Search
Close this search box.

ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர் ஜீவன்

மலையகத் தமிழன்” என்பது எனது அடையாளம்! ஆனால், “நான் ஒரு இலங்கையன்”. அதை என்னால் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் முகமாக, “ஒன்றாக வெல்வோம்” என்ற தொனிப் பொருளிலான பொதுக்கூட்டத் தொடரின், இரண்டாவதுப் பேரணி கண்டி பொது வர்த்தக நிலையத்திற்கு முன்பாக நேற்று (14) இடம்பெற்றிருந்தது. இக்கூட்டத் தொடரில் கலந்துக்கொண்டு தொடர்ந்து உரையாற்றிய போதே அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மெலும் கருத்து தெரிவித்த அவர், 2024 ஆம் ஆண்டில் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் ரணில் விக்ரமசிங்க தான். அந்த அடையாளத்துக்கு ஒரு தீர்வு கட்டாயம் கிடைத்தாக வேண்டுமென்றால், அடுத்த ஜனாதிபதியாக அவரே வந்தாக வேண்டும். “கெஞ்சி கேட்டால் பிச்சை துணிந்து கேட்டால் உரிமை”. நாம் இந்த 1700 ரூபாய் சம்பளத்தை மட்டும் இறுதிக் கோரிக்கையாக வைக்க கூடாது ஏனென்றால், நம்மை பொறுத்த வரைக்கும் “அடையாளப் பிரச்சினை” ஒன்று இருக்கின்றது. அந்த அடையாளத்திற்கு கட்டாயம் ஒரு தீர்வு கிடைத்தாக வேண்டும். ஒரு தீர்வு கிடைத்தாக வேண்டுமென்றால், கட்டாயம் அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க வந்தாக வேண்டும். அப்படி இருக்கும் போது, நான் என்னுடைய மக்களிடம் ஒரே ஒரு விடயத்தை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். நான் ஒரு “மலையகத் தமிழன்” என்று எவ்விடத்திலும் சொல்ல போவது கிடையாது. “மலையகத் தமிழன்” கலாச்சாரமாக என்னுடைய அடையாளம். ஆனால், நான் ஒரு “இலங்கையன்” அதை நான் எந்த ஒரு இடத்திலும் விட்டுக்கொடுக்க முடியாது. அப்படி இருக்கும் தருணத்தில் உங்கள் எல்லோரிடமும் நான் ஒரே ஒரு விடயத்தை தான் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். இன்றைக்கு நிறைய பேர் இந்த பதவியை பார்த்து பயந்து ஓடிப்போய் இறுதியில் ஒன்றுமே செய்ய முடியாமல், “நான் தான் நாட்டுக்கு அடுத்த ஜனாதிபதி” என்று சொல்ல வருகிறார்கள். ஆனால், மக்கள் எல்லோருக்கும் தெரியும். யார் நின்று வெற்றிப் பெற்றது என்று. இப்படி இருக்கும்போது, மக்கள் எல்லோருமே ஒன்று திரண்டு, அனைவருமே ஒன்றிணைந்து, ஒழுக்கமாக, கட்டுக்கோப்பாக இருந்து அடுத்த ஜனாதிபதியாக யாரை தெரிவுசெய்யப் போகின்றோம்? நிச்சயம் அது ரணில் விக்ரமசிங்க அவர்களாகவே இருக்க வேண்டும். “காணி உரிமை” கட்டாயம் நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் நான் ஜனாதிபதியிடம் ஒரு கோரிக்கையை முன் வைத்தேன். மக்களிடம் காணி உரிமையை கொடுங்கள், கட்டாயம் அவர்கள் மேலே வருவார்கள். எமக்கு இலவச வீடு தேவையில்லை. வீடு கட்டுவதற்கான வாய்ப்பை உருவாக்கித் தாருங்கள். அது போதும் என்று நான் அவரிடம் கூறினேன். இன்றைக்கு நம்மை பொறுத்த வரைக்கும் ஜனாதிபதி அவர்கள், கிட்டத்தட்ட 4,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்து இருக்கின்றார். அந்த நிதி ஒதுக்கீடு செய்வதற்கான காரணம் என்னவென்றால், மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே ஆகும் என தெரிவித்தார். இந்நிகழ்வில், பல்வேறு அரசியல் கட்சியினரை பிரதிநிதித்துவப்படுத்திய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்துக் கொண்டிருந்தனர், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானும் பங்கெடுத்திருந்தார் என்பதும் குறிப்படத்தக்கது.

பாதாளஉலகத்துடன் தொடர்புபட்ட அச்சுறுத்தும் சுவரொட்டிகள்- பொலிஸார் தீவிரவிசாரணை

பாதளஉலகத்துடன் தொடர்புபட்ட அச்சுறுத்தும் சுவரொட்டிகள் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துருகிரிய துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்ட பின்னர் தெமட்டகொட மகரஹம பகுதிகளில் காணப்பட்ட மர்மசுவரொட்டிகள் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கிளப்வசந்தவின் இறுதிநிகழ்வுகள் இடம்பெற்ற தினத்தன்று பாதளஉலகத்தலைவர் மதுஸின் உடல் புதைக்கப்பட்ட கொடிகமுவ மயானத்தில் பாதளஉலகத்தினரால்  ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் காணப்பட்டுள்ளன. மதுஸின் படத்துடன் காணப்பட்ட சுவரொட்டிகளில்   அன்புக்குரிய சகோதரரே நாங்கள் ஒவ்வொருவராக அனுப்பிக்கொண்டிருக்கின்றோம்,எங்களுக்காக காத்திருங்கள் என்ற வாசகங்கள் காணப்பட்டுள்ளன. மதுசுடன் உறவிலிருந்து பெண்ணொருவர் கிளப்வசந்த கொல்லப்பட்ட தினத்தன்று மதுசின் கல்லறைக்கு சென்று மெழுகுதிரி ஏற்றியுள்ளார். 2012 வெலிக்கடைசிறைச்சாலை வன்முறையில் கொல்லப்பட்ட களுதுசாரவின் மனைவியான இவர் பின்னர் மதுசுடன் துபாயில் வாழ்ந்துள்ளார். மேலும் இந்த பெண் வசிக்கும் பகுதியில் ( மஹரஹம) மதுஸ் சென்ற இடத்திற்கு பாதளஉலகத்தை சேர்ந்த அனைவரும் செல்வதற்கு தயாராக உள்ளனர் , கஞ்சிப்பானை குடும்பத்திற்கும் இதே தண்டனை போன்ற சுவரொட்டிகளும் காணப்பட்டுள்ளன. ஹிருசெவன தொடர்மாடி மற்றும் தெமட்டகொடயில் இவ்வாறான சுவரொட்டிகள் காணப்பட்டுள்ளன.

நஷ்ட ஈட்டை செலுத்தி முடிக்க கால அவகாசம் கோரும் மைத்திரிபால

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாவில் 58 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதுடன் மீதி பணத்தை செலுத்தி முடிக்க கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, மீதி பணத்தை செலுத்தி முடிக்க 6 வருடகால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணி மூலம் உயர் நீதிமன்றத்துக்குக் கோரிக்கை விடுத்துள்மை குறிப்பிடத்தக்கது.

பிறப்பு, திருமணங்கள் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

நாட்டில் உள்ள சில பதிவாளர்கள் பிறப்பு, திருமணங்கள் மற்றும் இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்த பின்னர் சம்பந்தப்பட்ட பிரதிகளை அந்தந்த பிரதேச செயலகங்களுக்கு  அனுப்புவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெற்றோர், திருமணமான தம்பதிகள் மற்றும் பாதுகாவலர்களுக்கு ஒரு நகலை வழங்கினாலும் ஏனைய பிரதிகள் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்படுவதில்லை என கூறப்படுகின்றது. இதனால் பிறப்பு, திருமணம், இறப்பு நகல்களை பெற்றுக்கொள்வதற்காக  ஆவண காப்பகத்திற்கோ அல்லது சம்பந்தப்பட்ட பிரதேச செயலக  அலுவலகங்களுக்கோ சென்றாலும் பிரதிகள் இல்லாமையினால் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், சில பதிவாளர்கள் பிறப்பு, திருமணம், இறப்பு பதிவு செய்தாலும், சம்பந்தப்பட்ட புத்தகத்தில் உள்ள தகவல்களை நகல் எடுப்பதில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 400 பிறப்பு, திருமண, இறப்பு பதிவாளர்கள் இருப்பதாகவும், அவ்வாறான சம்பவம் ஏதேனும் ஒரு இடத்தில் இடம்பெற்றிருந்தால், அது தொடர்பில் ஆராய முடியும் எனவும்  பதிவாளர் நாயகம் டபிள்யூ.ஆர்.ஏ.என்.எஸ்.விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் இன்று வெளியாகவுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு!

திருத்தப்பட்ட மின்கட்டணத்தை பொது பயன்பாட்டு ஆணையம்  இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் மின்சார சபையின் முன்மொழிவுகளை மீளாய்வு செய்து, உரிய தரவுகளை ஆராய்ந்து, பொதுமக்களின் கருத்துக்களைக் கருத்திற்கொண்ட பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் இது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன் பிற்பகலில் மின் கட்டண திருத்தம் தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை, மின் கட்டணத்தை சுமார் 30 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் வீடு மற்றும் மத தலங்களில் மின் கட்டணம் 18 சதவீதத்தாலும், கைத்தொழில்சாலைகள், ஹோட்டல்களுக்கான மின் கட்டணம் 12 சதவீதத்தாலும், அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கான மின் கட்டணம் 24 சதவீதத்தாலும் குறைக்கப்படும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையர்களுக்கு விசா இன்றி தாய்லாந்து செல்ல அனுமதி

இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல இன்று (15) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக முதல் தடவையாக இலங்கையர்களுக்கு விசா இன்றி தாய்லாந்து செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தாய்லாந்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய கொள்கையின்படி, ஒரு சுற்றுலாப் பயணி 60 நாட்களுக்கு விசா இல்லாமல் நாட்டில் தங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விசா இல்லாமல் தாய்லாந்திற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகள் தங்குமிட நிதி மற்றும் திரும்புவதற்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும் என்பதுடன், அந்நாட்டின் குடிவரவு அதிகாரிகளின் ஒப்புதலைப் பெறுவதும் கட்டாயமாகும். தாய்லாந்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ராஜபக்சர்களுக்கு துணை போகும் ஜே.வி.பி: சஜித் குற்றச்சாட்டு

ராஜபக்சர்களை ஆட்சிக்கு கொண்டு வர வாக்குத் திரட்டும் திட்டத்தை ஜே.வி.பி. தரப்பினரே முன்னெடுத்தனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) குற்றஞ்சாட்டியுள்ளார். களுத்துறையில்  நேற்று (14.07.2024) நடைபெற்ற மக்கள் அரண் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ராஜபக்சர்களை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு வீடு வீடாகச் சென்று அடிமட்ட பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்தது ஜே.வி.பி. தரப்பினரே. அவர்கள் ராஜபக்சர்களை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு டீல் போட்டு வீடு வீடாகச் சென்று சுவரொட்டிகளை ஒட்டினர். இவர்களைப் போன்று திருடர்களுடன் எனக்கு எந்த டீலும் இல்லை. மகிந்த ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டு வர கிராமத்தில் வீடு வீடாகச் சென்று வாக்குத் திரட்டும் திட்டத்தை இந்த மக்கள் விடுதலை முன்னனணியினரே முன்னெடுத்தனர். நாட்டை அழித்த திருடர்களை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக மக்கள் விடுதலை முன்னனணியினர் செயற்பட்டாலும், அந்தத் திருடர்களுடன் இணைந்து பதவிகளை ஏற்றுக்கொள்ள நான் ஒருபோதும் விரும்பவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முழு நாட்டுக்கும் நகைச்சுவைகளை முன்வைத்து வருகின்றார். புண்ணியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான ஒருவர், தேர்தலுக்குப் பயந்து தேர்தலை நடத்தாமல் அதிகாரத்தில் இருந்து கொள்வதற்குப் பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகின்றார். இவ்வாறான ஒருவரை நான் எனது வாழ்க்கையில் பார்த்தில்லை. போட வேண்டிய ஒவ்வொரு முடிச்சுக்களையும் அவர் போடுகின்றார். சிறப்புரிமைகளை வைத்து பயனடைய நினைக்கின்றார். சலுகைகள், வரப்பிரசதாசங்களை வழங்கி கட்சித் தலைவர்களை வளைத்துப் போடும் வேலையிலும் அவர் இறங்கியிருக்கின்றார். கட்சித் தலைவர்களும் அவ்வாறான நடவடிக்களையும் முன்னெடுத்துள்ளனர். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சலுகைகளை அடிப்படையாகக் கொண்டு தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் மோசமான அரசியல் கலாசாரத்துக்கும், அவ்வாறான அரசியலை முன்னெடுப்பவர்களையும் நிறுத்துகின்ற இந்தப் பேராசை அரசியலையும் முடிவுக்குக் கொண்டு வரும் காலம் நெருங்கி விட்டது. ஜனாதிபதியும் அரச தரப்பினரும் தேர்தலைக் கண்டு அஞ்சமடைந்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியால் ஐக்கிய தேசியக் கட்சி பூச்சியத்துக்கு வீழ்ந்ததுடன், புண்ணியத்தால் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தாலும் அதனை ஏற்று கொள்வதற்கு கூட பல மாதங்கள் பிடித்தன. மூலோபாய ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக அவர்கள் தங்கள் இருப்பைப் பாதுகாக்கும் விதமாகவே இவ்வளவு காலமும் செயற்பட்டு வந்துள்ளனர். இத்தகைய சுயநல போக்குகளை விடுத்து, மக்களின் யுகத்தை உருவாக்கி, சாரதாண மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் அரசொன்றே தற்போது நாட்டுக்கு அவசியம்” என சுட்டிக்காட்டியள்ளார்.

சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்திற்கு  முன்பாக இன்று காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டிருந்த வைத்தியர் அர்ச்சுனா கடந்த திங்கட்கிழமை விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது விடுமுறை காலம் முடிந்து இன்று மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்லவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்ப்பதற்காக பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்குள் காரணம் ஏதுமின்றி எவர் ஒருவரையும் பொலிஸார் அனுமதிக்கவில்லை என்றும்,  தங்களது கட்டுப்பாட்டில் சாவகச்சேரி வைத்தியசாலையை பொலிஸார் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழர் பகுதியில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்.

திருகோணமலையில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். வர்த்தகரையும், அவரது கெப் ரக வாகனத்தையும் கடத்திச் சென்று அவரை கொலை செய்ததுடன், அதே வாகனத்தில் ஏற்றி தீ வைத்து எரிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்செயல் தொடர்பில் நேற்று முன்தினம் உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக, விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். திருகோணமலை அலஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அலஸ்வத்த பிரதேசத்தில் கடையொன்றை நடாத்திவந்த குறித்த நபர், அங்கு தங்கியிருந்த போது சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அவரை தாக்கி கெப் வண்டியுடன் கடத்திச் சென்றுள்ளனர். குறித்த வர்த்தகரை கொலை செய்த பின்னர், மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனப்பகுதியில் சடலத்தை கெப் வண்டியில் வைத்து தீ வைத்து எரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 24 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதியிடம் ஜீ.எல்.பீரிஸ் எழுப்பியுள்ள கேள்வி

நாட்டின் பொருளாதாரம் வலுவாக கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும், நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரகடனப்படுத்தினால், தேர்தலை நடத்துவதற்கு என்ன அச்சம் என்று முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் வினவியுள்ளார். அட்டமஸ்தானாதிபதி கலாநிதி பல்லேகம ஹேமரதனவை நேற்று (14) சந்தித்து ஜனாதிபதி தேர்தல் குறித்து உரையாடி ஆசி பெற்ற பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”ஜனாதிபதி தேர்தலை யாராலும் ஒத்திவைக்க முடியாது. நாட்டின் பொருளாதாரம் வலுவாக கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும், நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரகடனப்படுத்தினால், தேர்தலை நடத்துவதற்கு என்ன அச்சம். எனவே ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு எந்தவொரு நபருக்கும் இடமில்லை. ஜனாதிபதி தேர்தல் நடத்துவது தொடர்பாக அட்டமஸ்தானாதிபதி கலாநிதி ஹேமரத்தன தேரருடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினேன். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடினோம்.”என்று கூறியுள்ளார்.