நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானியத் தூதுக்குழுவின் தலைவர் கலாநிதி இசுமி ஹிரோடோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜப்பானினால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிப்பது மற்றும் இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
கல்வி, விவசாய நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு துறைமுகக் கிழக்கு இறங்குதுறை மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணம் ஆகிய அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.