நெடுந்தீவு தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!
நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் எழுவை தீவுகளுக்கு குறிகாட்டுவான் மற்றும் கண்ணகை துறைகளிலிருந்து முன்னெடுக்கப்படும் படகு போக்குவரத்து நாளை (24) இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை (24) கடற்கொந்தளிப்பாக இருக்குமென எதிர்வு கூறப்பட்டதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நெடுந்தீவு , அனலைதீவு மற்றும் எழுவை தீவுகளுக்கு குறிகாட்டுவான் மற்றும் கண்ணகை அம்மன் இறங்குதுறையிலிருந்து முன்னெடுக்கப்பட்டுவரும் படகு போக்குவரத்து இடம்பெறமாட்டாது என அறிவித்துள்ளது. அதேவேளை, எதிர்வரும் 25ம் திகதி வரை இலங்கையின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது எனவும் தாழமுக்கம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரயில் மோதி மூன்று இளைஞர்கள் பலி!
காலி, புஸ்ஸ, பிந்தலிய சந்தியில் உள்ள பாதுகாப்பு கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரயில் கடவையின் பாதுகாப்பற்ற சமிஞ்சை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்த மூன்று இளைஞர்களும் 17 முதல் 19 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். மருதானையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த கடவையில் உரிய முறையில் சமிஞ்சை செயற்படவில்லை என நேரில் பார்த்த பொது மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் மூன்று பேர் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வௌியானது பெறுபேறுகள்…!
உற்பத்தி மற்றும் மீன்பிடி துறைகளுக்காக நடைபெற்ற கொரிய மொழிப் புலமை பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இதில் 3,422 விண்ணப்பதாரர்கள் சித்தியடைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்தப் பரீட்சைக்கு 3,580 விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்ததுடன், மொத்தப் பரீட்சார்த்திகளில் 95.6 வீதமானவர்கள் சித்தியடைந்துள்ளனர். பரீட்சை பெறுபேறுகள் www.slbfe.lk என்ற இணையதளத்தில் மே 27ஆம் திகதி வெளியிடப்படும் என்றும், பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கான மருத்துவப் பரிசோதனை மே 28ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. அத்துடன், பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகத் பரீட்சை பணியகத்தின் மாகாண அலுவலகங்கள், குடிவரவு வள மத்திய நிலையங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் ஜூன் 06, 07 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளன..
வங்கக்கடலில் உருவாகிறது தீவிர புயல்…
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக மாறும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தத் தீவிர புயலுக்கு ‘ரீமல்’ (Remal) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட தகவலில், ‘வங்கக் கடலின் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதியில், வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. தொடர்ந்து, அந்தப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளது. வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் இந்தக் காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை ( 24) வலுப்பெறும். அது மேலும் வலுப்பெற்று நாளை மறுநாள் (25) புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக் கடலில் உருவாகவுள்ள தீவிர புயலுக்கு ‘ரீமல்’ (Remal) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஓமன் நாடு பரிந்துரைப்படி புயலுக்கு ரீமல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்புயல் எதிர்வரும் 26 ஆம் திகதி பங்களாதேஷ் அருகில் கரையை கடக்கலாம். அப்போது மணிக்கு 100 முதல் 120 கிமீ வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசக் கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
வட்டவளையில் முறிந்து வீழ்ந்த மரம்: மலையக மார்க்கத்திலான போக்குவரத்து பாதிப்பு..
வட்டவளை நகரை அண்மித்த பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ள நிலையில் ஹட்டன் – கண்டி பிரதான வீதியூடான போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (23) பகல் இடம்பெற்றுள்ளது. ஹட்டனிலிருந்து கினிகத்தேனை வழியூடாக கண்டி, கொழும்பிற்கு பயணிக்கும் வாகனங்களும் கண்டியிலிருந்து ஹட்டனிற்கு செல்லும் வாகனங்களும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பலத்த மழையுடனான சீரற்ற வானிலைக்கு மத்தியில் பயணிகள் மாற்றும் வாகனங்கள் நீண்ட நேரமாக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் உதவியுடன் வட்டவளை பொலிஸார் மரத்தின் கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு சீனா அரசாங்கத்தினால் உதவிப் பொருட்கள்…!
வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய சீனா அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள 1500 மில்லியன் ரூபாய் பெறுமதியான உதவிப் பொருட்கள் உரியவர்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று(23) நடைபெற்றது. சூம் தொழினுட்பத்தினூடாக இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில் திணைக்கள மாவட்ட பணிப்பாளர்களுக்கான ஆலோசனைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய சீன அரசாங்கத்தினால் 500 மில்லின் பெறுமதியிலான மீன்பிடி வலைகள், 500 மில்லியன் பெறுமதியிலான வீட்டுத் திட்டம், 500 மில்லியன் பெறுமதியிலான அரிசி போன்றவை அனுப்பி வைக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடாளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் வேலைநிறுத்தப் போராட்டம்!
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இந்த நிலையில், குறித்த போராட்டமானது எதிர்வரும் 28 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது. உத்தியோகபூர்வ சீருடை கொடுப்பனவிற்கு இணையாக ஏனையவற்றுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்படவில்லை, விசேட கொடுப்பனவை அதிகரிப்பதற்கான சுற்றறிக்கை 15 பிரிவினரை விடுத்து வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். அத்தோடு, தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார துறையின் 72 தொழிற்சங்கங்கள் கடந்த நாட்களில் மாகாண மட்டத்தில் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தன
சீரற்ற வானிலையால் யுவதி ஒருவர் பலி
முந்தலம் 61 ஆவது சந்தியில் உள்ள வீதியொன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு யுவதிகள் மீது இன்று (23) பிற்பகல் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் யுவதி ஒருவர் உயிரிழந்தார். மற்றைய யுவதி ஆபத்தான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 23 வயதுடைய யுவதி ஒருவரே உயிரிழந்தார். குறித்த யுவதிகள் இருவரும் வில்பத்து பகுதியிலிருந்து சிலாபம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, வீதிக்கு அருகில் இருந்த மரம் ஒன்று பலத்த காற்றினால் அவர்கள் மீது சரிந்து வீழ்ந்துள்ளது. பின்னர் பிரதேசவாசிகள் மரத்தை அகற்றிய போது ஒருவர் உயிரிழந்து காணப்பட்டதுடன், மற்றைய யுவதி பலத்த காயமடைந்திருந்தார். இதேவேளை, இன்று காலை நிலவரப்படி, சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது. கனமழையுடன் கூடிய பலத்த காற்றின் காரணமாக மரங்கள், முறிந்து வீழ்ந்தமையால் வீடுகள் உட்பட உடைமைகளும் சோதமைந்துள்ளன. கனமழையுடன் ஹங்வெல்ல – வகை பிரதேசத்தில் வீதியில் முறிந்து விழுந்த மரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வகை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்தார். மேலும், களு கங்கையின் அத்தனகலு வடிநிலம் மற்றும் குடா களுகங்கையின் உபகுளங்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கேகாலை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு..!
கெபித்திகொல்லேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யகாவெவ புதர் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமாக இணைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்ததாக பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. கெபித்திகொல்லேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை தேசிய புலனாய்பு முகமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொண்ட குறித்த மர்ம நபர், பிரதமர் மோடியைக் கொலை செய்யப் போவதாக ஹிந்தியில் பேசிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. இதுபோன்ற மிரட்டல்கள் வழக்கமாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்குதான் வரும். ஆனால், என்ஐஏ அலுவலகத்துக்கே தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் இது குறித்த தீவிர விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.