தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவிற்கு விரைவில் தேர்தல்
தனது தலைவர் பதவியை கூட தியாகம் செய்து அனைத்து தெரிவுகளையும் யாப்பு விதியின் படி மூலக்கிளைகளிலிருந்து தெரிவு செய்வதில் தான் உறுதியாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (Sridharan) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, நாளை மறுதினம் திருகோணமலை மாவட்டத்தில் வருகின்ற வழக்கு ஆட்சேபனைகளை இணைக்கின்ற மறுமொழிகான நாளாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், காலம் தாழ்த்தாத வகையில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையிலான அதிபர் தேர்தலை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பதையே மக்கள் விரும்புவதாக சிறீதரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இடம்பெற்ற மர்ம மரணம் ; இரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்
மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெரதுவ பகுதியில் உள்ள வீடொன்றில் இரத்தக் காயங்களுடன் நபரொருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை (18) பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 54 வயதுடைய ஆண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் இந்த சம்வம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.
மாகாண மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை
2024ம் ஆண்டுக்கான மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (17.07.2024) மாகாண ரீதியில் பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற பளு தூக்கல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் மூவர் தங்கப்பதக்கத்தையும், ஒரு வெள்ளி பதக்கத்தையும் பெற்றுள்ளனர் . அதில் 17 வயது பிரிவில் 59kg எடை பிரிவில் 70kg எடையை தூக்கி சூ.அனுஷா முதலாம் இடத்தையும், 64 kg எடை பிரிவில் 75kg எடையை தூக்கி க.வன்சிகா முதலாம் இடத்தையும், 81kg எடை பிரிவில் 84kg எடையை தூக்கி க.அபிசாளினி இரண்டாம் இடத்தையும், 20வயது பிரிவில் 49kg எடை பிரிவில் 80kg எடையை தூக்கி பி.மேரி அசெம்ரா முதலாம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கும் , மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். பளுதூக்கல் போட்டிக்கான மாணவர்களுக்கு பயிற்றுவிப்பாளர் ஞா. ஜீவன் ஆசிரியர், நெறிப்படுத்திய பயிற்றுவிப்பாளர் செ. அம்பிகா, மற்றும் மாணவர்களுக்கு பொறுப்பாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் ந. ரூபராஜா ஆகியோரின் தியாகமும் உழைப்பும் இன்றியமையாததாகும். இவ்வாறு தற்காலத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த வீர , வீராங்கனைகள் அதிகம் பளு தூக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகள் செய்யாததை ஆசிரியர்கள் செய்கின்றனர் – மனுச நாணயக்கார தெரிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த யுத்தக் காலத்திலும் பாடசாலைகளை மூட இடமளிக்கப்படவில்லையென வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார். மத்துகம பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நடந்த சந்தர்ப்பத்தில் ஆசிரியர்கள் பதுங்குக் குழிகளுக்குள் அமர்ந்து மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தனர். தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நலனுக்காக 10,000 பாடசாலைகள் மூடப்படுவது அவர்களது பலம் எனக் கருதுகின்றனர். யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் பாடசாலைகளை மூடுவதற்கு இடமளிக்கவில்லை. ஆசிரியர்கள் தெய்வங்கள் என்ற நிலைமையை மாற்றி, பாடசாலைக்குச் செல்லாத தொழிற்சங்கங்களின் தலைவர்கள் அரசியல் நலனுக்காக அதிபர்களையும் ஆசிரியர்களையும் பயன்படுத்தி இலவசக் கல்விக்குப் பாரிய களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். கட்சி நிற வேறுபாடின்றி ஒரே அரசாங்கத்தில் இணைத்துள்ளோம். இன்று அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் அரசியலைப் பற்றிச் சிந்திக்காமல் ஒன்றிணைந்துள்ளதாக அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி தொடர்பான அறிவிப்பு.
ஓகஸ்ட் மாதத்திலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதி தொடர்பான குழுவின் அறிக்கை ஓகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி, ஓகஸ்ட் மாதத்திலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சில அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மின்சார வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீள ஆரம்பிக்கவுள்ள ஜப்பான்
நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானியத் தூதுக்குழுவின் தலைவர் கலாநிதி இசுமி ஹிரோடோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜப்பானினால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிப்பது மற்றும் இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கல்வி, விவசாய நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு துறைமுகக் கிழக்கு இறங்குதுறை மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணம் ஆகிய அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை – மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்று (19) பிற்பகல் 1 மணிவரை கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாகப் புத்தளம் கடற்பரப்புகளிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 தொடக்கம் 65 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். மேலும் கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாகப் பொத்துவில் வரை கடல் அலையின் உயரம் சுமார் 2.0 – 2.5 மீற்றர் வரை உயர வாய்ப்புள்ளதாகவும் அவ்வாறு உயரும் அலைகள் நிலத்தை நோக்கி வரக்கூடிய நிலை ஏதும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு நன்கொடை வழங்கிய அமெரிக்கா…!
காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய அனர்த்தங்கள் மற்றும் அவசர சூழ்நிலைகளுக்கு முகங்கொடுப்பதற்கு இலங்கை தயார்நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவசியமான உபகரணங்களை அமெரிக்கா இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் மனிதாபிமான உதவிகளுக்கான பணியகத்தின் நிதியுதவியின்கீழ் ஐக்கிய நாடுகள் உலக உணவுத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு இந்த உபகரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. உலக உணவுத்திட்டத்தின் விசேட நடவடிக்கைகளுக்காக அமெரிக்க முகவரகத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2.5 மில்லியன் டொலர் நிதியின் ஒருபகுதியே மேற்குறிப்பிட்ட உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த உபகரணங்கள் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் மனிதாபிமான உதவிகளுக்கான பணியகத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய மனிதாபிமான ஆலோசகர் டஸ்ரின் ஷியோவினால் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் உதய ஹேரத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தின் அதிகாரி டக் சொனெக், ‘உயிர்களையும், சொத்துக்களையும் பாதுகாப்பதும், அனர்த்தங்களால் மக்கள் மத்தியில் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதுமே அமெரிக்காவினால் இலங்கையிலும், உலகளாவிய ரீதியிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதாபிமான அனர்த்த உதவி செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்’ எனச் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு அனர்த்தங்களைத் தடுப்பதற்கும், அவற்றின் தாக்கங்களைக் குறைப்பதற்கும் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கொண்டிருக்கும் இயலுமையை மேம்படுத்தும் நோக்கில் அதன் அதிகாரிகளுடன் தாம் தொடர்ந்து இணைந்து பணியாற்றிவருவதாகவும், இது இலங்கையின் அவசர சூழ்நிலைகளின்போது அவசியமான உதவிகளை வழங்குவது தொடர்பில் தாம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டைக் காண்பிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ். நெடுந்தீவு கடலில் குழந்தை பிரசவம்
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடலில் பெண்ணொருவர் புதன்கிழமை குழந்தை பிரசவித்துள்ளார். யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து , அம்புலன்ஸ் படகு மூலம் யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. படகில் மருத்துவ அதிகாரி, மருத்துவமாது உள்ளிட்டவர்களின் உதவியுடன் அப்பெண்ணை குறிகாட்டுவான் இறங்கு துறை நோக்கி அழைத்து வந்துள்ளனர். அதன்போது அப்பெண் படகினுள் குழந்தையை பிரசவித்துள்ளார். தொடர்ந்து தாயையும் சிசுவையும் குறிகாட்டுவான் அழைத்து வந்து, அங்கு தயார் நிலையில் இருந்த நோயாளார் காவு வண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர். தற்போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதிகள்! சிக்கிய ஏழு பெண்கள்
மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விடுதிகளை களனிப்பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுற்றிவளைத்ததுடன் விடுதியில் தங்கியிருந்த ஏழு பெண்களையும் கைது செய்துள்ளனர். கடவத்தை, எல்தெனிய பிரதேசத்தில் மசாஜ் நிலையம் ஒன்றும், கடவத்தை பகுதியில் இயங்கிய மற்றுமொரு மசாஜ் நிலையமும் சோதனையிடப்பட்டுள்ளது. இதன் போது, எல்தெனிய பகுதியிலுள்ள மசாஜ் நிலையத்தில் நான்கு பெண்களும் கடவத பகுதியில் உள்ள மசாஜ் நிலையத்தில் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் ஹகுரன்கெத்த, குருநாகல், ஹக்மன, திஸ்ஸமஹாராமய, எம்பிலிப்பிட்டிய, கொட்டாவ மற்றும் வேயங்கொட ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்கள் 25 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், அவர்களை மஹர நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் முன்னிலைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.