வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவித்த நிலங்களுக்குள் செல்ல இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்
குறித்த பகுதிகளுக்குள் வெடிபொருட்கள் இருக்கின்றன என்று தெரிவித்தே மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நிலங்களைப் படையினர் மீள ஆக்கிரமிக்கக்கூடும் என்று அஞ்சுவதாக அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அமெரிக்கத் தூதுவரிடம் நிலங்களின் உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் (Ranil Wickremesinghe) கடந்த மார்ச் 22ஆம் திகதி வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய கிராமங்களான ஜே/244,245,252, 253, 254, ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து 234 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டது.
நில உரிமையாளர்களும் அழைக்கப்பட்டு நிகழ்வுகளும் இடம்பெற்ற போதும் அந்த நிலங்களுக்கான பாதை விடுவிக்கப்படவில்லை.
இராணுவ முட்கம்பி வேலிகளும் அகற்றப்படவில்லை. இவ்வாறு விடுவிக்கப்பட்ட நிலங்களை உரிமையாளர்கள் இராணுவச் சோதனைச் சாவடி ஊடாக 5 கிலோமீற்றர் தூரம் கால்நடையாகப் பயணித்தே பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விடயத்தை நிலங்களின் உரிமையாளர்கள் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். இதனால் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குப் பாதை திறக்கப்பட்ட போதும் முட்கம்பி வேலிகள் அகற்றப்படாமலேயே காணப்பட்டன.
முட்கம்பிகள் அகற்றப்படாதமை ஏதேனும் காரணத்தைக் கூறி விடுவிப்புச் செய்ததாகக் கூறப்படும் நிலங்களைப் படையினர் மீள ஆக்கிரமிக்கக்கூடும் என்று அஞ்சுவதாக அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அமெரிக்கத் தூதுவரிடம் நிலங்களின் உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.
விடுவிக்கப்பட்ட 234 ஏக்கர் நிலங்களில் 55 ஆயிரம் சதுர அடி நிலங்களில் வெடிபொருள்கள் காணப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டு அந்தப் பகுதிகளுக்குள் நில உரிமையாளர்கள் பயணிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.