Search
Close this search box.

எனது குழந்தை இறக்க காரணம் ;கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் – முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு.

எனது குழந்தை இறக்க காரணம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை மருத்துவர்கள் என கிளிநொச்சி விசுவமடுவைச் சேர்ந்த ராஜாதுரை சுரேஸ்(Rajathurai Suresh) என்பவர் மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார். குழந்தை பேற்றிற்கான மருத்துவ ஆலோசனை நிலையமாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையினை பயன்படுத்தி வந்த தன்னை முறையற்ற முறையில் தவறாக வழிநடத்தியதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இதனால் குழந்தையை இழந்ததோடு தன் மனைவியின் கருப்பையையும் இழந்து, சந்ததி எதிர்காலத்தை தொலைத்து விட்டு நிற்பதாகவும் அதற்கு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்களின் அக்கறையற்ற செயற்பாடுகளே காரணமாகும் எனவும் அவர் குற்றம் சாட்டுகின்றார். வடக்கின் தன்னார்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிலரின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட ஊழலுக்கு எதிரான பிரஜைகள் புலனக் குழுவில் தனக்கு நேர்ந்த துயரை, இழைக்கப்பட்ட அநீதியை ராஜதுரை சுரேஸ் பதிவிட்டிருந்தார். இலங்கையின் வடக்கில் இடம்பெற்ற பல முறைகேடுகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில் அறிந்தவர்கள் அல்லது அவற்றால் பாதிக்கப்பட்டவர் ஊழலுக்கு எதிரான பிரஜைகள் புலனக் குழுவில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறித்த புலனக் குழுவில் ராஜதுரை சுரேஸ் இட்டிருந்த அந்த பதிவு பின்வருமாறு அமைந்திருந்தது. கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்களால் தன் குழந்தையையும் தன் மனைவியின் கருப்பையும் தான் இழந்து நிற்பதாக குறிப்பிடுகின்றார். எனது மனைவி கர்ப்பமாக இருந்ததால் முதல் பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சென்றிருந்தேன். மனைவியை பரிசோதித்த வைத்தியர், குழந்தை பிறக்கும் என 24.06.2023 திகதியை வழங்கினார். 09.06.2023 அன்று எனது மனைவியை இறுதிப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு பரிசோதனை செய்த BOG மருத்துவரால் 12.06.2023 திகதி கொடுக்கப்பட்டு, இந்த திகதியில் குழந்தையை பெற்றுக்கொள்ள தயாராகுங்கள் என்று கூறினார். எங்கள் கிளினிக் கோப்புறையிலும் திகதியை பதிவு செய்தார். அதேபோல் 12.06.22023 அன்று குழந்தையைப் பெற்றெடுக்கத் தயாராக என் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். முதலில் பரிசோதித்த மருத்துவர் இல்லாத போது அதே தரத்தில் உள்ள மற்றொரு BOG மருத்துவர் பரிசோதனை செய்து விட்டு இந்த திகதியில் உங்களை யார் வரச் சொன்னார்கள்? என்று கேட்டார்.அவருக்கு கிளினிக்கை கொப்பியை காட்டினோம். பின்னர் அவர் திகதியை மாற்றி விட்டு 26.06.2023 அன்று வருமாறு கூறினார். மீண்டும் 26.06.2023 அன்று என் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அன்றைக்கு குழந்தை பிறக்கவில்லை. வயிற்று வலி இல்லாத காரணத்தால் அவர்கள் 27.06.2023 காலை மருந்து ஏற்றினார்கள். காலையிலிருந்து மாலை வரை முயற்சித்தார்கள்.ஆனால் எந்த மருத்துவரும் பிரவச அறைக்கு வரவில்லை. நான் சென்று குழந்தை இன்னும் பிறக்கவில்லையா? என்று கேட்டேன். நாங்கள் மீண்டும் மருந்து ஏற்றியுள்ளோம். காத்திருங்கள் என்று தாதியர் ஒருவர் என்னிடம் கூறினார். இரவு 7 மணி வரை குழந்தையை பிரசவிப்பதற்காக மனைவி முயற்சி செய்தும் முடியவில்லை.மனைவி தன் சுய நினைவினை இழந்து கொண்டிருந்ததால் குழந்தையின் துடிப்பும் குறைந்து கொண்டே வந்தது. அப்போது என் மனைவி,என்னால் முடியாதுள்ளது.குழந்தையை காப்பாற்றுங்கள் என்று கத்தியுள்ளார்.பின்னர் இரவு 7:30 மணிக்கு அவசர அவசரமாக ஆப்ரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்றார்கள். பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக ஆறு வைத்தியர்கள் வந்தார்கள். மிக வேகமாக சத்திர சிகிச்சை செய்தார்கள். அவர்களின் முயற்சியின் முடிவில் நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் என்னிடம் வந்த குழந்தை இறந்து விட்டது. கர்ப்பப்பையை நீக்கி விட்டோம். அம்மாவை மட்டும் காப்பாற்றி விட்டோம் என்று சொன்னார்கள். 10 மாதம் வரை பிள்ளையின் வரவிற்காக காத்திருந்த, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையை நம்பியிருந்த எனக்கும் எனது மனைவிக்கும் கிளிநொச்சி வைத்தியசாலையால் சொல்லப்பட்ட பதில் இவ்வளவு மோசமானதாக இருந்தது. பின்னர் அறிந்தேன். 12ம் திகதி மனைவியை பரிசோதித்து பார்த்த வைத்தியர் விடுமுறையில் சென்று இருந்ததால் அவருக்கு பதிலாக பதில் கடமைக்கு வந்த வைத்தியர் (இரு வைத்தியர்களும் ஒரே தகைமை கொண்டவர்கள்) அவர் விடுமுறை முடிந்து மீண்டும் வரும் திகதியைத் தான் 26 என மாற்றி எனது மனைவியை வைத்தியசாலைக்கு கொண்டு வரும்படி எழுதியிருந்தார். இவர்களுடைய திகதி மாற்றமும் நேர காலத்தை கவனத்திற்கு கொள்ளாமல் செயல்பட்டதும் எனது குழந்தை இறக்க காரணம். அது மட்டும் இல்லாமல் எனக்கு இனி ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடியாமல் மனைவி உடைய கருப்பையைக் கூட அகற்றியுள்ளார்கள். இது தொடர்பாக கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தேன்.இது வரைக்கும் எனக்கு தகுந்த பதில் எதுவும் அவர்களிடம் இருந்து கிடைக்கவில்லை. எனவே துறைசார்ந்த பொறுப்பான பொறுப்பதிகாரிகள் சம்பந்தப்பட்ட வைத்தியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதோடு அது, இது போன்று வேறு யாருக்கும் இனிவரும் காலங்களில் நடக்காதிருக்க உதவும் படி அந்த நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என தன் கருத்துக்களை மனமுருகி அவர் முன் வைத்திருந்தார். இந்த நிகழ்வுகள் தொடர்பிலான பதிவுகளை அவர் தன்னகத்தே வைத்திருப்பதாகவும் யாரொருவர் இது தொடர்பில் வினவும் போதும் தன்னால் நடந்தவற்றை எடுத்துக்கூற முடியும் என அவருடன் உரையாடிய வேளை குறிப்பிட்டிருந்தார் என்பது இங்கே சுட்டிக் காட்டத்தக்கது. கர்பகால பராமரிப்பு மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கான ஏற்பாடாக குடும்பநல உத்தியோகத்தர்களின் சேவை இருந்து வரும் சூழலில் அது ஏன் இவர்களுக்கு சரிவர கிடைக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். விசுவமடுவில் வாழ்ந்து வரும் அவர்கள் மாவட்ட வைத்தியசாலைக்கு சென்று ஆலோசனை பெற்று குழந்தை பெற முயற்சிக்கப்பட்டது ஏன்? குழந்தையை பெற்றுக்கொள்ள கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையினை தெரிவு செய்திருந்த போதும் ஆலோசனை வழிகாட்டல்களை பிரதேச குடும்ப நல உத்தியோகத்தர்கள் செய்திருக்கலாம். குடும்ப நல உத்தியோகத்தர்கள் சரிவர தங்கள் கண்காணிப்பை மேற்கொண்டு அவர்களுக்கு வழிகாட்டல்களை செய்திருக்க வேண்டும். அப்போது குழந்தை பெற்றுக்கொள்வதற்கான உரிய நேரத்தினை அவர்களுக்கு தெளிவுபடுத்தியிருக்கலாம்.அத்தோடு குழந்தையின் வளர்ச்சி மற்றும் தாயின் சுகாதார நிலைமைகளை அவதானித்தவாறு இருந்திருக்கலாம். அத்தகைய செயற்பாடுகள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான இறுதி நேரத்தில் பெருமளவில் உதவியாக இருந்திருக்கும் என குடும்ப நல உத்தியோகத்தர் ஒருவருடன் இது தொடர்பில் கருத்துக்களைக் கேட்டபோது அவர் இவ்வாறு விபரித்திருந்தார். மதிப்பு மிக்க துறையாக வைத்தியத்துறை இருப்பதோடு புவியில் வாழும் கடவுளாக வைத்தியர்கள் மதிக்கப்பட்டு வரும் சூழலில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியர்களின் செயற்பாடு மன்னிக்க கூடியதல்ல என தம் விசனத்தினை வெளிப்படுத்தும் சமூக ஆர்வலர்கள் பலர் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை வேண்டும் என குறிப்பிடுகின்றனர். வடக்கில் பல துறைகளில் ஊழல் மோசடிகள் நடைபெற்று வருகின்றதும் அது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியும் பல சந்தர்ப்பங்களில் அவை தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் மோசடிகள் உறுதி செய்யப்பட்டும் எத்தகைய சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படாதது ஏன் என்ற கேள்வியும் அவர்களிடையே எழுவதனையும் சுட்டிக்காட்டலாம். சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது மீண்டுமொரு தடவை அது போல் ஊழல் மோசடிகள் நடைபெறுவதை தடுப்பதற்காகவே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. வடக்கில் உள்ள தமிழர்களிடம் உள்ள ஊழலுக்கு எதிராக போராடும் ஆற்றலும் ஊழலற்ற ஒரு தேசம் வேண்டும் என்ற ஆர்வமும் தெளிவும்  இலங்கை அரசாங்கத்திற்கு இருப்பதாக தெரியவில்லை. அதன் செயற்பாடுகள் அதனை வெளிப்படுத்துவதாகவும் இல்லை என சமூக விடய கற்றலாளர் குறிப்பிடுவது பற்றியும் சிந்திக்க தலைப்பட வேண்டும்.      

யாழில் அதிகரித்து வரும் விபத்துக்கள்!

வீதி விபத்துக்கள் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வைத்திய நிபுணர் கந்தையா மணிதீபன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் காணப்பட்டதை விட தற்பொழுது விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து யாழ். வைத்தியசாலையில் அதிகமான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். யாழ். போதனா வைத்தியசாலை என்பது வட மாகாணத்தில் மிகப்பெரிய போதனா வைத்தியசாலை இங்கு விபத்து பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 5 வருடங்கள் ஆகும் நிலையில், அதிகமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருவதை நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக 16 தொடக்கம் 40 வயதுக்குட்பட்டவர்கள் அதிகமாக விபத்துக்களுக்கு உள்ளாகின்றனர். அதிலும் வட மாகாணத்தில் யாழ். மாகாணத்தில் அதிகளவிலான விபத்துக்கள் ஏற்படுகின்றது என தெரிவித்தார்.

முல்லைத்தீவில் ஹையர்ஸ் ரக வாகனம் விபத்து : ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு (Mullaitivu) ஏ-09 வீதியில் திருமுருகண்டிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (11.07.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹையர்ஸ் ரக வாகனம் ஒன்று முன்னே சென்று கொண்டிருந்த பாரஊர்தி ஒன்றுடன் மோதி குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நால்வரும் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் மேலும் மனித எச்சங்கள்!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியி மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 6 வது நாளான நேற்று (10) 3 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்தோடு ஏற்கனவே இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் நிறைவு நாட்களில் அடையாளம் காணப்பட்ட 4 மனித எச்சங்கள் அதழ்தெடுக்கப்படாது காணப்படுகின்ற நிலையில், ஏற்கனவே இரண்டு கட்டங்களிலும் அகழ்ந்தெடுக்கப்பட்ட 40 மனித எச்சங்களுக்கு மேலதிகமாக 7 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் இவை அகழ்தெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், ஆறாம் நாள் அகழ்வாய்வுச் செயற்பாடுகள் நேற்று (10) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல்  பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்ட குழுவினர் தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் இந்த ஆறாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றன. இரண்டாம் நாளாகவும் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகத்தின் மனித உரிமைகள் அலுவலர் செல்ரின் அகிலன் அவர்கள் அகழ்வு பணிகளை கண்காணிதார். அந்தவகையில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக கொக்கிளாய் – முல்லைத்தீவு பிரதான வீதியின் அகழப்பட்டு, அகழ்வாய்வுச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் 3 மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளது. மேலும் அவ் எலும்புக் கூட்டுத்தொகுதிகளோடு  துப்பாக்கி சன்னங்கள் மற்றும் இராணுவ முகாம்களில் பயன்படுத்தப்படும் வேலிகம்பிகளின்  துண்டுகள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அடையாளப் படுத்தப்பட்டுள்ள 7 மனித எச்சங்களையும் வரும் நாட்களில்  முழுமையாக வெளியே எடுக்க முடியும் என அகழ்வில் ஈடுபட்டுள்ள தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் மனித உரிமை சட்டத்தரணி நிரஞ்சன் ஆகியோர் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த முன்னாள் பருத்தித்துறை நகரசபை தவிசாளர்

யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் தவிசாளராக இருந்த வேலுப்பிள்ளை நவரத்தினராசா உயிரிழந்துள்ளார். கடந்த 29ஆம் திகதி (29.06.2024) முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த போது புளியம்பொக்கணைப் பகுதியில் வீதியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பற்ற சமிக்ஞையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியது. இந்நிலையில் அவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்து நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். எனினும். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4:00 மணியளவில் மரணமடைந்துள்ளார். முன்னதாக இவர் பருத்தித்துறை நகரசபையில் சில மாதங்கள் நகரபிதாவாக கடமையாற்றியுள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 13 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை  கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடித்த பதின்மூன்று இந்திய மீனவர்கள்  இலங்கை கடற்படையினரால் இன்றைய தினம் (11) கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகையும் அதிலிருந்த பதின்மூன்று இந்திய மீனவர்களையுமே, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைதான மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று, யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கையளித்து ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த வர்த்தகர்களுக்கு அஞ்சலி: புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தால் ஏற்பாடு

புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்துக்குட்பட்ட பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு உயிரிழந்த வர்த்தகர்களை நினைவுகூறும் விதமாக புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று புதன்கிழமை அஞ்சலி நிகழ்வொன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வர்த்தகத்தை மேற்கொண்டு உயிரிழந்த 15 வர்த்தகர்களின் படங்கள் வைக்கப்பட்டு அவர்களுக்கு ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. உயிரிழந்த வர்த்தகர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க நிர்வாக உறுப்பினர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் மீண்டும் அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச்சாவடி…

மன்னார் பிரதான பாலத்தடியில் சில வருடங்களாக அமைக்கப்பட்டிருந்த இராணுவ சோதனைச் சாவடி கடந்த சில வாரங்களுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளமை குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். எனினும், கொழும்பு- அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவமே இதற்கான காரணம் என்று பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் மன்னாரிற்கு சென்று தலைமன்னார் ஊடாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உள்ளதாக புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளதன் காரணமாக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் நடக்கும் பகல் கொள்ளை ! சிக்கியது மற்றொரு பெரும் ஆதாரம்.

யாழ். ( Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் குருதி பரிசோதனை செய்வதற்கான அனைத்து வசதிகளும் உள்ள நிலையில் தன்னை வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலையில் குருதி பரிசோதனை செய்யச் சொன்னதாக பாதிக்கப்பட்ட நோயளியொருவர் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக நேற்று முன்தினம் தென்மராட்சி மக்களால் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் அவர் இதனை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார். இதன்போது பாதிக்கப்பட்ட நோயாளி அதிக பணம் செலவளித்து குறித்த பரிசோதனையினை மேற்கொண்டதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் போக்குவரத்து பொலிஸாரால் உயிரிழந்த மின்சாரசபை ஊழியர் : பிரதான சாட்சி வாக்குமூலம்

யாழ்ப்பாண (Jaffna) மின்சார சபை ஊழியரான செல்வநாயகம் பிரதீபன் உயிரிழக்க போக்குவரத்து பொலிஸாரின் செயற்பாடே காரணம் என வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது. சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி ஒருவர் 2 மாதங்களின் பின்னர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். முன்னதாக யாழ் பலாலி பிரதான வீதியின் ஆயகடதை கடந்த மே 10ஆம் திகதி இந்த சம்வம் இடம்பெற்றுள்ளது. எனினும், சாட்சி வழங்குவதற்கு பயந்த நிலையில் தாமாக முன்வந்து குறித்த பொதுமகன் வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகவே துணிந்து வந்து இந்த வாக்குமூலத்தை வழங்குவதாக தெரிவித்துள்ளார். குறித்த சாட்சி, யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியில் ஊடாக முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த பொழுது, வீதியின் வலது பக்கம் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் இடது பக்கமாக பயணித்த சிலரை மறித்து சோதனை மேற்கொண்டிருந்தனர். இதன்போது உயிரிழந்தவரையும் பொலிஸ் மறித்த பொழுது அவர் நிற்காமல் சென்றுள்ளார். இதனை அடுத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளை எடுத்து பின்னால் துரத்திச் சென்று, வடக்கு புன்னாலைக் கட்டுவன் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வைத்த குறித்த மோட்டார் சைக்கிளை வலது காலால் உதைத்தார், இதன் போது பாதிக்கப்பட்டவர் மின்சார கம்பத்தில் மோதுண்டார். அவரை எடுத்துச் சென்று வைத்தியசாலையில் அனுமதிக்க நாங்கள் முயற்சி செய்த பொழுதும் அவரை உதைந்து விழுத்திய பலாலி போக்குவரத்து பொலிஸார் அனுமதிக்கவில்லை. எனினும், அவரை வைத்தியசாலையில் உடனடியாக அனுமதித்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என அவர் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தார்.