Search
Close this search box.

இலங்கைக்கு நன்கொடை வழங்கிய அமெரிக்கா…!

காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய அனர்த்தங்கள் மற்றும் அவசர சூழ்நிலைகளுக்கு முகங்கொடுப்பதற்கு இலங்கை தயார்நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவசியமான உபகரணங்களை அமெரிக்கா இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் மனிதாபிமான உதவிகளுக்கான பணியகத்தின் நிதியுதவியின்கீழ் ஐக்கிய நாடுகள் உலக உணவுத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு இந்த உபகரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. உலக உணவுத்திட்டத்தின் விசேட நடவடிக்கைகளுக்காக அமெரிக்க முகவரகத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2.5 மில்லியன் டொலர் நிதியின் ஒருபகுதியே மேற்குறிப்பிட்ட உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த உபகரணங்கள் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் மனிதாபிமான உதவிகளுக்கான பணியகத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய மனிதாபிமான ஆலோசகர் டஸ்ரின் ஷியோவினால் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் உதய ஹேரத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தின் அதிகாரி டக் சொனெக், ‘உயிர்களையும், சொத்துக்களையும் பாதுகாப்பதும், அனர்த்தங்களால் மக்கள் மத்தியில் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதுமே அமெரிக்காவினால் இலங்கையிலும், உலகளாவிய ரீதியிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதாபிமான அனர்த்த உதவி செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்’ எனச் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு அனர்த்தங்களைத் தடுப்பதற்கும், அவற்றின் தாக்கங்களைக் குறைப்பதற்கும் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கொண்டிருக்கும் இயலுமையை மேம்படுத்தும் நோக்கில் அதன் அதிகாரிகளுடன் தாம் தொடர்ந்து இணைந்து பணியாற்றிவருவதாகவும், இது இலங்கையின் அவசர சூழ்நிலைகளின்போது அவசியமான உதவிகளை வழங்குவது தொடர்பில் தாம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டைக் காண்பிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். நெடுந்தீவு கடலில் குழந்தை பிரசவம்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடலில் பெண்ணொருவர் புதன்கிழமை குழந்தை பிரசவித்துள்ளார். யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து , அம்புலன்ஸ் படகு மூலம் யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. படகில் மருத்துவ அதிகாரி, மருத்துவமாது உள்ளிட்டவர்களின் உதவியுடன் அப்பெண்ணை குறிகாட்டுவான் இறங்கு துறை நோக்கி அழைத்து வந்துள்ளனர். அதன்போது அப்பெண் படகினுள் குழந்தையை பிரசவித்துள்ளார். தொடர்ந்து தாயையும் சிசுவையும் குறிகாட்டுவான் அழைத்து வந்து, அங்கு தயார் நிலையில் இருந்த நோயாளார் காவு வண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர். தற்போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதிகள்! சிக்கிய ஏழு பெண்கள்

மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விடுதிகளை களனிப்பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுற்றிவளைத்ததுடன் விடுதியில் தங்கியிருந்த ஏழு பெண்களையும் கைது செய்துள்ளனர். கடவத்தை, எல்தெனிய பிரதேசத்தில் மசாஜ் நிலையம் ஒன்றும், கடவத்தை பகுதியில் இயங்கிய மற்றுமொரு மசாஜ் நிலையமும் சோதனையிடப்பட்டுள்ளது. இதன் போது, எல்தெனிய பகுதியிலுள்ள மசாஜ் நிலையத்தில் நான்கு பெண்களும் கடவத பகுதியில் உள்ள மசாஜ் நிலையத்தில் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் ஹகுரன்கெத்த, குருநாகல், ஹக்மன, திஸ்ஸமஹாராமய, எம்பிலிப்பிட்டிய, கொட்டாவ மற்றும் வேயங்கொட ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்கள் 25 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், அவர்களை மஹர நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் முன்னிலைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் மோதுண்டு இளைஞன் பரிதாப மரணம்..!

காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் இகலமுல்லவத்தை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டுகொட ரயில் வீதியின் நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நேற்று (18) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் களத்தை தீவிரமாக்கும் 22ஆம் திருத்த சட்டமூலம்..!

நாடாளுமன்றத்தில், எதிர்வரும் வாரங்களில் 22ஆம் திருத்தச்சட்டமூலம் கொண்டு வரப்படமாட்டாது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு பின்னர், 22ஆம் திருத்த சட்டமூலம் முன்வைக்கப்படும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் 22ம் திருத்த சட்டத்திற்கு நாடாளுமன்றில் ஆதரவு கிடைக்காவிட்டால் அன்றைய தினமே நாடாளுமன்றை கலைப்பதற்கு வர்த்தமானி அறிவித்தல் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பான வர்த்தமானியில் வெளியிடுவதை தவிர்க்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நீதியமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இந்த சட்ட மூலத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவினை பெற்றுக்கொள்வதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சவால்களை எதிர்நோக்குவதால் நாடாளுமன்றை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்ட 5000 கோடி: அவசரமாக இலங்கைக்கு விரையும் சர்வதேச பொலிஸ்

இலங்கையில் 5000 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பிய இணையக் குற்றவாளிகள் தொடர்பில் விசேட விசாரணைக்காக சர்வதேச பொலிஸ் மற்றும் சீன பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நாட்டிற்கு வரவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று (18) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்த இணையக் குற்றவாளிகள் நீர்கொழும்பு பெய்த்துகல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கணனி ஆய்வு கூடம் ஒன்றை நடத்தி பல இலட்சம் ரூபாவை இணையம் மூலம் மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்  நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். பல நாடுகளைச் சேர்ந்த சந்தேகநபர்கள் சுற்றுலா விசாவில் நாட்டுக்கு வந்து இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்ட சீனப்பிரஜைகள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் டுபாயில் சைபர் முகாம் ஒன்றை நடத்தி வருவதாகவும், டுபாய் பொலிஸார் அந்த முகாமை சோதனையிட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த குற்றவாளிகள் டுபாயில் மக்களை ஏமாற்றி பெரும் தொகையை மோசடி செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்த குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள், இது தொடர்பான 100 வங்கிக் கணக்குகளையும் விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட சீன பிரஜை ஒருவர் நீர்கொழும்பில் 30 அறைகள் கொண்ட மூன்று மாடிகள் கொண்ட ஹோட்டலை 80 இலட்சம் ரூபா வாடகை அடிப்படையில் 3 மாத காலத்திற்கு பெற்று அதனை பயன்படுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கணக்குகளை பயன்படுத்தி 5000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தேகநபர்கள் சில நாட்களில் 800 இலட்சம் ரூபாவிற்கு மேல் சம்பாதித்துள்ளதாகவும் அதனை கொண்டாடும் வகையில் நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விருந்து ஒன்றையும் நடத்தியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர் இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 39 சந்தேக நபர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கறுப்பு பணம் வைத்திருப்போருக்கு தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ள சலுகை

நாட்டில் கறுப்பு பணம் வைத்திருப்போருக்கு விசேட சலுகை ஒன்றை வழங்க உள்ளதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. பொலனறுவையில் நடைபெற்ற கூட்டமொன்றில் தேசிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியினால் நிறுவப்படும் அரசாங்கத்தில் கறுப்பு பணத்தை முதலீடு செய்வதற்காக விசேட நிதியம் உருவாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு சேர்க்கப்படாத பணம் மக்களிடம் உள்ளதாக, அவ்வாறான பணம் கறுப்புப் பணமாகக் கூட இருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான கறுப்பு பணத்தை அரசாங்க செயற்திட்ட நிதியத்திற்கு இந்தப் பணத்தை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.நாட்டின் எந்தவொரு நபரும் முதலீடு செய்யக்கூடிய வகையில் இந்த நிதியம் உருவாக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

திரையரங்கில் நடந்த சட்டவிரோத செயல்! மக்களுக்கு விதிக்கப்படவுள்ள தடை

இலங்கை திரைப்பட இயக்குநர்கள் திரையரங்குகளுக்குள் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு செல்வதை தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் ஒரு திரைப்படத்தை சட்டவிரோதமாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றிய சம்பவத்தை தொடர்ந்தே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் திரையரங்கு உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரைப்பட இயக்குனர் ஜயந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார். இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனமும் திரையரங்குகளுக்குள் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு செல்வதை தடை விதித்து உத்தியோகபூர்வ உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் ஜயந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இயங்குநிலை தென்மேற்கு பருவ பெயர்ச்சி நிலைமை காரணமாக இவ்வாறு காற்று நிலைமை அதிகரிக்கும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.