வவுனியா பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சத்தியாக்கிரக போராட்டம்
வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் தமது சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 48 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டதோடு அரச தரப்போடு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வந்திருந்தனர். எனினும் அவர்களுடைய பேச்சுவார்த்தைகள் வெற்றி அளிக்காத நிலையில் 49 ஆவது நாளான இன்றிலிருந்து அவர்கள் வவுனியா பல்கலைக்கழக வாயிலில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக்கழக வாயிலில் கொட்டகை அமைத்து தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை காட்சிப்படுத்தியவாறு அவர்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் இடம்பெற்ற 34வது தியாகிகள் தினம்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 34 வது தியாகிகள் தினம் இன்று வவுனியாவில் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டது. வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா அவர்களின் திருவுருவ சிலைக்கு ஈழ மக்கள் புரசிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் அவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது. அதனை தொடர்ந்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில் மலரஞ்சலி நிகழ்வும் நினைவு பெருரையும் இடம் பெற்றது. இன் நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான இந்திரராசா, தியாகராசா மற்றும் வவுனியா நகர சபையின் முன்னாள் தலைவர் கௌதமன் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் மத்தியகுழு உறுப்பினர்கள் , மாவட்ட கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
முல்லைத்தீவு வான் பரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய அதிசய உருவம்.
முல்லைத்தீவு வான் பரப்பில் அதிசய உருவம் இரண்டு நேற்றையதினம் (18.06.2024) தோன்றியிருந்ததையடுத்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது நிலவி வரும் சீரற்ற காலநிலையினையடுத்து முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றையதினம் இரவு வேளை வானில் தொடர்ச்சியாக நீல நிறமாக ஒரு உருவம் ஔிர்ந்து கொண்டிருக்க அதனை சுற்றி வேறு நிற ஔி உருவம் விட்டு விட்டு ஔிர்ந்து கொண்டிருந்தது. இதனை அவதானிக்த மக்கள். இயற்கை மாற்றம் ஏற்படுமா என்ற நிலையில் அச்சமடைந்துள்ளனர். இதேவேளை வவுனியாவில் நேற்றிரவு 2.3 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வுமையம் மற்றும் சுரங்க பணியகம் உறுதிப்படுத்தியிருந்தது.
இலங்கையில் தமிழர் வாழும் பகுதியில் நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்
வவுனியாவில் (Vavuniya) திடீர் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது நேற்று (18.6.2024) இரவு 10.55 முதல் 11.10 மணி வரை பதிவானதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 2.3 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா, மதவாச்சி உள்ளிட்ட பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பல்லகெலே, மஹகனதராவ மற்றும் ஹக்மன ஆகிய நிலநடுக்க மையங்களில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது. இந்த நில அதிர்வு வவுனியா மக்களாலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழில் ஊடகவியலாளரின் வீடு தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாண(Jaffna) மாவட்ட ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டம் நாளை(19) ஆம் திகதி யாழ்ப்பாண பிரதான பேருந்து நிலையம் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது. கடந்த 13 ஆம் திகதி நள்ளிரவு ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டிற்குச் சென்ற இனந்தெரியாதோர் வீட்டை தீயிட்டு எரித்து சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையினரால் பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதுவரை குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை. எனவே குறித்த தாக்குதலானது ஊடகத்துறையினை செயற்படாதவாறு அச்சுறுத்தும் தாக்குதலாகவே அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது. எனவே தாக்குதலை நடத்தியவர்கள் தொடர்பிலே சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.என கோரியும் தாக்குதல் சம்பவத்தினைக் கண்டித்தும் வடக்கு மாகாண ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளனர். குறித்த போராட்டத்திற்கு ஊடகவியலாளர்கள், புத்தியீவிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என, அனைவரையும் பங்கேற்குமாறு வடக்கு மாகாண ஊடகவியலாளர்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் குருந்தூர்மலையில் சிவ வழிபாடு!
முல்லைத்தீவு – குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவ வழிபாடு இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. அந்தவகையில் சிவனை தரிசிப்பதற்காக ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் இன்றையதினம் காலை 10 மணியளவில் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். குறித்த வழிபாட்டில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் ஞா.யூட்சன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இ.ஜெகதீசன், ஆலய நிர்வாகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர். இந்நிலையில் பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவ வழிபாடு இடம்பெற்றது. தொல்லியல் துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய சேதம் ஏற்படுத்தாத வண்ணம் வழிபாடுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் அடிகாயங்களுடன் ஆற்றில் மிதந்த ஆணின் சடலம்..
கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் உள்ள நெத்தலியாற்றில் சடலம் ஒன்று இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளது. புளியம்பொக்கனை பகுதியில் உள்ள முசிலம்பிட்டியைச் சேர்ந்த 27 வயதுடைய சம்சுதீன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தில் அடிகாயங்களும் காணப்படுவதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மரணம் தொடர்பாக நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம், உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிசார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முல்லைத்தீவில் அபகரிக்கப்படும் தமிழ் மக்களின் காணிகள்: எழுந்துள்ள குற்றச்சாட்டு
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய பூர்வீகக் காணிகள் அபகரிக்கப்பட்டு பெரும்பான்மை மக்களுக்கு வழங்கப்படுவதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இன்றையதினம் (17.06.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டம் 2415 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் உள்ளதோடு கிட்டத்தட்ட 5 இலட்சத்து தொண்ணூறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாக கணிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்களுக்கு காணி இல்லை. போர் முடிவடைந்ததன் பின்னர், பூர்வீகமான மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்யப்பட்டது. தற்போது, அரசாங்கத்தினால் தமிழ் மக்களுடைய பூர்வீகக் காணிகள் அபகரிக்கப்பட்டு 4238 பெரும்பான்மை குடும்பங்களுக்கு காணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டு கூறக்கூடிய விடயம் என்னவெனில் தமிழ் மக்களுக்கு சொந்தமாக இருந்த பூர்வீகமான நீர்ப்பாசனக் குளங்களும் அதனுடன் சேர்ந்த காணிகளும் அபகரிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, 2022ஆம் ஆண்டு 28676 இளைஞர், யுவதிகளுக்கு ஒரு ஏக்கர் காணி வீதம் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், இன்று வரை அவர்களுக்கான எதுவித காணிகளும் வழங்கப்படவில்லை என்பதோடு அதற்கான முயற்சிகளும் நடக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
கடற் பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டி- அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு கடற் பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டியொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது… அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பெட்டியை கண்ட அனலைதீவு மீனவர்கள் ஊர்காவற்றுறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஊர்காவற்றுறை பொலிசார் மேற்படி பெட்டியை மீட்டுள்ளனர். மேற்படி பெட்டியினுள் தொலைத் தொடர்பு கருவி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
கிளிநொச்சி(Kilinochchi) – வட்டக்கச்சி கட்சன் வீதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (14.06.2024) இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதியில் பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் சான்றுப் பொருளையையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.