Search
Close this search box.

இரண்டாவது நாளாக ஹட்டன் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் ஸ்தம்பிதம்…!

ஹட்டன் வலய கல்வி திணைக்கள கோட்டம் மூன்றில் உள்ள 45 பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் இரண்டாவது நாளாக  முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. இன்று 26ம் , 27ம் திகதிகளில் கோட்டம் மூன்றில் கற்பிக்கும் சுமார் 360 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில் பணி பகிஸ்கரிப்பு காரணமாக 30,000 மேற்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. கோட்டம் மூன்றில் உயர் தர பாடசாலைகள் 6ம், சாதாரண தர பாடசாலைகள் 15ம், கீழ் பிரிவு பாடசாலைகள்  24ம் காணப்படுகின்றது. இன்று இப் பாடசாலைகளுக்கு  ஒரு சில மாணவர்கள் மாத்திரமே வருகை தந்து மீண்டும் தமது இல்லங்களுக்கு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில், இரண்டு நாட்களாக கொட்டும் மழையில் பள்ளி படிப்பை மேற்கொள்ள முடியாதுள்ளது. ஆசியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம் நடத்தி மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்க வேண்டாம். எந்த பிரச்சனையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும். வருடத்தில் பல மாதங்கள் விடுமுறை பெரும் ஆசிரியர்கள் மாணவர்கள் கல்வி நடவடிக்கை பாதிப்பு ஏற்படும் வகையில் இவ்வாறு நடந்து கொள்ள கூடாது. ஆசிரியர்கள் தற்போது உள்ள மாணவர்களுக்கு  முன்னுதாரணமாக திகழ வேண்டும். ஆகையால், தொடர்ந்து போராட்டம் இல்லாமல் அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள்.

வேன் – பஸ் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! தடைப்பட்ட போக்குவரத்து – இன்று காலையில் பயங்கரம்

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை 7.30 மணியளவில் இடம் பெற்றதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் கினிகத்தேன வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியில் இருந்து ஹட்டனை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த வேன் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் இதேவேளை பேருந்துக்கும் வேனுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு, குறித்த விபத்து காரணமாக ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டிருந்தது.

இலங்கையில் பராமரிப்பு நிலைய சிறுமிகள் பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை..! பொலிஸார் தீவிர விசாரணை

கண்டி – வெலம்பொடை பிரதேசத்தில் உள்ள சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுமிகளை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்ததாக கூறப்படும் கண்காணிப்பாளரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த, மடாட்டுகம பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமியொருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவின் பிரகாரம் முறைப்பாடு செய்த சிறுமி கடந்த ஜனவரி மாதம் குறித்த சிறுவர் தடுப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். கண்காணிப்பாளரால் சிறுமிகள் பல்வேறு நபர்களுக்கு விற்கப்படுவதாகவும், சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் உள்ள மருத்துவ அறையில் பாலியல் செயல்பாடுகளுக்கான வசதிகளை வழங்குவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மடாட்டுகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி முறைப்பாடு செய்த சிறுமியின் மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக அவரை அநுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வெலம்படை பொலிஸாரும் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

கண்டி (Kandy) ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலை சேர்ந்த ஹரிவதனி என்ற உயர்தர மாணவி காணாமல் போயிருந்த நிலையில் நேற்று (09) சடலமாக கண்டெடுக்கப்பட்டார். குறித்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையிலேயே மாணவியின் பிறந்த நாளான நேற்று தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது மாணவியை யாரும் கடத்தவில்லை என தெரியவந்துள்ளது. உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கண்டி போதன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

திடீரென தீப்பற்றி எரிந்த தேயிலை தொழிற்சாலை – அதிகாலையில் பரபரப்பு

நாவலப்பிட்டி –  குருதுவத்தை கல்பாய பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் இன்று தீ விபத்து சம்பம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி இன்று அதிகாலை 3.45 மணியளவில் தேயிலை தொழிற்சாலையில் உற்பத்திப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கீழ் மாடியில் இருந்து தீ பரவியதுடன் மூன்றாவது மாடிக்கும் பரவியதாக குருதுவத்தை பொலிஸார் தெரிவித்தனர். தீ விபத்து ஏற்பட்ட போது தேயிலை தொழிற்சாலையில் பல ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு வேலை செய்து கொண்டிருந்ததாகவும், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிசார் தெரிவித்தனர். மேலும் தேயிலை தொழிற்சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தேயிலை துாள்கள் தீயில் எரிந்ததுடன் பிரதேசவாசிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் தீ பரவியதைத் தடுக்க முயற்சித்த போதிலும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் கண்டி மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் அழைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,700 ரூபாய் சம்பள வெற்றிக்கு கொண்டாட்டம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளம் தொடர்பாக நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்புக்கு மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் பட்டாசு கொழுத்தி பாற்சோர் சமைத்து சந்தோசங்களை பகிர்ந்து கொண்டனர். நேற்று (04) வனராஜா மணிக்கவத்தை மற்றும் வனராஜா வோர்லி ஆகிய தோட்டப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் சந்தோசத்தினை பகிர்ந்து கொண்டார்கள். பெருந்தோட் தொழிலாளர்களுக்கு இந்த 1,700 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முன் நின்று பாடுபட்ட நாட்டின் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க தொழில் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் மனுஷ்க நானயகார இலங்கை தொழிலாளர் காங்ரஸின் காங்ரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி ராமேஸ்வரன் ஆகியோருக்கு மக்கள் நன்றியினையும் தெரிவித்தனர்.

ஹட்டன் டிக்கோயா பிரதான வீதியில் சரிந்து விழுந்த பாரிய மண் திட்டு…!

ஹட்டன் நகரில் உள்ள பேருந்து தரிப்பிடம் பகுதியில் உள்ள ஹட்டன் டிக்கோயா பிரதான வீதியில் நேற்றையதினம்(03) இரவு பாரிய மண் திட்டு சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று(04) காலை நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் மீண்டும் அப் பகுதியில் உள்ள மண் திட்டு சரிந்து விழும் அபாயமும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அப் பகுதியில் பாடசாலை மாணவர்கள் பயன்பாடுகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் பகுதி என்பதால் நிரந்தர கொங்ரீட் மதில் சுவர் எழுப்பி வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் இதற்கான தீர்வை ஹட்டன் நகர சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள்  கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆபத்தாக பயணித்ததால் ஏற்பட்ட விபரீதம் – இலங்கை வந்த வெளிநாட்டவர் பரிதாப மரணம்…

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த உடரட்ட மெனிக்கே ரயிலில் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் புகையிரத சுரங்கப்பாதையில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளபர். இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக நானுஓயா ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எல்ல பிரதேசத்தை நோக்கி ரயிலில் பயணித்த வெளிநாட்டு பிரஜையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ரயிலின் கதவில் ஆபத்தான முறையில் பயணித்தமையால் சுரங்கப்பாதையில் மோதி இவர் உயிரிழந்ததாக  தெரியவருகின்றது. நானுஓயா மற்றும் இதல்கஸ்ஹின்ன ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள புகையிரத சுரங்கப்பாதையில் மோதி இவர் உயிரிழந்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார். இதனையடுத்து உயிரிழந்தவரது சடலம் ரயில்வே பாதுகாப்புப் பிரிவினரின் உதவியுடன் ஹப்புத்தளை ரயில்  நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

பதுளை, நுகே சந்தி பகுதியில் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள வயல்வெளியில் இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (03) இரவு பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் ஹம்பாவெல, ஹிந்தகொட பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது. காட்டு விலங்குகளிடமிருந்து மரக்கறி தோட்டத்தை பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த மின்சார இணைப்பில் சிக்கியதாலேயே இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாள்வெட்டுத் தாக்குதலில் இரு பிள்ளைகளின் தாய் பலி! – தனிப்பட்ட தகராறால் இலங்கையில் பயங்கரம்

கண்டி – மஹியாவ பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர்  ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் கடந்த சனிக்கிழமை (1) இரவு இடம்பெற்றுள்ளது. கண்டி மஹியாவ  பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய வேளாங்கனி எஷிராணி என்ற தாயே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இக்கொலையுடன் தொடர்புடைய மஹியாவ எம். டி பிரிவில் வசிக்கும் 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர். தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் விசாணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரும் சந்தேக நபரும் அயலவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.