அனுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு கோரிக்கை
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பிக்குகள் முன்னணியின் அழைப்பாளர் வகாமுல்லே உதித்த தேரர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்தப்பட்டதனைத் தொடர்ந்து அனுரவின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு அநேக பிக்குகள் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே, அனுரகுமார திஸாநாயக்கவிற்கான பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். பொது வெளியில் நேரடியாக தோன்றாது கூட்டங்களில் பேசக்கூடிய வகையிலான வழிகள் குறித்து ஆராய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தங்களது அதிகாரத்திற்காக அரசியல்வாதிகள் எந்த வகையிலான ஈவிரக்கமற்ற செயல்களிலும் ஈடுபடக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த மற்றும் மைத்திரி தொடர்பில் வெளியான தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஜனாதிபதியின் சிறப்பு சலுகையின் கீழ் பொது நிதியை பயன்படுத்தியமை தொடர்பில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) 2005 மற்றும் 2015 க்கு இடையில் ஜனாதிபதியின் சிறப்புச் சலுகையின் கீழ் விமானப்படை ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி 978 தடவைகள் விமானம் ஊடாக பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தில் 557 தடவைகள் விமானம் ஊடாக பயணங்களை மேற்கொண்டுள்ளார். இந்த தகவல்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இலங்கை விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியின் சிறப்புரிமையின் கீழ் உள் விமானங்கள் மூலம் மொத்தம் 131,277.17 கிலோமீட்டர் தூரத்தை பயணித்துள்ளார். ஒப்பீட்டளவில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது பதவிக்காலத்தில் விமானப்படை ஹெலிகாப்டர்களை அதிகளவில் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் ஹெலிகாப்டர் பயணத்திற்கு பொது நிதியை பயன்படுத்தியதற்காக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல்சார் ஒத்துழைப்பை பலப்படுத்த உடன்பட்ட இலங்கையும் அமெரிக்காவும்
இலங்கையின் கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும் அமெரிக்காவும் உடன்பட்டுள்ளன. ஜூலை 12 ஆம் திகதி வோசிங்டனில் நடைபெற்ற 5வது இலங்கை-அமெரிக்கா கூட்டாண்மை உரையாடலின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்படி சுதந்திரமான, திறந்த மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை இரண்டு நாடுகளும் உறுதிப்படுத்தியதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஒத்துழைப்பின்கீழ், இலங்கையின் ஹைட்ரோகிராஃபிக் மேப்பிங் திறன்கள் மற்றும் துறையில் பணியாளர்களின் பயிற்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஆதரவை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை ஆராய அமெரிக்கா தீர்மானித்துள்ளது. ஏற்கனவே இலங்கைக்கு இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்களை வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அதிகரிக்கும் மழை வீழ்ச்சி! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இயங்குநிலை தென்மேற்கு பருவ பெயர்ச்சி நிலைமை காரணமாக இவ்வாறு காற்று நிலைமை அதிகரிக்கும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.