Search
Close this search box.

O/L பரீட்சைக்கு தோற்றிய இரு மாணவிகள் மாயம்!

நேற்று (14)  கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர பரீட்சைக்குத் தோற்றுவதற்காக பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு பாடசாலை மாணவிகள் வீடுகளுக்கு திரும்பவில்லை என அவர்களது உறவினர்களால் கினிகத்தேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் இருவரும் நேற்று காலை பரீட்சைக்குத் தோற்றுவதற்காக அம்பகமுவ தேசிய பாடசாலை பரீட்சை நிலையத்திற்கு சென்றுள்ளனர். அதில் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் பரீட்சை நிலையத்திற்கு வந்திருந்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கினிகத்தேன, அக்ரஓயா மற்றும் நாவலப்பிட்டி நாகஸ்தென்ன பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு மாணவிகளும் நண்பிகள் என தெரியவந்துள்ளது. பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் பரீட்சை நிலையத்திற்கு அருகில் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை ஒருசில மாணவர்கள் பார்த்துள்ளனர். காணாமல் போன மாணவிகளின் தகவல்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை!

பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது..

அரச வர்த்தமானி அறிவிப்புக்கு அமைய கம்பனிகள் செயற்பட வேண்டியது அவசியம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அரசாங்கம் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய பெருந்தோட்ட கம்பனிகள் செயற்பட வேண்டியது அவசியமென வலியுறுத்திய நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், அதற்கு எதிராக கம்பெனிகள் மேற்கொள்ளும் நீதிமன்ற நடவடிக்கைளுக்கு முகம்கொடுக்கத் தயாரெனவும் தெரிவித்தார். கூட்டு ஒப்பந்தம் இருந்த காலத்தில் 2 வருடங்களுக்கு ஒரு முறை சம்பளம் அதிகரிப்பு செய்யப்பட்ட நிலையில் கடந்த நான்கு வருடங்களாக தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், டொலரின் பெறுமதி வீழ்ச்சியை சாதகமாக கொண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க கம்பனிகள் முன்வர வேண்டுமெனவும் வலியுறுத்தினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் குறிப்பிட்டதாவது: “தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் நாள் சம்பள முறைமை பொருத்தமற்றதாகும். அந்த முறைமையில் இருந்து மாற வேண்டியது அவசியம். அதற்காக நான்கைந்து வருடங்கள் அவசியப்படும். அதற்காக தோட்ட தொழிலாளர்களை 1000 ரூபா சம்பளத்துடன் காத்திருக்கச் வைப்பதை ஏற்றுகொள்ள முடியாது. தேர்தல் காலத்தில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு தொகையை பெற்றுத்தருவதாக கூறும். எதிர்கட்சிகள் தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதாக கூறினாலும் அதற்காக பொறிமுறை என்னவென்பது கேள்விக்குரியாகும். ஆரம்பத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தில் ஒரு ரூபா கூட அதிகரிக்க முடியாதென கூறிய கம்பனிகள், அரசாங்கம் 1700 சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானி அறிவித்தலை விடுத்த பின்பு அடிப்படைச் சம்ளத்தில் 200 ரூபாவை அதிகரிக்க முன்வந்துள்ளனர். அதனால் சம்பள அதிகரிப்பை செய்ய முடியும் என்று கம்பெனிகள் காண்பித்துள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொட்டகலை மே தினக் கூட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அறிவித்தார். ஏப்ரல் 30 ஆம் திகதி பெருந்தோட்ட மக்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தொழில் அமைச்சர் மனுஷ நாணாயக்காரவினால் வெளியிடப்பட்டது. இது குறித்து சிலர் மக்கள் மத்தியில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வதந்திகள் பரப்பினர். ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்த மறு தினமே அது நடக்காது என்றும் கூறினார்கள். இதே பெருந்தோட்ட நிறுவனங்கள் 1000 சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென கூறினார்கள். அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலும் இரண்டு தடவைகள் வெற்றி பெற்றிருக்கிறோம். தற்போது மேல்முறையீடு செய்துள்ளனர். குறித்த வழக்கு ஏற்கனவே உள்ள சம்பள நிர்ணய சபை மீதே தொடரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்போகும் சம்பள விடயத்தில் நிர்ணயச் சபைக்கு தொடர்பில்லை. 1000 ரூபாவுக்கு மேலதிகமாக ஒரு ரூபாவும் கொடுக்க முடியாது என்று கூறிய பெருந்தோட்ட நிறுவனங்கள் 1700 சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்பு 1200 ரூபாவாக அடிப்படை சம்பளத்தை உயர்த்த முன்வந்துள்ளனர். ஒரு ரூபா கூட அதிகரிக்க முடியாது என்று கூறியவர்கள் அடிப்படைச் சம்பளத்தில் 200 ரூபாவை அதிகரிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். வழங்கு இடம்பெறுவதால் சம்பள உயர்வு வழங்க முடியாது என்று சட்டம் இல்லை. அது குறித்த எழுத்துமூல அறிவிப்பு சட்டமா அதிபரினால் தொழில் அமைச்சுக்கு அனுப்பட்டிருக்கிறது. பெருந்தோட்ட நிறுவனங்கள் இந்த விடயத்தை இழுபரியாக்கவே பார்க்கின்றார்கள். இது குறித்து ஜனாதிபதியிடமும் பேசியிருக்கின்றோம். அதன்படி ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் தொழில் அமைச்சரால் இது குறித் ஆவணமொன்று தயாரிக்கப்படுகிறது. பெருந்தோட்ட நிறுவனங்கள் எந்தெந்த இடத்தில் எல்லாம் சட்டத்தை மீறியிருக்கின்றது? எந்தெந்த இடத்தில் எல்லாம் அவர்கள் இலக்கு இல்லாமல் வேலை செய்திருக்கின்றார்கள்? மீள் நடுகை செய்யாமலிருப்பதற்கான காரணம் என்ன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படும். இவ்வாறிருக்க பெருந்தோட்ட கம்பனிகள் குத்தகை காலத்தை நீட்டித்து தாருமாறு கேட்கிறார்கள். மீள் நடுகைச் செய்தால் இலாபமீட்ட 60 வருடங்கள் ஆகும் என்று கூறுகிறார்கள். 53 வருடங்கள் குத்தகைக்கு காணிகளை பெற்றுக்கொண்டபோது அவர்களுக்கு அது விளங்கவில்லையா என்பது கேள்விக்குரியாகும். அதனால், தற்போது சம்பளத்தை அதிகரிக்க முடியாது என்று கூறுவது நியாயமற்றது. பராமரிப்பு இன்மையினாலேயே தோட்டங்கள் காடாக மாறியுள்ளன. தோட்டத் தொழிலாளர்கள் தொழில் செய்யும் இடத்தில் கௌரவமாக நடத்தப்படுத்துவதில்லை. அதுவே தொழிலாளர்கள் எண்ணிக்கை குறையக் காரணமாகும். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. தேயிலைத் தோட்டத்தில் தேயிலை மாத்திரம் தான் இருக்கும் என்ற நிலை இன்று மாறிவிட்டது. பங்களாக்கள் சுற்றுலா இடங்களாக மாற்றப்பட்டுள்ளன. அதிலும் நாளாந்தம் 1000 – 2000 டொலர் ஈட்டுகின்றனர். அங்கு தேநீர் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இரு முனைகளில் வருமானம் ஈட்டினாலும் கம்பனிகள் அரசாங்கத்திற்கு வெறும் 500 ரூபாவை மாத்திரமே வழங்குகின்றனர். தங்களாலேயே சுற்றுலாத்துறை ஊக்குவிக்கப்படுவதாக கூறிக்கொள்கிறார்கள். இது பெருந்தோட்ட நிறுவனங்களின் சூழ்ச்சியாகும். அதனாலேயே ஜனாதிபதியும் தொழில் அமைச்சரும் எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர். கடந்த 4 வருடங்களாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கிவில்லை. கூட்டு ஒப்பந்தம் இருக்கும்போது இரண்டு வருடத்திற்கு ஒரு முறை சம்பள உயர்வு கிடைத்தது. டொலரின் பெறுமதி வீழ்ச்சி கண்டதன் மூலம் பெருந்தோட்ட கம்பனிகள் அதிக இலாபம் ஈட்டியுள்ளன. அதனால் நிச்சயமாக தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியும். மேலும், தற்போது யாழ். குடாநாட்டில் சுத்தமான குடிநீர் 11% ஆனோருக்கு மாத்திரமே கிடைக்கிறது. தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் உப்புநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்ட பின்னர் யாழ். குடாநாட்டில் 40% ஆனோருக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கும்’’ என்றும் அமைச்சர் தெரிவித்தார்…

இன்று மத்திய மாகாணத்தில் பணிப்புறக்கணிப்பு

பல கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று (13) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டணி தீர்மானித்துள்ளது. கோரிக்கைகளுக்கு அரசு உரிய பதில் அளிக்காவிட்டால் எதிர்வரும் 22ம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என கூட்டணியின் இணை ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் இன்று (13) அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு முதல் நிலவும் மாதாந்த கொடுப்பனவு மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பிலான முன்மொழிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த “அத தெரண” வினவிய போது தெரிவித்தார். எவ்வாறாயினும், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் 11ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. இன்று தமது பிரச்சினைகளுக்கு திட்டவட்டமான தீர்வு வழங்கப்படாவிடின் வேலை நிறுத்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தி அத்தியாவசிய சேவைகள் வாபஸ் பெறப்படும் என அனைத்து பல்கலைக்கழகங்க தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைச் செயலாளர் கே.எல்.டி.ரிச்மண்ட் எச்சரித்துள்ளார்.

கண்டியில் தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது

க.பொ.த சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வட்ஸ்அப் குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பாக தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் குறித்த ஆசிரியரை கண்டியில் வைத்து  கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முதற்கட்ட விசாரணையில் வாட்ஸ்அப் குழுவில் 1,025 உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. க.பொ.த சாதாரண தர பரீட்சையின் ஆங்கில வினாத்தாள் கடந்த 9ம் திகதி நடைபெற்றதுடன், கால அட்டவணைப்படி காலை 8.30 மணிக்கு மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. எனினும், சந்தேகத்திற்குரிய இந்த ஆசிரியரால் காலை 9.11 மணியளவில் வாட்ஸ்அப் குழுவில் ஆங்கில வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தனியார் வகுப்பு ஆசிரியர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் பரீட்சை திணைக்கள அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் மேற்பார்வையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை கடந்த 06 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

எல்லை மீறிய வெப்பநிலை: 08 வருடங்களின் பின்னர் வரலாறு காணாத அதிகரிப்பு

எல்லை மீறிய வெப்பநிலை: 08 வருடங்களின் பின்னர் வரலாறு காணாத அதிகரிப்பு 08 வருடங்களின் பின்னர் இந்த ஆண்டு நாட்டின் வெப்பநிலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைத் தலைவர் பேராசிரியர் திலக் விஜயதுங்க பண்டார தெரிவித்துள்ளார். பல்வேறு காலநிலை காரணங்களால் இந்த ஆண்டு வெப்பம் அதிகரித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த வாரம் சராசரியாக 39 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் கடந்த 2016 ஆம் ஆண்டுதான் இவ்வளவு அதிக வெப்பநிலை பதிவானது. இந்த நாட்டில் சராசரி வெப்பநிலை 27 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் பேராசிரியர் திலக் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அதன்படி, இதனை சமாளிக்க மக்கள் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று கனமழைக்கு வாய்ப்பு!!

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. தென் மாகாணங்களிலும் கரையோரப் பகுதிகளிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். இதேவேளை,  வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் அமுலாகும் வகையில் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி, மேற்கூறிய பகுதிகளில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம், ‘கவனம்’ செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மேற்படி பிரதேசங்களில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவு…!

கடந்த இரண்டு மாதங்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக மஸ்கெலியா மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட சுமார் 45 அடி குறைந்துள்ளது. நீர் தேக்கத்தின் நீர் மட்டம் குறைந்துள்ளதால் 1968 ம் ஆண்டில் நீரில் மூழ்கிய அனைத்து வணக்க ஸ்தலங்களும் தற்போது பார்க்க கூடிய அளவில் உள்ளது. குறிப்பாக சண்முக நாதர் ஆலயம், பௌத்த விகாரையில் இருந்த புத்தரின் சிலை, அதன் அருகில் இருந்த போதி மரம், இஸ்லாமிய பள்ளியின் தூபி மற்றும் கங்கேவத்தை நகரில் இருந்த சித்தி விநாயகர் ஆலயம் என்பன வற்றுடன்  வெள்ளையர்களால் கட்டப்பட்ட பாலம் என்பன தற்போது பார்க்க கூடிய அளவில் உள்ளது. காசல்ரீ, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது.

சித்திரை வருடப் பிறப்பு எப்போது..? இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் விளக்கம்..!!

இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் மஹாராஜ ராஜகுரு ஸ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் சித்திரை வருடப்பிறப்பானது 14.04.2024 ஞாயிற்றுக்கிழமை குரோதி எனும் பெயரில் மலர்கின்றது தெளிவாக கூறியுள்ளார்

“லவ் டுடே” திரைப்பட நடிகர் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தின் அறிவிப்பு..!! காத்திருக்கும் ரசிகர்கள்..!

‘லவ் டுடே’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன், இப்போது ‘ஓ மை கடவுளே’ இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.இது தொடர்பான பேச்சுவார்தைகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படத்தை வெளியிட இயக்குனர் அஸ்வத் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் அறிவிப்பை படக்குழு காணொளியொன்றின் மூலம் வெளியிட்டுள்ளது.10 வருடங்களுக்கு முன் தொடங்கிய நட்பை காட்டும் விதமாக தான் இப்படி ஒரு வீடியோவை இப்போது எடுத்ததாகவும், விரைவில் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.