யாழில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய கனடா வாசிகள் இருவர் கைது!
யாழ்பாணத்தில்(Jaffna) உள்ள வீடொன்றினுள் அத்து மீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவில் (Canada) இருந்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் (Chunnakam) காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் அத்துமீறி நுழைந்த இருவர் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் தாக்குதலாளிகள் இருவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் கனடா நாட்டில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்தவர்கள் என்பதும் , கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்ட இருவரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
பிரித்தானியாவில் மதிப்புமிக்க மாஸ்டர்செப் விருதை வென்ற இலங்கைத் தமிழன்..!
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பிரித்தானிய கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் பிரின் பிரதாபன், தொலைக்காட்சி ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட மிகப்பெரிய சமையல் போட்டியின் 20வது தொடர் முடிவில் வெற்றிபெற்று, மாஸ்டர்செஃப் செம்பியன் 2024 என்ற மதிப்புமிக்க பட்டத்தை வென்றுள்ளார். இந்நிலையில், நடுவர்களான ஜோன் டோரோட் மற்றும் கிரெக் வாலஸ் ஆகியோரால் மாஸ்டர்செஃப் கிண்ணம் பிரினுக்கு வழங்கப்பட்டது. இதன்படி, மாஸ்டர்செஃப் வரலாற்றின் ஒரு அங்கமாகி 29வயதாக பிரின், இரண்டு தசாப்தகால சிறந்த செம்பியன்களுடன் இணைந்துள்ளார். எட்டு வாரங்கள் கடினமான சவால்களுக்குப் பின் 57 சமையல் போட்டியாளர்களை கடந்து, பிரின் வெற்றி பெற்றுள்ளார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தனது பெற்றோரே, உணவு மற்றும் சுவையின் மீதான தனது விருப்பத்தை ஊக்குவித்ததாக பிரின் குறிப்பிட்டுள்ளார். அற்புதமான, காரமான சமையல் பின்னணியை தமது பெற்றோரிடமிருந்து பெற்றதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமது சமையல் பகுதிகள் உண்மையிலேயே இலங்கையின் தமிழ் இலங்கை பாரம்பரியம் மற்றும் தமது பிரித்தானிய வளர்ப்பின் கலவையாகும் என்று பிரின் குறிப்பிட்டுள்ளார்.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு 278 கைதிகள் விடுதலை..!
வெவாக் பண்டிகையை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் 278 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வெலிக்கடை, மஹர சிறைச்சாலைகள் உள்ளிட்ட நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர். இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ள கைதிகளில் பத்து பேர் பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வெசாக் தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளை அவர்கள் உறவினர்கள் தடுப்புக் கூண்டுக்கு வௌியே பார்வையிடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எரிபொருள் விற்பனையில் திடீர் மாற்றம்..!
வெசாக் வாரம் ஆரம்பமாகிய நிலையில் எரிபொருள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக எரிபொருள் விற்பனை குறைந்திருந்த நிலையில் திடீரென அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த சில நாட்களாக எரிபொருள் பாவனை அதிகரித்து வருவதால், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் வழமையை விட அதிகமான எரிபொருள் இருப்புக்களை விண்ணப்பம் செய்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் எரிபொருள் விற்பனை மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தமிழ், சிங்கள புத்தாண்டு தினங்களில் மட்டும் சில விற்பனை நடந்ததாக கூறுகிறார்கள். மேலும், வெசாக் நிறைவடைந்ததன் பின்னர் எரிபொருள் விற்பனை முன்பு போலவே குறையும் என எரிபொருள் விநியோகஸ்தர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளத்தில் வைரலான காணொளியின் உண்மை தன்மை!
அவிசாவளையில் இருந்து கலிகமுவ நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியை பரிசோதிக்கும் போது பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் சாரதி ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய உரையாடலின் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, குறித்த காணொளி தொகுக்கப்பட்டுள்ளதாக (Editing) தெரிவித்தார். பிந்தெனிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கும் இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்கையில், “வாகன வருமான உத்தரவுப் பத்திரம் மற்றும் காப்பீட்டு சான்றிதழில் வெவ்வெறு பெயர்கள் இருந்துள்ளன. சாரதியாக மற்றொருவர் இருந்துள்ளார். வாகன வருமான உத்தரவுப் பத்திரம் மற்றும் காப்பீட்டு சான்றிதழின் முகவரியும் வேறுபட்டுள்ளன. சாரதி வேறு பகுதியில் வசிப்பவர். இந்த காரணங்களால், வாகனத்தின் உரிமையை மாற்றாதது குறித்து அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது . நீதிமன்ற உத்தரவின்படி ரூ. 5,000 அபராதமும் செலுத்தப்பட்டுள்ளது.” என்றார்.
சம்பள உயர்வை உறுதிப்படுத்தி அதி விசேட வர்த்தமானி…
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை 1700 ரூபாவாக அதிகரிப்பதை உறுதிப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று தொழில் ஆணையாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே 01ஆம் திகதி கொட்டகலையில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார். பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளமாக 1350 ரூபா மற்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 350 ரூபா என்ற வகையில் நாளாந்தம் 1700 ரூபா சம்பளத்தை அதிகரிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டிருந்தது. பின்னர் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்கான காலவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை உறுதிப்படுத்தி தற்போது அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வௌியிடப்பட்டுள்ளது.
ஊசி மருந்தால் 31 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழப்பு…
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஊசி மருந்து ஏற்றப்பட்டதன் பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 17வது வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு Cefuroxime என்ற நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஊசி மருந்த போடப்பட்ட பின்னர் அந்த நபர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் 31 வயதுடைய ஆண் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர், மருத்துவர் குமார விக்கிரமசிங்கவிடம் “அத தெரண” வினவியது. குறித்த நபரின் மரணம் தொடர்பில் ஏற்கனவே விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நோய் எதிர்ப்பு சக்தி மருந்தை செலுத்தியதால் மரணம் நிகழ்ந்ததா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பதை விசாரணைகள் ஊடாக கண்டறிய முடியும் என பணிப்பாளர் தெரிவித்தார். எவ்வாறாயினும், உயிரிழந்த நோயாளிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்தின் வகை, ஏற்கனவே பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் குமார விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
வானிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை..!
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. இது தொடர்பான அறிவித்தல் இன்று (23) இரவு 10.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலின் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை நாளைய தினம் (24) வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் வாய்ப்புள்ளதால் மேற்குறிப்பிட்டோர் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. பின்னர் இது வங்காள விரிகுடாவின் வடகிழக்கு நோக்கி பயணித்து மேலும் அதிகரிக்கக்கூடும். அந்த நேரத்தில், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தென்கிழக்கு அரேபிய மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் மணிக்கு 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். மேலும் மேலே உள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள கடல் பகுதிகளுக்கு அறிவிப்பு வரும் வரை கடற்படையினர் மற்றும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பகுதிகளில் உள்ளவர்கள் உடனடியாக கரைக்கு வருமாறும், எதிர்வரும் அறிவிப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றமை காரணமாக தற்போது நிலவும்மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 150 மில்லி மீற்றர் அளவான மிக கனமழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான கனமழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.