14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பூசாரி கைது.
பதினான்கு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பூசாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். லுணுகலை ஹொப்டனைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனது மகளுக்கு அளவுக்கதிகமான கோபம் வருவதாகவும் வீட்டில் உள்ளவர்கள் சொல்வதை பிள்ளை கேட்பதில்லை எனவும் பல காரணங்களினால் தெய்வ குற்றமாக இருக்கலாம் என எண்ணி பிள்ளைக்கு தாயத்து கட்டுவதற்காக பூசாரி ஒருவரை அணுகியுளள்னர். இதன்போது கடந்த மாதம் 3ஆம் திகதி சிறுமியின் வீட்டுக்கு வந்த பூசாரி பிள்ளைக்கு தாயத்து கட்ட வேண்டும் என கூறி அனைவரையும் வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். அதன்பின்னர் இந்த பூசாரி தனிமையில் இருந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக தெரியவந்துள்ளது. பின்னர் சுகயீனமுற்ற சிறுமியை பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முற்பட்ட போது சிறுமி கருதரித்திருப்பது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் 7ஆம் மாதம் 11 ம் திகதி லுணுகலை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய 30 வயதுடைய நமுனுகுலை கனவரல்ல பகுதியை சேர்ந்த பூசாரி லுணுகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுமி பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபரை பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இசை நிகழ்ச்சியில் மோதல் : ஒருவர் கொலை !
வீரகெட்டிய மொரயாய பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . இந்த மோதலில் வீரகெட்டிய மொரயாய பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தங்காலை மற்றும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது நிலைமை மோசமான நிலையில் இல்லை எனவும் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புத்தர் சிலையை திருடிய தேரர் உட்பட மூவர் கைது !
ரம்புக்கணை புவக்மோட்டையிலுள்ள விகாரையை உடைத்து பெறுமதியான புத்தர் சிலையைத் திருடிய தேரர் உட்பட மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக ரம்புக்கணை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களால் திருடப்பட்ட பெறுமதியான புத்தர் சிலையை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனாதிபதிக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள அழைப்பு.
ஜனாதிபதி வேட்பாளராக முன்வருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் குழப்பமான, கடினமான மற்றும் கசப்பான நேரத்தில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான சவாலை ஏற்றுக்கொண்டார்.சுதந்திர இலங்கையில், இத்தனை பிரச்சினைகள் மத்தியில் நாட்டை கையில் எடுத்தவர்கள் யாரும் இல்லை என்று நினைக்கிறேன். ஜனாதிபதியாக பதவி ஏற்கும் முன்னரே அவரது வீடு எரிக்கப்பட்டது, ஜனாதிபதி செயலகம் கையகப்படுத்தப்பட்டது, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் என்பன கையகப்படுத்தப்பட்டு, நாடாளுமன்றம் சுற்றிவளைக்கப்பட்டு, இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்தது.இதன்போது ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டார். நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் படிப்படியாக அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டி, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி தேசியப் பாதுகாப்பை நிலைநாட்டி ஒடுக்கப்பட்ட சூழ்நிலையிலிருந்து மக்களை விடுவிக்கவும் பாடுபட்டார். ஜனாதிபதி தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம்.தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்த பிறகு, நாங்கள் எங்கள் வேட்பாளரை முன்வைக்கிறோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அடுத்த தேர்தலில் போட்டியிடுமாறு பணிவுடன் அழைக்கின்றோம். இந்த நாடு மிகக் குறுகிய காலத்தில் கட்டியெழுப்பப்பட்டது போலவே, இந்த நாட்டைக் கட்டியெழுப்ப அடுத்த சில வருடங்களை எடுத்துக்கொள்வதற்குத் தேவையான பலத்தையும் தைரியத்தையும் அவருக்கு வழங்க நாமும் எம்மை அர்ப்பணிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் பகிரங்க மன்னிப்பு கோரிய காவிந்த ஜயவர்தன!
நிகழ்நிலை சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்தமைக்காக பகிரங்க மன்னிப்பு கோருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்த சட்ட மூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பித்த போது காவிந்த உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியினர் அதற்கு எதிராக வாக்களித்தனர். இந்த சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்தமைக்காக வருந்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டம் ஓர் ஆபத்தான சட்டம் என காண்பிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். முகநூலில் இடப்பட்ட அவதூறு பதிவு ஒன்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சித்த போது இந்த சட்டத்தின் முக்கியத்துவத்தை தாம் புரிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த சட்டம் ஜனநயாகத்தை ஒடுக்கும் எனவும், அரசியல் செயற்பாடுகளுக்கு இடையூறாக அமையும் எனவும், கருத்துக்களுக்காக சிறைக்கு செல்ல நேரிடும் எனவும் கூறப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முறைப்பாடு ஒன்ற செய்ய பொலிஸ் அதிகாரிகளின் உதவியை நாடிய போது இந்த சட்டத்தின் பயன்கள் குறித்து அவர்கள் விளக்கியதாக காவிந்த தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் அவதூறு பிரச்சாரங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடிய சட்ட ஏற்பாடுகள் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை குறித்து மன்னிப்பு கோருவதாகவும் கட்சி என்ற ரீதியில் எடுத்த தீர்மானத்திற்கு அமைய தாம் வாக்களித்ததாகவும் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தருவதற்கு அச்சம் கொள்ளும் வெளிநாட்டவர்கள்!
இலங்கையில் இடம்பெறும் வன்முறை சம்பவங்களை சமூக ஊடகங்களில் பார்க்கும் போது சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருவதற்கு அச்சம் கொள்வதாக தேசிய நாமல் உயன அமைப்பின் ஸ்தாபகர் வனவாசி ராகுல தேரர் (Wanawasi Rahula Thera) தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில், இலங்கை தற்போது சிகாகோ போன்று மாறியுள்ளது. யுக்திய நடவடிக்கை செயற்படுவதாகவும், பல்வேறு ஆயுதக் குழுக்கள் பல்வேறு வழிகளில் மக்களை கொன்று குவிப்பதாகவும், பாதாள உலகம் பல மோதல்களை ஏற்படுத்துவதாகவும் செய்திகள் வெளியாகின்றன. சுற்றுலா எங்கள் நாட்டில் ஒரு முக்கிய தலைப்பாக மாறியுள்ளதுடன் நமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முக்கிய காரணியாக உள்ளது. சமூக ஊடகங்களில் இதுபோன்ற வன்முறை நடத்தைகளை பார்க்கும்போது, வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகை தருவதற்கு பயப்படுகிறார்கள். இதேவேளை கொலை வழக்குகளை ஊடகங்கள் விரிவாக காட்டுகின்றன. இதுபோன்ற உள்ளடக்கத்தை ஒளிபரப்புவது நெறிமுறை ஊடக நிறுவனங்களின் பொறுப்பாக நான் நினைக்கவில்லை. மக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் துப்பாக்கிகளை பயன்படுத்தி கொலை செய்கிறார்கள், அவர்கள் ஒருவரையொருவர் வெளிப்படையாக சுட்டுக்கொள்கிறார்கள். இதுபோன்ற காணொளிகள் சிறு குழந்தைகளின் மனதைக் கூட மாசுபடுத்துகின்றன. எனவே, குழந்தைகள் மற்றும் பொதுமக்களை குழப்பும் மற்றும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற உள்ளடக்கங்கள் பரவுவதைத் தடுக்க ஊடக நெறிமுறைகளை பேணுவதும் சட்டங்களைக் கொண்டுவருவதும் அரசாங்கத்தின் பொறுப்பு என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ராஜபக்சர்களால் ரணிலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிமல் லான்சா தலைமையிலான பொதுஜன பெரமுன அணிக்கும், ரணிலுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பசில் ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்துடன் ரணிலின் அரசியல் உறவுகளுக்கு நிமல் லான்சா மற்றும் பலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனாலும் ராஜபக்ச குடும்பத்தை சார்ந்த அனைத்து தரப்புக்களையும் ஜனாதிபதி தற்போதும் தன்வசம் வைத்துள்ளார். இந்தநிலையில் கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற ரோஹித அபேகுணவர்தனவின் பேரணியில் ஜனாதிபதி கலந்துகொண்டமைக்கு நிமல் லான்சா அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். . இந்நிலையில் ரோஹித் அபேவர்த்தனவின் பேரணி, லங்சா அணியின் செல்வாக்கை மிஞ்சும் வகையில் அமைந்திருந்திருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து லங்கா அணி அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதில் கேள்வி எழுந்துள்ளது. அத்துடன் அதன் இருப்பு குறித்து நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான அறிவிப்பு.
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவயில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவயில் திணைக்களம், பொது மக்களை அறிவுறித்தியுள்ளது.