப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டு அந்தப் பகுதிகளுக்குள் நில உரிமையாளர்கள் பயணிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் மூன்று கைதிகளுக்கு பொது மன்னிப்பு.!
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வவுனியாவில் 3 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொது மன்னிப்பின் அடிப்படையில் நடாளாவிய ரீதியில் 10 பெண் கைதிகள் உட்பட 278 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் சிறு குற்றங்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்தாமை போன்ற குற்றங்களுக்காக வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் கே.ஏ.எஸ். அபயரட்ண மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் குறித்த கைதிகளுக்கு ஆலோசனை வழங்கி அவர்களை விடுதலை செய்து வழியனுப்பி வைத்தனர்.
நாளை வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில்..
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் உரித்து தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உரிமங்களை வழங்கி வைக்கவுள்ளார். அத்தோடு வடக்கில் இளைஞர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பொன்றிலும் கலந்து கொள்ளவுள்ளார். இவ்வாறு 10 முக்கிய நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதுடன், வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இவ்விஜயத்தின் போது விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய இலங்கையர்கள்: விசாரணைக்காக விசேட குழு நியமனம்
இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் இலங்கையர்கள் நால்வர் குறித்த விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் குஜராத் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் சென்னையில் இருந்து வருகை தந்த நான்கு பயணிகள் கடந்த 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். நீர்கொழும்பு, பெரியமுல்ல பகுதியை சேர்ந்த 33 வயதான மொஹமட் நுஸ்ரத், கொழும்பு மாளிகாவத்தையை சேர்ந்த 35 வயதான மொஹமட் பாரிஸ், கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்த 27 வயதான மொஹமட் நப்ரான், கொழும்பு 13 ஐ சேர்ந்த 43 வயதான மொஹமட் ரஷ்டீன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். குறித்த நால்வருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த அபு என்ற நபருடன் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்தியாவில் தாக்குதல் நடத்த அபு என்ற குறித்த நபரால் இவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளதாக குஜராத் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சந்தேகநபர்கள் நால்வரும் தற்கொலைத் தாக்குதலுக்கு தயாராக இருந்ததாகவும், அதற்காக அபு என்ற நபர் தலா 4 இலட்சம் இலங்கை ரூபாயை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபு என்ற நபர், கைது செய்யப்பட்டுள்ள குறித்த நான்கு இலங்கையர்களுக்கும் வழங்க தயார் செய்த சில ஆயுதங்களும் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவர்களில், மொஹமட் நப்ரான், நீதிபதி சரத் அம்பேபிட்டியவை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான நியாஸ் நௌபர் எனும் பொட்ட நௌபரின் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த நிலையிலேயே இலங்கையிலும் அவர்கள் குறித்து விசாரணை செய்தவற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மேலும், கைது செய்யப்பட்டுள்ள குறித்த நான்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமும் குஜராத் பொலிஸார் தீவிர விசாரணைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இன்று அதிகாலை நடந்த கோரவிபத்து.. சம்பவ இடத்தில் பலியான சிறுமி
திருகோணமலை – ஈச்சிலம்பற்று, வட்டவன் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 6 வயதுடைய நிதர்சன் ஆதித்யா எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அத்தோடு, இச் சிறுமியின் சகோதரனான 4 வயதுடைய நிதர்சன் அதிரேஸ் எனும் சிறுவன் படுகாயமடைந்துள்ளார். இவ்வாறு படுகாயமடைந்த சிறுவன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறையைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் இரண்டு பிள்ளைகளுடன் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கையிலேயே, குறித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் கணவன், மனைவி இருவரும் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளனர். உயிரிழந்த சிறுமியின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்…
விசாக பூரணை தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசாக தோரணைகள், தானசாலைகள் உள்ளிட்ட சர்வமத நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இதற்காக 18,000இற்கும் அதிகமான பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நாடு முழுவதும் 419 வெசாக் வலயங்களும் 321 விசாக தோரணைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மீண்டும் அதிகரிக்கும் சம்பளம்…
இலங்கையில் 13,000க்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, இலங்கை கிராம சேவையாளர் சேவையை ஸ்தாபிப்பதற்காக, சேவைக்கான அரசியலமைப்பு வரைவு அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சார்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த இன்று நாடாளுளுமன்றத்தில் பதில் அளிக்கும் போதே இதனை தெரிவித்தார். இது மிகப்பெரிய வெற்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, கிராம அதிகாரிகளுக்கு GN என்ற புதிய சம்பளக் குறியீடு கிடைக்கும் என விளக்கமளித்துள்ளார்.
இலங்கையில் கால்நடைகளிடையே பரவும்நோயினால் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுமா?
நுவரெலியா மாவட்டத்தில் கால்நடைகளுக்கு, லைசர்ஜிக் அமிலம் டைதிலாமைடு (LSD) என்ற தோல் நோய் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கும் கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார். அத்தோடு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலுள்ள கால்நடைகளுக்கும் இந்த நோய் பரவியிருந்த நிலையில், தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதால் அதனை கட்டுப்படுத்த முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த நோயைக் கட்டுப்படுத்துவற்கு தற்போது கிடைக்கப்பெறும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை போதுமாக இல்லை என்பதால், அவசர கால கொள்வனவின் கீழ் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள கால்நடைகளின் பால் மற்றும் இறைச்சியை உட்கொள்வதனால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார். ஆகவே, இந்த நோய் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், நோய் தாக்குத்துக்கு உள்ளான கால்நடைகளிடமிருந்து மனிதர்களுக்கு LSD பரவும் அபாயம் இல்லை என வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார். இருப்பினும் கடந்த ஆறு மாத காலத்துக்குள் மத்திய மாகாணத்தில் 135 கால்நடைகள் அம்மை நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
300,000 வாடிக்கையாளர்களுக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம்…!
சீரற்ற வானிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 300,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது உத்தியோகபூர்வ X கணக்கில் குறிப்பொன்றையிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். 36,900 மின்சார துண்டிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மின்விநியோகத்தை சீரமைக்க மேலதிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களில் மின்சாரம் விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மின்சார பாவனையாளர்கள் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு அல்லது குறுஞ்செய்தி அனுப்பி மின்வெட்டு தொடர்பில் அறிவிக்க முடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.