Search
Close this search box.
ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய இலங்கையர்கள்: விசாரணைக்காக விசேட குழு நியமனம்

இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் இலங்கையர்கள் நால்வர் குறித்த விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.

இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் குஜராத் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் சென்னையில் இருந்து வருகை தந்த நான்கு பயணிகள் கடந்த 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

நீர்கொழும்பு, பெரியமுல்ல பகுதியை சேர்ந்த 33 வயதான மொஹமட் நுஸ்ரத், கொழும்பு மாளிகாவத்தையை சேர்ந்த 35 வயதான மொஹமட் பாரிஸ், கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்த 27 வயதான மொஹமட் நப்ரான், கொழும்பு 13 ஐ சேர்ந்த 43 வயதான மொஹமட் ரஷ்டீன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

குறித்த நால்வருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த அபு என்ற நபருடன் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்தியாவில் தாக்குதல் நடத்த அபு என்ற குறித்த நபரால் இவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளதாக குஜராத் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சந்தேகநபர்கள் நால்வரும் தற்கொலைத் தாக்குதலுக்கு தயாராக இருந்ததாகவும், அதற்காக அபு என்ற நபர் தலா 4 இலட்சம் இலங்கை ரூபாயை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபு என்ற நபர், கைது செய்யப்பட்டுள்ள குறித்த நான்கு இலங்கையர்களுக்கும் வழங்க தயார் செய்த சில ஆயுதங்களும் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவர்களில், மொஹமட் நப்ரான், நீதிபதி சரத் அம்பேபிட்டியவை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான நியாஸ் நௌபர் எனும் பொட்ட நௌபரின் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே இலங்கையிலும் அவர்கள் குறித்து விசாரணை செய்தவற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள குறித்த நான்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமும் குஜராத் பொலிஸார் தீவிர விசாரணைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring

More News