Search
Close this search box.

யுனெஸ்கோவின் பணிப்பாளர் இலங்கைக்கு விஜயம்…!

யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அசோலே (Audrey Azoulay) இலங்கைக்கு  வருகைதந்துள்ளார். மூன்று பேர் அடங்கிய குழுவுடன் இன்று வருகை தந்த ஒட்ரே அசோலேவை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றுள்ளனர். இலங்கை, யுனெஸ்கோவில் அங்கத்துவம் பெற்று 75 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு அவரின் வருகை அமைந்துள்ளது. இவ்வாறு வருகை தந்த ஒட்ரே அசோலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரைச் சந்திக்கவுள்ளார் என்றும் இன்று(16)  முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் வெடிப்பு சம்பவம்: இராணுவத்தினர் விசேட விசாரணை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூணொச்சிமுனை கிராமத்தில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டின் அறையொன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிவிபத்தில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் பலத்த சத்தம் கேட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பொலிஸ் குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன், இராணுவத்தினரும் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு !

ஜூலை மாதம் இறுதிப் பகுதியில் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்புக்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் குறித்து வெளியாகும் செய்திகள் தொடர்பில் தெளிவுபடுத்தலுக்காக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஏற்பாடு செய்துள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் அரசியலமைப்பின் ஏற்பாடுகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் சட்டம் என்பனவற்றுக்கு அமையவே நாங்கள் செயற்படுவோம் எனவும் தேர்தலை நடத்துவதற்கு தடையேதும் கிடையாதெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு இம்முறை 76 ஆயிரம் புதிய வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு இம்முறை ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் சட்டவிரோத நியமனங்களை இடைநிறுத்துமாறு மாகாண ஆளுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ. ரத்நாயக்க குறிப்பிட்டார்.

ஈரானுக்கு செலுத்த வேண்டிய கடனை தேயிலை ஏற்றுமதி மூலம் அடைத்த இலங்கை..!

சிலோன் தேயிலை ஏற்றுமதியானது, ஈரானுக்கு செலுத்த வேண்டிய 60 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்த  உதவியுள்ளதென இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல், ஈரானில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்தமைக்காக 251 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இலங்கை ஈரானுக்கு செலுத்த வேண்டி இருந்தது. இந்நிலையில், இந்த காலப்பகுதியில் ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி மூன்று மடங்காக அதிகரித்ததன் மூலம் தீர்வு எட்டப்பட்டதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் தெரிவித்துள்ளார். கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் உள்நாட்டுப் பொருளாதார வீழ்ச்சியினால் மோசமாக்கப்பட்ட நிதி சவால்களை எதிர்கொண்ட இலங்கை, அந்நிய செலாவணி பற்றாக்குறையால் ஈரானுக்கான தனது கடனை திருப்பிச் செலுத்த போராடியது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, தேயிலை ஏற்றுமதி மூலம் நிலுவையில் உள்ள கடன்களை தீர்ப்பதில் கவனம் செலுத்தி இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. ஜனவரி முதல் மே 2024 வரை ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி 4.98 மில்லியன் கிலோகிராம்களாக இருந்தது. இது 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் ஏற்றுமதி செய்யப்பட்ட 1.85 மில்லியன் கிலோகிராம்களுடன் ஒப்பிடுகையில் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் முக்கிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளால் பரபரப்பு…!

கொழும்பு – கோட்டையில் உள்ள பழைய  அரச செயலகம் ஓன்றின் அருகில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுக நகர நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்ட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது இந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிர்மாண நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களால் கிட்டத்தட்ட 06 அடிக்கு கீழே எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, நிர்மாணப் பணி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதுடன், இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அந்த இடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கொழும்பு துறைமுக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா வைத்தியசாலைக்கு விரைவில் விஜயம் மேற்கொள்ளவுள்ள வைத்தியர் அர்ச்சுனா

வவுனியா வைத்தியசாலைக்கு (District General Hospital Vavuniya) விரைவில் வருவேன் என வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளதுடன், அங்கு முன்னர் பல விடயங்கள் இடம்பெற்றதாகவும் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். வைத்தியர் அர்ச்சுனா சமூக ஊடகங்களில் வெளியிட்ட கருத்து ஒன்றுக்கு வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.சுகுணன் வவுனியா வைத்தியசாலைக்கு வாருங்கள் என சமூக ஊடகத்தில் பதில் அளித்திருந்தார். குறித்த பதிலுக்கு விளக்கமளித்து காணொளியொன்றை சமூக வலைத்தளங்களில் வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீங்கள் கூப்பிட்டு வராமல் இருப்பது எப்படி. வவுனியா வைத்தியசாலைக்கு கட்டாயம் வருவேன். அங்கும் நிறைய விடயங்கள் முதலே நடந்திருக்கிறது கட்டாயம் வருவேன் என குறிப்பிட்டுள்ளார்.

நீதி மறுக்கப்படுவதே சமூக பதற்றத்துக்கான காரணம் : விஜயதாச ராஜபக்ச சுட்டிக்காட்டு

சமூக நல்லிணக்கத்தையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதில் நீதியின் முக்கிய பங்கை இலங்கையின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) வலியுறுத்தியுள்ளார். நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், நீதியை மறுப்பதால் ஏற்படும் விளைவுகளையும், சரியான நேரத்தில் சட்ட நடைமுறைகளின் அவசரத் தேவையையும் எடுத்துரைத்துள்ளார். நீதி மறுக்கப்படுவதால், அனைத்து மூலைகளிலிருந்தும் அமைதியின்மை தவிர்க்க முடியாமல் பின்தொடர்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைதியின்மை எதிர்பாராத வழிகளில் வெளிப்பட்டு, சமூகக் கொந்தளிப்புக்கு வழிவகுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில்,2022 இல் இலங்கையின் போராட்டங்கள், தாமதமான நீதி எவ்வாறு பதற்றங்களை அதிகரிக்கலாம் மற்றும் அமைதியை அச்சுறுத்தும் என்பதற்கு தெளிவான உதாரணம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். சட்ட செயல்முறைகள் தடைப்படும் போது அல்லது நீதி தாமதமாகும்போது குழப்பம் ஏற்படலாம். இத்தகைய சீர்குலைவுகளைத் தடுக்க, சட்டத்தின் ஆட்சியை அசைக்காமல் நிலைநிறுத்த வேண்டும். அத்துடன் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் நீதி வெல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். லீ குவான் யூ மற்றும் மகாதீர் முகமது ஆகியோரை உதாரணம் காட்டிய அமைச்சர், மக்கள் நம்பிக்கைக்கு மாறாக, இந்த தலைவர்கள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை தனித்தனியாக உருவாக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மாறாக, குடிமக்களின் கூட்டு முயற்சிகளே முன்னேற்றத்திற்கும் செழுமைக்கும் வழிவகுத்தது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தலைமைப் பதவியை துறக்கும் வாசுதேவ

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமைப் பதவியிலிருந்து வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) தற்காலிகமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்வாய்ப்பட்டுள்ள காரணத்தினால் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு தற்காலிகமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பிரேமரட்ன நியமிக்கப்பட உள்ளார். நிரோசன் பிரேமரட்னவை அதிகாரபூர்வமாக தலைமைப் பதவியில் அமர்த்தும் நிகழ்வு இன்றைய தினம் பத்தரமுல்ல பகுதியில் நடைபெறவுள்ளது. கட்சியின் பணிகளை சிறந்த முறையில் முன்னெடுக்க வேண்டியதன் காரணமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பிரேமரட்னவை தலைமைப் பதவியில் அமர்த்துவதாக முன்னணியின் பிரதி செயலாளர் ஜே.டி.வீ திலகசிறி தெரிவித்துள்ளார். குறிப்பாக கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார நோய்வாய்ப்பட்டுள்ள காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

சஜித்திற்கு உயிர் அச்சுறுத்தலா! முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக வெளிநாட்டு புலனாய்வு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகளின் அறிக்கையின் அடிப்படையில் சஜித்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் சட்டத்தரணி நிசத் விஜேகுணவர்தன ஆகியோர் இந்த கோரிக்கையை, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் முன்வைத்துள்ளனர். இந்த கோரிக்கைக்கு அமைவாக சபாநாயகர், பொலிஸ் மா அதிபரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து இது குறித்து விரிவாக கலந்துரையாடியுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் எதிர்க்கட்சித் தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக தமக்கு எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து தகவல் கிடைக்கப் பெற்ற போதும் சிலர் இவ்வாறு கூறியிருந்ததாக லக்ஸ்மன் கிரியல்ல சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அச்சுறுத்தல் குறித்து பொதுப் பாதுகாப்பு அமைச்சருக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் கடிதங்கள் அனுப்பி வைத்த போதிலும் பதில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் குஜராட்டில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ் தீவிரவாத சந்தேக நபர்களின் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்திற்கு காணப்படும் ஆபத்து குறித்து தெரியவந்துள்ளது என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த அச்சுறுத்தல் குறித்து ஆராய்ந்து எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு சபாநாயகர், பொலிஸ் மா அதிபரை அறிவுறுத்தியுள்ளார்.

அதிகரிக்கும் காணி பிரச்சினை! ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டில் காணப்படும் பெரும்பாலான நீதிமன்றங்களில் நிலம் தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”காணி பிரச்சினை மக்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. நிலம் தொடர்பான வழக்குகளை தீர்க்க பல ஆண்டுகளாக மக்கள் நீதிமன்றத்திற்கு சென்று வருகின்றனர். குறித்த பிரதேசத்தில் காணி அமைச்சர்களும் இருந்தனர். ஆனால் அவர்களால் மக்களின் காணி பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை. இந்த பிரச்சினைகளில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஜனாதிபதி உறுமய வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார். குறைந்த பட்சம் இந்த பிரதேசத்தில் இருக்கும் ஜே.வி.பி.யின் தலைவரால் மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. இந்த ரஜரட்ட பிரதேசத்தில் இருந்துதான் நாட்டுக்கு அரிசி வழங்கப்படுகிறது. 2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மொரகஹகந்த திட்டத்தில் இருந்தும் ரஜரட்டவுக்கு இதுவரை தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே ரஜரட்ட பிரதேசத்துக்கு நீரைப் பெற்றுக்கொடுக்கும் அவசர வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நான் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.