யாழில் தகாதமுறைக்குட்படுத்தப்பட்ட சிறுமி : 17 வயது சிறுவன் கைது
யாழில் (Jaffna) சிறுமியொருவரை தாகத முறைக்குட்படுத்திய குற்றச்சாட்டில்17 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், 15 வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு தகாதமுறைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு, பாதிக்கப்பட்ட சிறுமி பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில், கைது செய்யப்பட்ட சிறுவனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய வேளை குறித்த சிறுவனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து நள்ளிரவில் கோர விபத்து – மூவர் உடல்சிதறிச் சாவு..!
முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் மூவர் உடல்சிதறி உயிரிழந்ததோடு, இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று பழுதடைந்ததன் காரணமாக, ஏ9 வீதியில் 228வது கிலோமீற்றர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன்போது பேருந்தில் வருகை தந்தவர்கள் இறங்கி, பேருந்தின் பின்புறமாக நின்று கொண்டிருந்த போது, அதே திசையில் வருகை தந்த பாரவூர்தி ஒன்று குறித்த நபர்கள் மீதும் பேருந்தின் மீதும் மோதியுள்ளது. இதன்போதே வீதியில் நின்ற மூவர் பார ஊர்தியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு உடல்சிதறி உயிரிழந்துள்ளனர். பாரவூர்தி சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த ஒருவர் என இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மிக்ஸருக்குள் பொரிந்த நிலையில் பல்லி- யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் உள்ளிட்ட அங்குள்ள நகர் பகுதியில் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. இது குறித்த செய்திகள் அண்மைய நாட்களாகவே வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஐஸ்கிறீமில் உயிரிழந் தவளை, நாய் இறைச்சி கொத்து, பாணில் இரும்புத் துண்டு, உணவுப் பொருட்களில் கரப்பான் பூச்சிகள் இருப்பது என அண்மைய நாட்களாக செய்திகள் வெளிவந்துகொண்டிருகின்றன. அதுபோன்ற செய்தி ஒன்றே தற்போது வெளியாகியுள்ளதுடன், பொது சுகாதார பரிசோதக அதிகாரிகள் உரிய சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸருக்குள் நேற்றைய தினம் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. சந்நிதி ஆலயத்தில் நேற்று இரவு , ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இதன்போது பெருமளவான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இந்நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த ஒருவர், ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்ஸரை வாங்கிய போது , அதனுள் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பல்லியுடன் காணப்பட்ட மிக்ஸரை சான்று பொருளாக பெற்றுக்கொண்ட பொது சுகாதார பரிசோதகர் குறித்த இனிப்பு கடைக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். குறித்த வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலையில் பாரிய தீ விபத்து
வவுனியா, மரக்காரம்பளை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலை ஒன்றில் நேற்று (24.06) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வவுனியா, மரக்காரம்பளை பகுதியில் அமைந்துள்ள அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக்கு தொழிற்சாலை மற்றும் வீட்டு தளபாடங்களின் களஞ்சியசாலை என்பவற்றை உள்ளடக்கிய தொழிற்சாலையிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் பணி புரிந்த இருவர் சாப்பாட்டுக்காக வெளியில் சென்ற நிலையில் இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தையடுத்து வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர், பொலிசார் மற்றும் இராணுவத்தினர் அப் பகுதி மக்களுடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நீர்தாரை வீசி நடவடிக்கை எடுத்திருந்தனர். எனினும் தீ விபத்தில் தொழிற்சாலை முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இந்நிலையில் தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து ஈச்சங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியாவில் இளைஞர் குழு அட்டகாசம் : இருவர் காயம்
வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இளைஞர் குழு ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் குழாய் கிணறு நிர்மாணிக்கும் தொழிலை செய்து வருகின்றார். குறித்த இளைஞர் வவுனியா நகரில் இருந்து வீடு சென்ற போது அவரை வழிமறித்த குழு ஒன்று அவர் மீது போத்தல்கள் மற்றும் தடிகாளால் தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துடன், குறித்த இளைஞனின் வீட்டிற்குள் நுழைந்து இளைஞனின் தந்தை மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. காயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, குழாய் கிணறு நிர்மாணம் தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நபர் ஒருவர் தனக்கு மிரட்டல் விடுத்ததாக பாதிக்கப்பட்ட இளைஞன் தெரிவித்துள்ளதுடன், அதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதா என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் முருங்கன் பிரதான வீதியில் கோர விபத்து- இளம் குடும்பஸ்தர் பலி!
மன்னார்(Mannar) – முருங்கன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முருங்கன் தொடரந்து கடவை பகுதியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவமானது நேற்று (24.06.2024) மாலை 5.00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. மன்னாரில் இருந்து பயணித்த தென் பகுதியை சேர்ந்த தனியார் பேருந்தும், வவுனியா பகுதியில் இருந்து முருங்கன் வீதி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் முருங்கன்- கற்கிடந்தகுளம் கிராமத்திற்கு இடையில் உள்ள தொடருந்து கடவைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதன்போது, நானாட்டான் பிரதேசத்தில் உள்ள சாளம்பன் நாக செட்டி கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுடைய சுந்தரலிங்கம் தீபன் என்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். மேலும், சடலம் முருங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் சாரதி மீது துப்பாக்கிச் சூடு
வவுனியா ஓமந்தை பாலமோட்டை பிரதேசத்தில் இன்று (24) பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கெப் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, “சட்டவிரோதமான முறையில் மரக்கடத்தல் மேற்கொள்ளப்படுகிறது” என, பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டிருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஹப் ரகர வாகனத்தை சோதனைக்குட்படுத்த முற்படும்போது அவ் வாகனம் தப்பிச் செல்ல முயன்றது. இதனையடுத்து பொலிஸாரால் அவ் வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது வாகனத்தில் இருந்த கடத்தல்காரர்கள் வாகனத்தை விட்டு தப்பி ஓடிச்சென்றுள்ளனர். இதன்போது பெரிய அளவிலான 17 மரக் கட்டைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதானி நிறுவனத்திற்கான அனுமதி இடைநிறுத்தம்?
மன்னார் (Mannar) மற்றும் பூநகரியில் அமைக்கப்படவுள்ள 484 மெகாவாட் காற்றாலை மின்சார உற்பத்தி மையங்களுக்கான அனுமதியை அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுத்துள்ளது. இந்த திட்டங்கள் தொடர்பில் இலங்கை மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள், திட்டத்தின் குறைந்த செலவு மற்றும் தொழில்நுட்ப இணக்கத்தன்மையை மதிப்பிடுவதற்கு போதுமானதாக இல்லை என்பதை ஆணைக்குழு, தமது அனுமதி மறுப்புக்கான காரணமாக தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் அதானி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான முழு வரைவு மின்சார கொள்முதல் ஒப்பந்தம் போன்ற அடிப்படைத் தகவல்கள் கூட ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது அத்துடன் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் முடிவுகள் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் வழங்கிய சுற்றுச்சூழல் உரிமத்தின் விவரங்கள் கூட சமர்ப்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தநிலையில் அனுமதி மறுப்பை அடுத்து குறித்த ஆவணங்களை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க, இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட சட்டமா அதிபர் திணைக்களமும் அனுமதி வழங்கியது.
கிளிநொச்சியில் 18 வயது இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் காதல் விவகாரத்தினால் இளைஞன் ஒருவரின் கை வெட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. காதல் பிணக்கு காரணமாக ஏற்பட்ட முரண்பாடு இச்சம்பவத்துக்கு வழியமைத்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தில் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் தனுஜன் எனும் 18 வயதுடைய இளைஞனின் கை துண்டாடப்பட்டுள்ளது. காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் கருச்சிதைவுகள் அடையாளம்! – ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள்
கிளிநொச்சியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றிலேயே இவ்வாறு கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந் நிலையில் குற்றத்தடுப்பு பொலிசார் நேற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்று கிளிநொச்சி பதில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார். இதேவேளை தனியார் நிறுவன வளாகத்தில் குறித்த செய்தியை காட்சிப்படுத்த ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.