கல்விக்கு இடையூறு விளைவிக்கும் ஆசிரியர்களை கடுமையாக எச்சரித்த ஜனாதிபதி – எடுக்கப்படவுள்ள நடவடிக்கை.
பாடசாலைக் கல்வியின் போது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கல்விக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, எந்தவிதமான நாசகார செயற்பாடுகளுக்கும் இடமளிக்கப் போவதில்லை என தெரிவித்தார். “ஒழுக்கத்துடன் பணியாற்றுங்கள். ஒழுக்கம் இல்லாமல் கல்விச் சேவையை நடத்த முடியாது. கடந்த காலங்களில் நடந்த வேலை நிறுத்தம், பாடசாலைகளில் நடக்கும் வேலை நிறுத்தம் சரியில்லை.காரணம் இல்லை. கோட்டாபய ராஜபக்ஷ 2022ல் சம்பள உயர்வு வழங்கிய ஒரே துறை. இந்த வருடம் அனைவருக்கும் 10,000 ரூபா உதவித்தொகையை இருமுறை வழங்கினோம். அடுத்தநாளே பணிப்புறக்கணிப்பு. அவர்கள் இப்படி விளையாட விடுவது நல்லதல்ல. நான் சட்டமா அதிபருடன் கலந்துரையாடினேன். இதனால் சிங்களப் பிள்ளைகளின் கல்விக்கே கேள்விக் குறி, ஏனைய மொழி பாடசாலைகள் உரிய பணியை தொடர்கின்றனர். காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை யாரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வகுப்புகளை சீர்குலைக்க முடியாது சட்டத்தினை உருவாக்க ஆலோசனைகளை வழங்கி உள்ளேன். வருங்கால சந்ததியினருக்காக நாம் அந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதற்குப் பிறகு என் மீது கோபம் கொள்ள வேண்டாம், இந்த விடயத்தில் நான் இன்னும் கடுமையாக நடந்து கொள்வேன் என தெரிவித்தார்.
ஹரக் கட்டாவிற்கு எதிரான வழக்கின் விசாரணை ஒத்தி வைப்பு.
ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு (Colombo) மேல் நீதிமன்றம் மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து தீர்ப்பளித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது ஹரக் கட்டா உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளும் தப்பிச் செல்ல சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது, இன்று (03) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன்போது, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் குற்றம்சாட்டப்பட்ட ஹரக் கட்டா நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டார். இந்நிலையில், முன்வைக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் பரிசீலிக்கப்பட்டு பின்னர் வழக்கின் விசாரணை எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
போலி தங்கத்தை பயன்படுத்தி கோடிக்கணக்கில் பண மோசடி.
போலி தங்கத்தைப் பயன்படுத்தி 19,670,000 ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடி தொடர்பில் பதுளையில் (Badulla) உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் தங்கப் பொருட்களை அடமானப் பிரிவின் அதிகாரி ஒருவரை பதுளை காவல்துறை பிரிவின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த தனியார் நிதி நிறுவன மேலாளர் செய்த முறைப்பாட்டின் பேரில், காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதன்படி, சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 41 போலி நகைகளான மாலைகள், மோதிரங்கள், வளையல்கள், பென்டன்ட்கள் என்பன காணப்பட்டதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிதி நிறுவனத்திற்கு பல்வேறு நபர்கள் வந்து நகைகளை அடகு வைத்த போது, சந்தேக நபர் அவர்களிடம் போலி ஆவணம் தயாரித்து, நிகழ்நிலை மூலம் போலி நகைகளை இறக்குமதி செய்து உண்மையான தங்க பொருட்களை அடகு வைத்து பணம் பெற்றது தெரியவந்துள்ளது. அத்துடன், அடகு வைக்கப்பட்ட நகைகள் தொடர்பான வட்டியை சந்தேகநபர் அதன் உரிமையாளர்களின் பெயரில் செலுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து உயர் நீதிமன்றில் மனு!
தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவை தொழிலதிபர் சி.டி.லெனாவாவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஜனாதிபதித் தேர்தல் திகதி குறித்து உயர் நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை தற்போது நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.
யாழில் சட்டத்தரணியொருவரின் அலுவலகத்தில் பொலிஸார் விசேட சோதனை
யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் உள்ள சட்டத்தரணியொருவரின் அலுவலகத்தில், பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இத்தாலியைச் சேர்ந்த பெண்ணொருவர், யாழ்ப்பாணத்துக்குத் திரும்பி விவாகரத்துக்கு விண்ணப்பிக்கச் சென்றபோது, அவர் ஏற்கனவே விவாகரத்துப் பெற்றுள்ளார் என்று தரவுகள் வெளிக்காட்டியுள்ளன. அந்தப் பெண் அதுவரை விவாகரத்துக்கு விண்ணப்பிக்காத நிலையில், இது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். இந்நிலையில், பொலிஸ் விசாரணைகளில், உடுவில் பகுதியில் உள்ள சட்டத்தரணியொருவர் கனிஷ்ட சட்டத்தரணிகள் மூலமாக ஆள்மாறாட்டம் செய்து , மேற்படி தம்பதியர்கள் விவாகரத்துப் பெற்றுக்கொள்வதாக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை தெரியவந்துள்ளது. இதையடுத்து, இது தொடர்பில் குறித்த சட்டத்தரணியின் அலுவலகத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சாவகச்சேரி நீதிமன்றத்தில் பொலிஸார் அனுமதி பெற்றதையடுத்தே இந்தச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இல்லாத கூட்டமைப்பிற்கு தலைவரை தெரிவு செய்த மாவை!!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவராக குகதாஸை (Kugadhas) நியமிப்பது என மத்திய குழு தீர்மானம் எடுத்துள்ளதாக மாவை சேனாதிராஜா (S. Mavai Senathirajah) தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் (Jaffna) – மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று (02.07.2024) நடைபெற்ற மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் நினைவேந்தல் நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழரசு கட்சிதனியாக பிரிந்து சென்றதன் பின்னரும் இன்றுவரை தமிழரசுக் கட்சி தன்னை தமிழ் தேசியக் கூட்டமைப்பு என கூறி வருவது அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சி தனியாக பிரிந்து சென்றதன் பின்னர் கூட்டமைப்பிலிருந்த ஏனைய பங்காளிகட்சிகள் தமக்குள் ஒரு புரிந்துணர்வு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியாக தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையிலே தமிழரசுக் கட்சி தனி ஒரு கட்சியாக இருந்து கொண்டு தன்னை தமிழ் தேசியக் கூட்டமைப்பாகவும் அதற்கு தலைவரை தெரிவு செய்ய உள்ளதாக மாவை சேனாதிராசா கூறுவது அர்தமற்ற ஒருவிடயம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
யாழ். பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி அட்டகாசம் – திருகோணமலை இளைஞர்கள் அதிரடியாக கைது.
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் திருகோணமலையை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) இரவு இளைஞர்கள் குழு ஒன்று அமைதியின்மையை ஏற்படுத்துவதாக யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலின் பிரகாரம் பஸ் நிலையத்திற்கு விரைந்த பொலிஸ் குழு, அங்கு அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை கைது செய்ய முயற்சித்துள்ளனர். அதன் போது, இளைஞர்கள் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், தாக்குதலில் இரு பொலிஸார் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, நான்கு இளைஞர்களும் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டமை, கடமைக்கு இடையூறு விளைத்தமை, பொது இடத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள நான்கு இளைஞர்களும் திருகோணமலையை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனாதிபதியால் புதிய நியமனங்கள் வழங்கி வைப்பு
இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தரம் III பொது ஊழியர் பதவிகளுக்கு 60 பேரை நியமிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. அலரி மாளிகளியில் சற்று முன்னர் குறித்த வைபவம் ஆரம்பமாகியதாக ஜனாதிப ஊடகப் பிரிவு குறிப்பிடுகிறது. இந்த நியமனங்களுக்கு மேலதிகமாக 1,706 பட்டதாரிகள் மற்றும் 453 ஆங்கில டிப்ளோமா பெற்றவர்கள் தேசிய பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் 10 ஆயிரம் ரூபாவிற்கு ஆள்மாறாட்டம்: இரு பெண்களுக்கு விளக்கமறியல்
வெளிநாட்டில் வசிக்கும் நபருக்கு சொந்தமான காணி ஒன்றினை ஆள் மாறாட்டம் செய்து உரிம மாற்றம் செய்த குற்றச்சாட்டில் கைதான இரு பெண்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாடொன்றில் வசித்து வருகின்றார். அவர் தனது காணிக்கான அற்றோனித்தத்துவ அதிகாரத்தை தனது ஒன்றுவிட்ட சகோதரிக்கு வழங்கியிருந்தார். இந்த நிலையில், காணி உரிமையாளரின் சொந்தச் சகோதரி பிறிதொரு தேவையைக் காரணம் காட்டி ஒன்றுவிட்ட சகோதரியிடமிருந்து உறுதியைப் பெற்றுச்சென்று மோசடியாக உரிமை மாற்றம் செய்துள்ளார். காணி உரிம மாற்றம் செய்யப்பட்டதை அறிந்து, அது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற தடுப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளின் அடிப்படையில், காணி மோசடி செய்த சகோதரியைக் கைது செய்தனர். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவர் ஆள்மாறாட்டம் செய்வதற்கு உதவிய பிறிதொரு பெண்ணும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, 10 ஆயிரம் ரூபாவுக்காகவே தான் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக ஆள்மாறாட்டம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒப்புக்கொண்டார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆள்மாறாட்டத்துக்குத் துணைபோன பெண் (10 ஆயிரம் ரூபாவுக்காக கையொப்பம் வைத்தவர்) கொழும்பைச் சேர்ந்தவர் என்றும், சுன்னாகத்தில் தற்காலிகமாக வசித்தபோதே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை ஆள்மாறாட்டம் செய்து, சட்டத்தரணியின் முன்னிலையில் கையொப்பம் வைத்த போது தான் நோய்வாய்ப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அவர் மாஸ்க் அணிந்திருந்தார் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஜேந்திரகுமார் எம்பிக்கு கடுமையான புற்றுநோய்!! நாடாளுமன்றத்தால் 3 மாத லீவு!!
கடுமையான புற்றுநோயால் சுகயீனமடைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு விடுமுறை வழங்க நாடாளுமன்றம் அனுமதித்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நாடாளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்லவினால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கான விடுமுறை முன்மொழியப்பட்டது.