வடக்கு மாகாணத்தில் உள்ள இந்திய பிரஜைகளுக்கு வெளியான அறிவிப்பு
வடக்கு மாகாணத்தில்(northern province) வசிக்கும்/தொழில் காரணமாக தங்கியிருக்கும் இந்தியப்(india) பிரஜைகளுக்கான தூதரக விடயங்களுக்கான “ஓப்பின் ஹவுஸ்” (Open House) கலந்துரையாடலுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய துணைத் தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இந்திய பிரஜைகள் எதிர்நோக்கும் ஏதேனும் கடவுச்சீட்டு, தூதரக விவகாரங்கள் அல்லது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பூர்த்தி செய்யும் நோக்கில், இல. 14, மருதடி லேன், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் 10 மணி முதல் 11 மணி வரை “ஓப்பின் ஹவுஸ்” கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள இந்திய குடிமக்கள் மேற்படி கூட்டங்களில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். அதேபோன்று, இந்த மாவட்டங்களில் வசிக்கும் இந்திய பிரஜைகளின் விசா, OCI & தூதரக சேவைகள் போன்ற PCC, சான்றொப்பம் போன்றவை தொடர்பான குறைகள்/வேண்டுகைகள் போன்றவை இந்த கூட்டங்களின் போது பூர்த்தி செய்யப்படும். உங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்த, தயவுசெய்து முன்கூட்டியே எம்மை தொடர்பு கொள்வதற்கு தொலைபேசி எண். 021-2220504/5 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும். அல்லது cons.jaffna@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் – என்றுள்ளது.
ஜனாதிபதி ரணில் ஐ.தே.கட்சியிலிருந்து விலக வேண்டும் – சாகர காரியவசம் தெரிவிப்பு.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்துவம் பெற்றால் அவரை ஜனாதிபதி வேட்பாளராக்குவது குறித்து பரிசீலிக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாங்கள் எந்தவொரு நபரின் பெயரையும் முன்வைக்கவில்லை. சரியான நபர் சரியான நேரத்தில் முன்வைக்கப்படுவார். எங்கள் கட்சி மொட்டு சின்னத்தின் கீழ் வேட்பாளரை முன்னிறுத்தும். கேள்வி – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராக மாட்டாரா? ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் மொட்டு சின்னத்திலேயே முன்னிறுத்தப்படுவார். எனவே அவரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி மொட்டு கட்சியின் உறுப்புரிமைய பெற வேண்டும். அப்படியானால் பரிசீலிப்போம்” என்றார்.
நயினாதீவுக்கு சென்ற படகு கவிழ்ந்தது : ஒருவர் பலி ; மூவர் வைத்தியசாலையில்!
யாழ்ப்பாணம், குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு பொருட்கள் ஏற்றிச் சென்ற படகொன்று கவிழ்ந்ததில் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்தார். புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இந்திரலிங்கம் அருண் (42) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார். குறிகட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் பொருட்கள் ஏற்றி இறக்கலில் ஈடுபட்ட படகொன்று நான்கு தொழிலாளர்களுடன் நேற்று (02) இரவு 7 மணியளவில் நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் பயணித்த நால்வரும் கடலில் வீழ்ந்தனர். அவர்கள் கரை நோக்கி நீந்தியவேளை, கிராம மக்களின் உதவியுடன் மூவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எனினும், நால்வரில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழந்தவரின் உடலானது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவு.
நாமல் கருணாரத்ன உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவிற்கு எதிராக இரண்டு நீதிமன்றங்கள் உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. இன்று (03) கொழும்பில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் மற்றும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் பாற்பண்ணையாளர்களை பாதுகாக்கும் மத்திய நிலையம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்தவுள்ள போராட்டம் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாமல் கருணாரத்ன, டி.பி.சரத், சுசந்த குமார, சுமித் அத்தநாயக்க, பண்டார ரம்புக்வெல்ல, சோசிறி ரணசிங்க, பால் பண்ணையாளர்களைப் பாதுகாக்கும் அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் நிலந்த சில்வா, பால் பண்ணையாளர்களைப் பாதுகாக்கும் மத்திய நிலையத்தின் செயலாளர், உள்ளிட்டவர்கள் பல வீதிகளில் பிரவேசிப்பதற்கு தடை விதித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஓல்கெட் மாவத்தை டெலிகொம் சந்தியிலிருந்து செராமிக் சந்தி வரையிலான வீதியையும், செராமிக் சந்தியிலிருந்து என்எஸ்ஏ சுற்றுவட்ட வீதி வரையும், , என்எஸ்ஏ சுற்றுவட்டத்திலிருந்து சாரணர் மாவத்தை வரையிலான காலி வீதி வரையும் காலி வீதி சுற்று வட்டத்தையும் மறிக்க வேண்டாம் என ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், மத்திய வங்கி மற்றும் ஜனாதிபதி மாளிகையிலும் மனுக்களை வழங்கவும் கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் பொறுப்பான அரச அதிகாரியின் முறையான அனுமதியுடன் மட்டுமே நுழைவதற்கு தடையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது. பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோதமாக நடந்து கொள்ளாமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான அடிப்படை உரிமையில் நீதிமன்ற உத்தரவு எந்தவொரு தடையையும் ஏற்படுத்தாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெண்களுக்கான விசேட கடன் திட்டம்
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறையில் பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பல்வேறு காரணிகளால் இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளில் பெண்களின் பங்களிப்பு ஏனைய பிராந்திய மற்றும் ஆசிய நாடுகளை விட குறைவாகவே காணப்படுகின்றது. 2022 இல் நடத்தப்பட்ட இலங்கை தொழிலாளர் படை கணக்கெடுப்பின்படி, பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான மக்கள் தொகையில் 35% பெண்கள், இது பொருளாதார பங்கேற்பின் பாலின பங்களிப்பு விகிதங்களில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வை பிரதிபலிக்கிறது என்று அரசாங்கம் கூறுகிறது. மட்டுப்படுத்தப்பட்ட நிதியறிவு மற்றும் கடனைப் பெறுவதற்குத் தேவையான சொத்துக்கள் அல்லது பிற பிணையங்கள் பெண்களுக்கு இல்லாதது மற்றும் நிதி ஆதாரங்களை அணுகுவதற்கான வாய்ப்புகள் இல்லாமை ஆகியவை இலங்கையில் பெண் தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் முக்கிய தடைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. எனவே, 26-02-2024 திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையை மீண்டும் வலுப்படுத்துவதற்கான கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 200 பில்லியன் ரூபாயில், 02 பில்லியன் ரூபா பெண்கள் ஈடுபடுவதற்கு பயன்படுத்தப்படும். பொருளாதார நடவடிக்கைகள் தடைகளை நீக்கும் வகையில் சிறப்புக் கடன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்தது.
இலங்கையின் உணவுப்பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்.
கொழும்பு (colombo) நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் நாட்டின் பணவீக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில்,, கடந்த மே மாதம் 0.9 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஜுன் மாதம் 1.7 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. அதன்படி கடந்த மே மாதம் பூச்சியமாகப் பதிவான உணவுப்பணவீக்கம் (Food inflation) ஜுனில் 1.4 சதவீதமாகவும், மே மாதம் 1.3 சதவீதமாகப் பதிவான உணவல்லாப் பணவீக்கம் ஜுனில் 1.8 சதவீதமாகவும் உயர்வடைந்தன. இதற்கு உணவுப்பொருட்களின் விலைகள் மற்றும் உணவல்லாப்பொருட்கள், சேவைகளின் விலைகள், கட்டணங்களில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்பு காரணமாக அமைந்துள்ளது. மேலும் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணின் மாதாந்த மாற்றம் ஜுனில் 0.77 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. பொருளாதாரத்தின் அடிப்படைப்பணவீக்கத்தைப் பிரதிபலிக்கின்ற மையப்பணவீக்கம் கடந்த மே மாதத்தில் பதிவான 3.5 சதவீதத்திலிருந்து ஜுன் மாதத்தில் 4.4 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
முல்லைத்தீவில் மாணவனின் தலையில் தாக்கிய ஆசிரியர்
பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவனின் தலையில் ஆசிரியர் தாக்கியதால் பாடசாலை செல்வதற்கு மாணவன் மறுப்புத் தெரிவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த சம்பவமானது முல்லைத்தீவு (Mullaitivu) கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,கடந்த 19 ஆம் திகதி குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் மீது ஆசிரியர் தலையில் தாக்கியுள்ளார். இந்நிலையில் குறித்த மாணவன் பாடசாலை செல்வதற்கு மறுப்புத் தெரிவித்து வரும் நிலையில் சம்பவத்துடன் தொடர்பட்ட ஆசிரியருடன் பெற்றோர் சந்திப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அதிபர் குறித்த ஆசிரியருடன் தாம் பேசுவதாக தெரிவித்ததாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் தமது பிள்ளைக்கு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியர் தம்முடன் கலந்துரையாடாத நிலையில் விடயம் தொடர்பில் முல்லைத்தீவு காவல்துறையினருக்கு தகவல் தெரியப்படுத்திய நிலையில் காவல்துறையினர் நேற்றைய தினம் குறித்த மாணவனையும் பெற்றோரையும் காவல் நிலையம் அழைத்து விசாரித்துள்ளனர். இதன் போது குறித்த மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தல் வழங்கியதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கொழும்பில் 67 வது மாடியில் இருந்து குதித்து மாணவன் – மாணவி விபரீத முடிவு.
கொழும்பிலுள்ள (colombo) பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனும் மாணவியும் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரை மாய்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறித்த சம்பவம் கொழும்பு – கொம்பனி வீதியிலுள்ள சொகுசு குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் கொழும்பு – குருந்துவத்தையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவனும் மாணவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொழும்பு – கொம்பனி வீதியிலுள்ள சொகுசு குடியிருப்பு கட்டிடத்தின் 67வது மாடியில் இருந்து குதித்து தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்கள் வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மாணவர்கள் தங்கியிருந்த இல்லத்திலும் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் உள்ள ஆசிரியர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு: வெளியாகியுள்ள மகிழ்ச்சி தகவல்.
மாலைதீவு அதிபர் மொஹமட் முய்ஸு இலங்கையிலிருந்து தகுதியான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலைதீவிலுள்ள அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மாலைதீவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பெல்பொலகே ரங்க சுஜீவ குணவர்தன மொஹமட் முய்சுவிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளிக்கும் போதே மாலைதீவு அதிபர் அதனை தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையிடமிருந்து கல்வித் துறையில் கூடுதல் ஆதரவைப் பெற விருப்பம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மாலைதீவு அதிபர் மொஹமட் முய்ஸு இலங்கையிலிருந்து தகுதியான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலைதீவிலுள்ள அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மாலைதீவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பெல்பொலகே ரங்க சுஜீவ குணவர்தன மொஹமட் முய்சுவிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளிக்கும் போதே மாலைதீவு அதிபர் அதனை தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையிடமிருந்து கல்வித் துறையில் கூடுதல் ஆதரவைப் பெற விருப்பம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மாலைதீவுக்கு தகுதியான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் குறிப்பிட்ட முக்கியத்துவம் அளித்து, கல்வித் துறையில் கூடுதல் ஆதரவைப் பெறுவதற்கான தனது விருப்பத்தை மொஹமட் முய்ஸு தெரிவித்துள்ளார். மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 26 ஜூலை 1965 இல் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாடு ஒன்றிலிருந்து அதிரடியாக நாடு கடத்தப்படவுள்ள 4 இலங்கையர்கள்
இஸ்ரேலுக்கு பணிக்காக சென்ற 4 இலங்கையர்கள் திருட்டு குற்றச்சாட்டில் இஸ்ரேல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட பொருட்களில் கையடக்கத் தொலைபேசிகள், மடிக்கணினிகள், மதுபான போத்தல்கள், கமராக்கள் மற்றும் தங்கம் என்பன அடங்குவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். லெபனான் எல்லையில் உள்ள வடக்கு இஸ்ரேலின் நஹாரியா பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் பணிபுரியும் நான்கு இலங்கையர்கள் இஸ்ரேலிய வீடுகளை உடைத்து திருடியதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் நஹரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் நீதிமன்றில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் நாட்டிலிருந்து நாடு கடத்தப்படுவார்கள் எனவும் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளினால் இலங்கையின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் இதன் காரணமாக இஸ்ரேலில் பணிபுரியும் போது தாயகம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலில் யுத்த மோதல்கள் ஏற்பட்டுள்ள போதிலும், இலங்கையர்களுக்கு அதிகளவான தொழில் வாய்ப்புகளை வழங்க இஸ்ரேல் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் இவ்வாறான சூழ்நிலைகளால் அந்த தொழில் வாய்ப்புகளை இழக்கும் அபாயம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.