ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு..! பகிரங்க அறிவிப்பை வெளியிட்ட மகிந்தானந்த
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக பரிந்துரைப்பதற்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தனது ஆதரவை தெரிவித்துள்ளார். எனினும் பொதுஜன பெரமுன தரப்பில் கூறப்படும் தம்மிக்க பெரேராவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தாம் தீர்மானிக்கவில்லை என்றும் அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார் விக்ரமசிங்கவின் முதிர்ச்சி, சர்வதேச அனுபவம் மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகள் ஆகியவை, அவர் நாட்டை வழிநடத்துவதற்கு பொருத்தமானவர் என்பதற்கான முக்கிய அம்சங்கள் என்று அவர் எடுத்துரைத்துள்ளார். இந்தநிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விரைவில், இது தொடர்பான கொள்கை அடிப்படையிலான தீர்மானத்தை எட்டும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் இதன்படி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார், அவருடன் இணைந்து உருவாக்கப்படும் புதிய கூட்டணியில், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல மில்லியன் பெறுமதியான இரத்தினக் கற்களுடன் கட்டுநாயக்காவில் சிக்கிய ஜப்பானிய தம்பதி
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் பல மில்லியன் ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களை வெளிநாட்டுக்கு கடத்த முற்பட்ட வெளிநாட்டு தம்பதி நேற்று (16)காலை பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலைய புறப்பாடு முனையத்தின் நுழைவாயிலில் உள்ள விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த பெண் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டு தம்பதியினரின் பொதிகளை சோதனையிட்டார். ஜப்பானிய தம்பதிகள் என அடையாளம் காணப்பட்ட தம்பதியரின் பொதிகள் எக்ஸ்ரே ஸ்கானர்கள் மூலம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் குறித்த தம்பதியினரும் இரத்தினக் கற்களும் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த மாணிக்கக் கற்கள் பல மில்லியன் ரூபாய்களுக்கு மேல் பெறுமதியானதாக இருந்தாலும், சரியான அளவு மற்றும் மதிப்பீடு ஆகியவை சுங்க அதிகாரிகளால் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்பு அதிகாரி கூறினார். இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
இளம் பட்டதாரி மாணவி திடீரென உயிரிழப்பு: பிரேத பரிசோதனையில் வெளியான காரணம்
கிராம உத்தியோகத்தர் பரீட்சையில் சித்தியடைந்து நியமனம் பெறுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த பட்டதாரி யுவதி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹுன்னஸ்கிரி ரம்புக்பொத்த பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பிலிப் நக்மா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தெல்தெனிய வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரி பி.கே. அபேரத்னவினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது மூளையில் கட்டி வெடித்து இரத்த கசிவு ஏற்பட்டமையே இந்த மரணத்திற்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், உயிரிழந்த யுவதியின் தந்தை மகள் குறித்து தெரிவிக்கையில், “எனது மகள் ஹுன்னஸ்கிரிய சிவனேஸ்வரா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை படித்தார். அதன் பின்னர் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து பட்டப்படிப்பை முடித்து கிராம அதிகாரி பரீட்சையில் தோற்றி கிராம அதிகாரி பரீட்சையில் சித்தியடைந்து மெடதும்பர பிரதேச செயலகத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். அங்கு அவள் பயிற்சியின் போது மிகவும் கஷ்டப்பட்டு படித்தாள் என்றும் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்
காலி – பூஸா சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி.திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். கட்டுநாயக்கவில் அமைந்துள்ள பூஸா சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகரின் வீட்டிற்கு சென்ற அடையாளம் தெரியாத இருவர் அவரது குடும்பத்தினரை அச்சுறுத்தியுள்ளனர். இந்த அச்சுறுத்தல் காரணமாக குறித்த அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள், துப்பாக்கி ரவைகளுடன் சந்தேக நபர் கைது!
ஹொரோயின் போதைப்பொருள் ,கஞ்சா போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் இரண்டு ரவைகள் ஆகியவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (16) மாலை தனமல்வில சர்வோதய மாவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்தனர். சர்வோதய வீதி தனமல்வில பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனமல்வில பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியைச் சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது 6670 மில்லி கிராம் ஹொரோயின் போதைப்பொருள் , 40 கிராம் கஞ்சா போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் இரண்டு ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணையின் பின்னர் சந்தேக நபரை வெல்லவாய நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரவப்பொத்தானையில் புதையல் தோண்டிய நால்வர் கைது
ஹொரவப்பொத்தானை – மொரவெவ பிரதேசத்தில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த நால்வர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் சந்தேக நபர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைதானவர்களில் ஒருவர் அம்பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் ஏனைய மூவரும் ஹொரவப்பொத்தானை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய பெண் வைத்தியர் மரணம்
பேருந்து விபத்தில் சிக்கி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் வைத்தியர் ஒருவர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிலாபம் வைத்தியசாலையின் குறைமாத குழந்தை பிரிவில் பணியாற்றிய 37 வயதான வைத்தியர் செபாலிகா வனமாலி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். கடந்த 4 ஆம் திகதி கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த லொறியுடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 27 பேர் காயமடைந்து சிலாபம் மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். குறித்த வைத்தியர் தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற போது விபத்திற்கு முகங்கொடுத்துள்ளார். குறித்த வைத்தியர் பேருந்தில் இருந்து சிலாபம் பொது வைத்தியசாலைக்கு வந்து கொண்டிருந்த போது பேருந்து விபத்துக்குள்ளானதில் அவரும் ஏனைய பயணிகளும் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த வைத்தியர், சிகிச்சைக்காக அவர் பணிபுரிந்த சிலாபம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் காயமடைந்தவர்களில் இருந்த அவரது நண்பியை காப்பாற்ற சக மருத்துவர்கள் கடுமையாக போராடினர். ஒருவாரம் காலம் சென்ற போதும், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். வைத்தியரின் உயிரை காப்பாற்றும் வகையில் பல சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. உயிரிழந்த வைத்தியர் குழந்தைகளுக்காக அர்ப்பணிப்புடன் பணிபுரியும் ஒரு பணிவானர் என்றும், ஒவ்வொரு மருத்துவமனையிலும் சக ஊழியர்களுடன் சிறப்பாக பணியாற்றியவர் என்றும் வைத்தியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் பேருந்து மீது மதுப் போத்தலால் தாக்குதல்…!
கிளிநொச்சியில் அரச பேருந்து மீது மதுபான போத்தலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று(17) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலைக்குரிய பேருந்து மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் வைத்து தனியார் பேருந்து காப்பாளர் ஒருவரால் மதுபான போத்தல் மூலம் பேருந்துக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலை மேற்கொண்ட நபர் பயணிகள், சாரதி மற்றும் காப்பாளரினால் பிடிக்கப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மதுபான போத்தலின் கண்ணாடி துகள்கள் பட்டு பயணி ஒருவரும் காயமடைந்துள்ளார். சாரதி பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்தவிதமான ஆபத்தும் வராமல் பாதுகாப்பாக பேருந்தை நிறுத்தியுள்ளார். தனியார் பேருந்து குழுவினருடன் ஏற்பட்ட நேர பிரச்சினை காரணமாக இந்த செயல் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழும்பு சென்ற இரு சொகுசு பேருந்து விபத்து சாரதி பலி 8 பேர் காயம்
குருணாகல் மெல்சிறிபுர பகுதியில் அதிசொாகுசு பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் சாரதி உயிரிழந்துள்ளதோடு, 8 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று புதன்கிழமை (17) அதிகாலை இடம் பெற்றுள்ளது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பஸ் ஒன்றும் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற அதி சொகுசு பஸ் ஒன்றுமே நேருக்கு நேர் மோதியுள்ளன. விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்வியியற் கல்லூரிகளுக்கு விசேட இராணுவப்பாதுகாப்பு
இலங்கையின் தேசிய கல்வியற்கல்லூரிகளுக்கு விசேட இராணுவப்பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்வியற் கல்லூரிகளில் நாளைய தினம் புதிய மாணவர் அனுமதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்னவிடம் எழுத்து மூலம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கைகளிலிருந்து விரிவுரையாளர்கள் விலகியுள்ளனர். தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஒன்றாக இவ்வாறு விரிவுரையாளர்கள் தங்களது பணிகளிலிருந்து விலகிக்கொண்டுள்ளனர். மாணவர்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி மாணவர் அனுமதி செயற்பாடுகளை சீர்குலைக்க முயற்சிக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களை சேர்க்கும் அனைத்து பொறுப்புக்களும் கல்வியியற் கல்லூரிகளின் பீடாதிபதிகளிடம் காணப்படுவதனால் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கப்படலாம் என சுட்டிக்காட்டியுள்ளார். குழப்பங்களை தடுக்கும் நோக்கில் கல்வியியற் கல்லூரிகளுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்குமாறும் அவர் கோரியுள்ளார். கல்வியியற் கல்லூரிகளில் பகிடி வதை உள்ளிட்ட செயற்பாடுகள் மூலம் மாணவர்களை கல்லூரிகளுக்கு சேர்க்கும் நடவடிக்கைகளை சீர்குலைக்க முயற்சிக்கப்படலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, தேசிய கல்வியற் கல்லூரிகளில் இராணுவத்தினரை பாதுகாப்பு கடமையில் அமர்த்துவதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.