மலையக பெருந்தோட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர்!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக பெருந்தோட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று (26) இலங்கை தொழிலாளர் காங்ரஸின் காங்ரஸின் பொதுச்செயலாளரும் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுக அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டார். இதன் போது போகாவத்த அக்கரபத்தனை போடைஸ் இன்ஞஸ்ரீ சாஞ்சிமலை மற்றும் பொகவந்தலாவ பகுதியில் டியன்சின் கெம்பியன் பெற்றோசோ ஆகிய பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இதேவளை பெருந்தோட்ட தொழிலாளர்களை சந்தித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் 1,700 ரூபாய் சம்பளம் தொடர்பிலும் கலந்துரையாடினார். சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 40 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகளை உடனடியாக முன்னெடுக்கமாறு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிருவத்திற்கு பணிப்புரை விடுத்தார். இதன் போது இந்த நேரடி சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு சமுக அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் நீர் வழங்கள் மற்றும் அம்பகமுவ பிரதேசத்திற்கான இனைப்பாளர் ரவி குழந்தைவேல் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிருவனத்தின் அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தனர்.
நுவரெலியாவில் அதிக பனிமூட்டம்…
நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து நுவரெலியாவில் மழையுடனான காலநிலை காணப்படுகின்ற நிலையில் இன்று (25) காலை முதல் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பிலக்பூல் சந்தி , வெண்டிகோனர் , பங்களாஹத்த , நானுஓயா , ரதல்ல குறுக்கு வீதி போன்ற இடங்களில் வழகைக்கு மாறாக அதிகளவான பனி மூட்டம் காணப்படுகின்றது இதனால் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றன. நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் சென்ற வாகனங்கள் அதிக ஒலி எழுப்பியவாறும், வாகன விளக்குகளை ஒளிரவிட்டும் செல்வதை அவதானிக்க முடிந்தது . மேலும் தொடர்ந்து மழை பெய்வதால் அதிக குளிருடன் கூடிய காலநிலை காணப்படுவதை உணரக் கிடைத்துள்ளது. குறிப்பாக வெசாக் பௌர்ணமி தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையால் வெளி மாவட்டத்தில் இருந்து பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நுவரெலியாவுக்கு வாகனங்களில் வருகை தந்துள்ளனர் எனவே குறித்த சாரதிகளுக்கும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி கடும் பனிமூட்டம் நிலவுவதால் விபத்துக்களை தடுக்கும் நோக்கில் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் வாகனங்கள் செலுத்தும் போது தங்களுக்கு உரியத்தான பக்கத்தில் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் போக்குவரத்து பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சீரற்ற வானிலையால் மற்றுமொரு சோகம்!
நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ராகலை மாகுடுகலை பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ராகலை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் நேற்று வீசிய கடும் காற்றினால் குறித்த மரம் சரிந்து விழுந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் கந்தப்பளை ஹைபோரஸ்ட் இலக்கம் ஒன்றில் வசித்து வந்த கந்தசாமி ராஜ்குமார் என்ற 38 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
வட்டவளையில் முறிந்து வீழ்ந்த மரம்: மலையக மார்க்கத்திலான போக்குவரத்து பாதிப்பு..
வட்டவளை நகரை அண்மித்த பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ள நிலையில் ஹட்டன் – கண்டி பிரதான வீதியூடான போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (23) பகல் இடம்பெற்றுள்ளது. ஹட்டனிலிருந்து கினிகத்தேனை வழியூடாக கண்டி, கொழும்பிற்கு பயணிக்கும் வாகனங்களும் கண்டியிலிருந்து ஹட்டனிற்கு செல்லும் வாகனங்களும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பலத்த மழையுடனான சீரற்ற வானிலைக்கு மத்தியில் பயணிகள் மாற்றும் வாகனங்கள் நீண்ட நேரமாக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் உதவியுடன் வட்டவளை பொலிஸார் மரத்தின் கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் கால்நடைகளிடையே பரவும்நோயினால் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுமா?
நுவரெலியா மாவட்டத்தில் கால்நடைகளுக்கு, லைசர்ஜிக் அமிலம் டைதிலாமைடு (LSD) என்ற தோல் நோய் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கும் கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார். அத்தோடு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலுள்ள கால்நடைகளுக்கும் இந்த நோய் பரவியிருந்த நிலையில், தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதால் அதனை கட்டுப்படுத்த முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த நோயைக் கட்டுப்படுத்துவற்கு தற்போது கிடைக்கப்பெறும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை போதுமாக இல்லை என்பதால், அவசர கால கொள்வனவின் கீழ் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள கால்நடைகளின் பால் மற்றும் இறைச்சியை உட்கொள்வதனால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார். ஆகவே, இந்த நோய் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், நோய் தாக்குத்துக்கு உள்ளான கால்நடைகளிடமிருந்து மனிதர்களுக்கு LSD பரவும் அபாயம் இல்லை என வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார். இருப்பினும் கடந்த ஆறு மாத காலத்துக்குள் மத்திய மாகாணத்தில் 135 கால்நடைகள் அம்மை நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
சம்பள உயர்வை உறுதிப்படுத்தி அதி விசேட வர்த்தமானி…
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை 1700 ரூபாவாக அதிகரிப்பதை உறுதிப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று தொழில் ஆணையாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே 01ஆம் திகதி கொட்டகலையில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார். பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளமாக 1350 ரூபா மற்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 350 ரூபா என்ற வகையில் நாளாந்தம் 1700 ரூபா சம்பளத்தை அதிகரிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டிருந்தது. பின்னர் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்கான காலவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை உறுதிப்படுத்தி தற்போது அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வௌியிடப்பட்டுள்ளது.
தொடரும் சீரற்ற வானிலை!
தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, வடமேற்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. நாட்டின் ஊடாக இடைக்கிடையில் மணித்தியாலத்திற்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை, அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையின் அடுத்த 24 மணித்தியாலங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கையில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு வானிலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு வளிமண்டலவியல் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையிலும் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் விருத்தியடைந்து வருகின்ற பருவப் பெயர்ச்சிக்கு முந்தைய நிலை காரணமாக இந் நிலைமை ஏற்படவுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
கண்டி நகரில் கடும் மழை – வெள்ளத்தில் முழ்கிய ரயில் நிலையம்..!
கண்டி நகரில் நேற்று பெய்த கடும் மழையினால், கண்டி ரயில் நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. ரயில் நிலையத்தை அண்மித்துள்ள முறையற்ற வடிகால் கட்டமைப்பு மற்றும் வடிகால்கள் மூடப்பட்டமையே, ரயில் நிலையம் நீரில் மூழ்க காரணம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கண்டி நகரில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி ஒரே நேரத்தில் பெய்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. இதையடுத்து, போகம்பரவிற்கு பின்புறமாகவுள்ள மலை பகுதியிலிருந்து பெருமளவான வெள்ள நீர், ரயில் நிலையத்தை நோக்கி பெருக்கெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை தற்காலிகமாக மூடப்பட்டிருந்த எல்ல – வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் பூரண கண்காணிப்பின் கீழ் கடுமையான அவதானத்துடன் குறித்த வீதியில் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இன்றும் (17) மழை பெய்தால் இந்த வீதி மீண்டும் ஆபத்தானதாக மாறக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. அப்படியானால், எந்த நேரத்திலும் சம்பந்தப்பட்ட வீதியை மீண்டும் மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
திடீரென ஏற்பட்ட மாரடைப்பு பயணிகளை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த பேருந்து சாரதி..! இலங்கையில் துயரம்!
நுவரெலியாவில் இருந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை, பயணிகளுடன் செலுத்தி சென்ற சாரதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 41 வயதான இரண்டு பிள்ளைகளில் தந்தையான ஆரத்தனகே என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா பிரதான பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து நேற்று மாலை 03.10 மணியலவில் புறப்பட்டு தலவாக்கலை ஊடாக பத்தனை சந்தி வழியாக நாவலப்பிட்டி நோக்கி பயணித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந் நிலையில் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை சந்தியை அண்மித்த பகுதியில் தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக பேருந்தை வீதி ஓரத்தில் நிறுத்தியுள்ளார். உடனே பேருந்தின் நடத்துனர் சாரதி அருகே ஓடிவந்து நிலைமையை ஆராய்ந்த போது சாரதி மாரடைப்பினால் அவதியுற்றதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார். உடனடியாக மற்றுமொரு வாகனம் ஒன்றில் சாரதியை அருகில் உள்ள லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையில் சாரதி உயிரிழந்துள்ளார். இதையடுத்து சாரதியின் உடல் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பேருந்தை நிறுத்தி இருக்காவிட்டால் பாரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்ககூடும் என அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.