பாடசாலை மாணவர்கள் குறித்து பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகாமல் அவற்றை தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் பெற்றோரை பின்பற்றுகிறார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு, திம்பிரிகஸ்யாய, சசுமயவர்தன மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”சகல பாடசாலை மாணவர்களும் போதைப் பொருளுக்கு அடிமையாகாது நடுநிலை சிந்தனையோடு செயற்பட வேண்டும். நேரிய சிந்தனையோடு பாடசாலை பிள்ளைகள் வளர வேண்டும். மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகக் கூடாது. மது பழக்கம் ஒரு நாகரீகமற்ற செயல். இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி நடந்துகொள்ள வேண்டும். சரியானதைச் செய்து சரியான பாதையில் செல்ல வேண்டும். பெரியவர்களை மதிக்க வேண்டும். பணிவாக நடந்து கொள்ள வேண்டும். தகவல் தொழில்நுட்பத்துறையில் பிரவேசித்து ஸ்மார்ட் கல்வியை முன்னெடுக்க வேண்டும். கல்வி எனும் பெறுமதிமிக்க வளத்தை எவராலும் ஒருபோதும் திருட முடியாது. பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியையும் நல்ல நாகரீக வாழ்க்கையும் அமைத்துக் கொடுக்க சகலரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இன்று மக்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், வருமானம் ஈட்டும் வழிகளிலும் மீளமுடியாத வகையில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கஷ்டங்கள் நிறைந்த பெரும் அழுத்தங்களுக்கு மத்தியில் ஜீவித்து வருகின்றனர். நகர்ப்புற வறுமை கூட வியாபித்துள்ளது.
கையடக்க தொலைபேசி பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை! நள்ளிரவில் வெடித்து சிதறிய பயங்கரம்
தென்னிலங்கையில் நள்ளிரவு நேரத்தில் கையடக்க தொலைபேசி வெடித்து சிதறிய நிலையில் அதன் உரிமையாளர் உயிர் தப்பியுள்ளார். காலியில் கையடக்க தொலைபேசியை அருகில் வைத்துக் கொண்டு உறங்கிய நபரின் கையடக்க தொலைபேசியே வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை 2.45 மணியளவில் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட நபர், சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். சத்தம் கேட்டு கண் விழித்துப் பார்த்த போது, அது தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போதும் உடனடியாக எழுந்தமையினால் உயிர் தப்பியதாகவும், அவ்வாறில்லை உயிராபத்து ஏற்பட்டிருக்கும் எனத் தெரிவித்துள்ளார். Vivo Y51 என்ற கையடக்க தொலைபேசியே இவ்வாறு வெடித்து சிதறியுள்ளது. கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவோர் இவ்வாறு அருகில் வைத்துக் கொண்டு உறக்க செல்வது, மின்சாரத்துடன் இணைந்ததாக சார்ஜில் வைத்து உறங்குவதையும் தவிர்க்குமாறும் அவர் கேட்டுள்ளார்.
இராணுவத்தினர் வசிப்பதற்கு நிபந்தனையின்றி காணி உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டம்.
நாட்டின் இறைமையைப் பாதுகாக்க உயிர்த் தியாகம் செய்த, யுத்த செயற்பாடுகளில் கடமையாற்றிய முப்படையினர், இலங்கைப் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையில் ஊனமுற்ற வீரர்களுக்கும், உயிர்த் தியாகம் செய்தவர்களின் குடும்பத்தாருக்கும் வசிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அரச காணிகளை நிபந்தனையின்றியும் கட்டணங்கள் இல்லாமலும் முழுமையான உரிமையை வழங்குவதற்கான வேலைத்திட்டம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் அச்சமின்றி மக்கள் நடமாடுவதற்காக உயிர் தியாகம் செய்த பாதுகாப்புத் தரப்பினருக்கு தாய்நாட்டில் காணித் துண்டு ஒன்றின் உரிமையை உறுதிப்படுத்துவதே இந்த வேலைத் திட்டத்தின் நோக்கமாகும். ஜனாதிபதி செயலகத்தின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால், எண். PS/CM/APL/267/2024 மற்றும் 13-05-2024 திகதியிடப்பட்ட, இராணுவ வீரர்களுக்கு வசிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அரச காணிகளுக்கு முழுமையான சலுகைகளை வழங்குவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரம் எண்.அமப/24/0898/601/058 மற்றும் 05/23/2024 திகதியிட்ட அமைச்சரவை தீர்மானத்தின் படி, இராணுவத்தினருக்கு பின்வரும் சலுகைகள் உரிமையாகும். * முறையான தெரிவு முறையின் மூலம் தகுதி பெற்ற போதிலும் இதுவரை அபிவிருத்தி செய்யத் தவறிய அனைத்து பிரிவுப் போர் வீரர்களுக்கும் 100 ரூபா என்ற பெயரளவு வரித் தொகையின் கீழ் விசேட குத்தகையை வழங்குதல். * குத்தகைக்கு வழங்கப்பட்ட காணிகளின் அபிவிருத்திக்கான நிதி வசதிகளைப் பெறுவதற்கு வசதியாக, சிறப்பு குத்தகைகளின் நிபந்தனைகளை தளர்த்துதல் * அபிவிருத்தி செய்து வரும் /அபிவிருத்தி செய்துள்ள காணிக்கு சான்றிதழ்களை இலவசமாக வழங்குதல், * நடுத்தர வர்க்கத்தின் கொள்முதல் விலைப் பிரிவின் கீழ் தகுதியுள்ள வதிவிட அடிப்படையில் அபிவிருத்தி செய்துள்ள நிலத்திற்கு சான்றிதழ்களை இலவசமாக வழங்குதல், * நிபந்தனைகளுடன் சிறப்பு சலுகைக் கடிதத்தின் விதிகளின்படி நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளல் மற்றும் திரும்பப் பெறுதல் ஆகியவற்றை முறையாகப் பதிவு செய்தல். * நிலஅளவை தொடர்பான அமைப்பு மற்றும் வரைபடங்களைப் பெறுவதற்கு நில அளவை திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய அளவீட்டுக் கட்டணத்திலிருந்து விலக்களித்தல். அனைத்துப் பிரிவு பாதுகாப்புத் தரப்பினருக்கும் சிக்கலற்ற காணியின் உரிமையை வழங்கும் இந்த தேசிய வேலைத்திட்டம் 04 மாதங்களில் பூர்த்தி செய்யப்படவுள்ளது. இது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவித்து அவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதற்காக நிபந்தனையின்றி முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்காக நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 04 இடங்களில் ஜனாதிபதி அலுவலகத்தின் தலைமையில் நடமாடும் சேவைகளை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பொலன்னறுவை மாவட்ட நடமாடும் நிகழ்ச்சி 10-07-2024 அன்று ஹிங்குராக்கொடை விமானப்படைத் தலைமையகத்தில் நடைபெற்றதுடன், 17-07-2024 ஆம் திகதி, சாலியபுர கஜபா படைப்பிரிவு நிலையத்திலும், 19-07-2024 ஆம் திகதி குருநாகல் விஜயபா படைப்பிரிவு நிலையத்திலும், 23-07-2024 ஆம் திகதி களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியிலும் இந்த நடமாடும் சேவைகள் நடைபெறவுள்ளன.
பொலிஸார் இனி இதை செய்யக் கூடாது வெளியானது சுற்றறிக்கை
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவிக்கும் வகையில் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும் போது பின்பற்ற வேண்டியவை குறித்து அறிவுறுத்தல்களை வழங்கி குறித்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி, கைது செய்யப்படும் சந்தேகநபர்களை ஊடகங்களுக்கு வௌிப்படுத்தி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் இந்த நிலைமையை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் குறித்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
வாகனம் வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு அதிர்ச்சி தகவல்.
அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வாகன வாகன உமிழ்வு பரிசோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது. வீதியில் பயணிக்கும் இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் 070 3500 525 என்ற வட்ஸ்எப் இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அனுப்பு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் தசுன் கமகே குறிப்பிட்டுள்ளார். வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக மாத்திரம் புகை சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டாம் என தசுன் கமகே சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கின்றார். போலியான தந்திரோபாயங்கள் மூலம் புகை பரிசோதனை சான்றிதழைப் பலர் பெறுகின்ற போதிலும், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன திணைக்கள அதிகாரிகள் வீதியில் வாகனங்கள் செலுத்தும் போது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். அதிக புகை வெளியேறுவதை அவதானிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக பராமரிப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், இல்லையெனில் வாகனத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
பஸ்ஸில் பயணித்தவர்கள் மீது வாள் வெட்டு யாழில் சம்பவம்.
யாழ்ப்பாணத்தில் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த இருவர், பேருந்தின் சாரதி மற்றும் பயணி ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். கொடிகாமத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்று (12) வெள்ளிக்கிழமை பயணித்த பஸ்ஸில், கைதடி பகுதியில் வைத்து இரு இளைஞர்கள் ஏறியுள்ளனர். பின்னர், இந்த இளைஞர்கள் இருவரும் அரியாலை பகுதியில் வைத்து பஸ்ஸில் இருந்து இறங்கி , நடத்துனருடன் முரண்பட்டுள்ளனர். இதன்போது, சாரதியும் , பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவரும் , அவர்களை சமரசப்படுத்த முயன்றுள்ளனர். இதன்போது, இந்த இரு இளைஞர்களும் , திடீரென தாம் மறைத்து வைத்திருந்த வாளினை எடுத்து , அங்கிருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். தாக்குதலில் சாரதி மற்றும் பயணி ஆகியோர் காயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் சரத் பொன்சேகா நீக்கம்!
ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி சாா்ந்த அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் சரத் பொன்சேகாவை நீக்கத் திா்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நாடாளுமன்ற குழுக் கூட்டம் உள்ளிட்ட கட்சியின் அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நீக்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினா் சரத் பொன்சேக்காவின் அண்மைக்கால நடவடிக்கைகள் கட்சியின் செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், இவ்விடயம் தொடா்பாக நன்கு ஆராய்ந்த பின்னரே இத்தீா்மானம் எடுக்கப்பட்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. அத்துடன், அவருக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகியவற்றில் வேட்பு மனு வழங்குவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
லண்டனுக்கு செல்ல முயன்ற நால்வர் பரிதாபமாக உயிரிழப்பு!
பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற 4 புலம்பெயர்ந்தோர் படகு கால்வாயில் கவிழ்ந்ததில் உயிரிழந்திருப்பதாக பிரெஞ்சு கடலோர காவற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். வடக்கு பிரான்ஸில் உள்ள Boulogne-sur-Mer கடற்கரையில் மொத்தம் 67 பேர் படகில் பயணித்துள்ளனர். அவர்களில் 63 பேர் 4 கப்பல்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் சம்பந்தப்பட்ட நடவடிக்கை மூலம் மீட்கப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் கூறினார். இதேவேளை, இந்தாண்டு (2024) மட்டும் பல ஆயிரம் பேர் சிறிய, அதிக சுமை ஏற்றப்பட்ட படகுகள் வழியாக பிரித்தானியாவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு மில்லியன் கணக்கில் செலவு.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு 600 – 800 மில்லியன் ரூபா வரை தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக அச்சகத்தின் தலைவர் கங்கா கல்பானி லியனகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்து இந்த தொகை குறைக்கப்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் அச்சிடுவதற்கான உரிய ஆவணங்கள் கிடைக்கப்பெறும் என அரசாங்க அச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் தேர்தல் தொடர்பான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆவணங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முல்லைத்தீவில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்ட அமெரிக்க தூதரக அதிகாரிகள் !
முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பகாமம் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை அமெரிக்க தூதரக அதிகாரிகள் பார்வையிட்டதுடன், வெடிபொருள் அகற்றலில் இருக்கின்ற நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் கிளிநொச்சியில் கலந்துரையாடியுள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (12) விஜயம் செய்த அமெரிக்க தூதரக அதிகாரிகள் குழு முன்னதாக முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பகுதிகளை சென்று பார்வையிட்டு, அதன் நிலைமைகள் தொடர்பில் கிளிநொச்சியில் அமைந்துள்ள டாஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் கலந்துரையாடினர்.