Search
Close this search box.

வவுனியாவில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது

வவுனியாவில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் நேற்று (23.06) தெரிவித்தனர். வவுனியா, மகாறம்பைக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் தந்தை சிறுகுற்றச் செயல் தொடர்பில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள நிலையில் தாயார் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை பார்த்து வருகின்றார். தாயார் கூலி வேலைக்கு செல்லும் போது தனது பிள்ளைகளை அயலில் உள்ள வீட்டில் விட்டுச் செல்வது வழமை. இவ்வாறு விட்டுச் சென்ற நிலையில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வவுனியா பொலிசில் தாயாரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

நெடுந்தீவு பொலிஸ் நிலையம் முன்பாக சடலத்துடன் போராட்டம்

நெடுந்தீவில் அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இளைஞரின் சடலத்துடன் நெடுந்தீவு பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நெடுந்தீவு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 23 வயதான ஒருவர் கொல்லப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சகல சந்தேகநபர்களையும் கைது செய்யுமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை, நெடுந்தீவு இளைஞர் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஒருவர் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் முருங்கன் பகுதியில் கோர விபத்து ; வயோதிப பெண் பலி

மன்னார் -மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இசைமாலைத் தாழ்வுப் பகுதியில்  ஹயஸ் ரக வாகனம் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியதில்  அதில் பயணித்த 14 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவமானது நேற்று  (21)மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த  சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,,, கல்முனையில் இருந்து மன்னார் மறிச்சுக்கட்டி  பிரதேசத்திற்குக் குறித்த வாகனத்தில்  வருகை தந்தவர்களின் வாகனம்   முருங்கன், இசைமாலை தாழ்வு, நரிக்காடு  வளைவு பகுதியில் உள்ள மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. விபத்தில்  காயமடைந்த அனைவரும்  முருங்கன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு       மேலதிக சிகிச்சைக்காக 7 பேர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இவர்களில் வயோதிப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வாகனத்தில் பயணித்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சார்ந்த உறவினர்கள் எனத் தெரிய வருகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் ஜஸ்கிறிமிற்காக அணி திரண்ட மக்கள்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று நாடாளாவிய ரீதியில் உணவு உள்ளிட்ட பல்வேறு தன்சல்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் கிளிநொச்சியின்   சந்திர பூங்காவிற்கு அருகில் பொசன் போயாவை முன்னிட்டு இன்று ஜஸ்கிறிம் தன்சல் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது பெருமளவிலான மக்கள் அணி திரண்டு வந்து ஜஸ்கிறீமிற்காக மிக நீண்ட வரிசையில் காத்துகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 18,207 தான சாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. பொசன் தான சாலைகளை பரிசோதனைக்குட்படுத்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காரியாலயம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் 9, 425 குளிர்பான தானசாலைகளும் 8,782 உணவுப் பொதி உள்ளிட்ட பல்வேறு உணவு வகை தான சாலைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனைச் சாவடி அகற்றப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய பிரதான சோதனை சாவடி மற்றும் வீதி தடைகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டுள்ளது டன் சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. பல வருடங்களாக குறித்த சோதனை சாவடியை அகற்றுமாறும் குறித்த சோதனை சாவடியினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள்,சிவில் செயற்பாட்டாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டங்களை முன்னெடுத்த துடன்,சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு சோதனை சாவடியை அகற்றுவதற்கான கோரிக்கையை கடிதங்களாகவும் மகஜர்களாகவும் வழங்கியிருந்தனர். இந்த நிலையில் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் குறித்த சோதனை சாவடியை அகற்றி தருமாறு நேரடி கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக இன்றைய தினம் (21) குறித்த பாலப் பகுதியில் காணப்பட்ட வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளது டன் சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அப்பகுதியில் ராணுவம் தொடர்ச்சியாக நிலை கொண்டுள்ளதுடன் ராணுவ கட்டுமாணங்கள் எவையும் அகற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் எரிகாயங்களுடன் அலறியடித்து ஓடிவந்த நபரால் பரபரப்பு…!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் நேற்று  இரவு எரியூட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மருதங்கேணியை சேர்ந்த 43 வயதுடைய பவானி  என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று இரவு வத்திராயன் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனியாக உறங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில்  எரிகாயங்களுடன் அலறியடித்து வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த வேளை, பொதுமக்களால் மீட்கப்பட்டு, மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மந்திகை ஊடாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. எனினும்  முன்பகை காரணமாக பெற்றோல் குண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதா..? என்ற கோணத்தில், மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குருந்தூர் மலையை நோக்கி நகரும் பிக்குகள்: தமிழர் பகுதிக்குள் பலத்த பாதுகாப்பு

முல்லைத்தீவு – குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை பகுதியில் நீதிமன்றத்தின் அனுமதியை மீறி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்கு பொலிஸார் , விஷேட அதிரடிபடையினரின் விஷேட பாதுகாப்புடன் பிக்குகள் குழு பாதயாத்திரை ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். கடந்த 16ஆம் திகதி தொடக்கம் மகியங்கனையிலிருந்து பாதயாத்திரையை ஆரம்பித்த பிக்குகள் குழு இன்று (20) முல்லைத்தீவு மாவட்டத்தை அடைந்து முல்லைத்தீவு குருந்தூர் மலையை செல்வதற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்த பயண வழிகள் எங்கும் பொலிஸ் பாதுகாப்பு இடப்பட்டுள்ளதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக அளம்பில் சந்தியை அண்டிய பகுதியில் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருப்பதுடன் வீதி தடுப்புக்கள் வைத்திருப்பதனையும் அவதானிக்க கூடியதாக இருக்கிறது. இந்த பாதுகாப்பு கடமைக்கு மத்தியில் பொலிசாரின் பாதுகாப்புடன் தென்பகுதி மற்றும் வெளியோர் பகுதிகளில் இருந்து வருகை தந்த பௌத்த மக்கள் பௌத்த கொடியினை வீதியில் இரு பகுதிகளிலும் நாட்டி கூடாரங்களையும் அமைத்துள்ளமையையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

வவுனியாவில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான மரங்களுடன் சிக்கிய நபர்..!

வவுனியா – மகாறம்பைக்குளம் பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக வெட்டப்பட்டு வைத்திருந்த ஒரு தொகை மரங்கள் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால்  மீட்கப்பட்டுள்ளது. மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட மரங்கள் சுமார் 20 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை மீட்கப்பட்ட மரங்களையும், சந்தேக நபரையும் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வானில் மிதக்கும் மர்மப்பொருட்கள்: இலங்கைத்தீவில் மற்றுமொரு சுனாமி?

வடமாகாணம் வவுனியா உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை (18) திடீர் நிலஅதிர்வு பதிவானதையடுத்து அன்றைய தினம் முதல் வானில் இரண்டு மர்மப்பொருட்கள் காணப்படுவதாக முல்லைத்தீவு மீனவர்கள் தெரிவிக்கின்றனர். நீல நிறத்தில் இருக்கும் இந்த இரண்டு மர்மப் பொருட்களும் வானத்தில் மெதுவாக மிதந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். நில அதிர்வின் பின்னரே இந்த மர்மபொருட்கள் வானில் தோன்றியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். வானத்தில் மெதுவாக மிதக்கும் அந்த இரண்டு பொருட்களும் நீல நிறத்தில் மிகவும் பிரகாசமாக காணப்படுவதாக தெரிவித்த மீனவர்கள் கடலிலிருந்து பார்க்கும் பொழுது அவை நன்றாக காட்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இலங்கைத்தீவில் சுனாமி ஏற்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் இதேபோன்ற பல மர்ம பொருட்கள் வானில் மிதந்ததாகவும் அவை சுனாமியின் பின்னர் காணாமற் போனதாகவும் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். மீனவர்களின் இந்த அறிக்கையின் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் பிரிவுக்கும் இதே தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதற்கான விபரங்கள் கொழும்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை

யாழ்ப்பாணம்(Jaffna) நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுந்தீவு ஏழாம் வட்டார பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இருவருக்கிடையே காணப்பட்ட முற்பகை காரணமாக நேற்று(19) இரவு மது போதையில் கொலை செய்யப்பட்டவருக்கும் கொலை சந்தேக நபருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அவரின் வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியில் இருவர் கொண்ட குழுவால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது நெடுந்தீவு 07ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சமக்கீன் தேவராஜ் அருள்ராஜ் (வயது 23) என்பவரே அடி காயங்களுடன் குறித்த பகுதியில் சடலமாக இன்று (20) அதிகாலை மீட்கப்பட்டு நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கொலை செய்யப்பட்டவரின் சடலம் தற்போது நெடுந்தீவு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.