வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பில் மாகாணங்களின் அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்வு குறித்த முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அதாவது காலம் காலமாக பேசப்பட்டு வரும் 13 திருத்தம், இந்திய இலங்கை ஒப்பந்தம் மற்றும் தற்போதைய பேசுபொருளான தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஆகிய இரண்டு முக்கியமான விடயங்களையும் தனித்தனியாக எடுத்து கலந்துரையாடுவதால் பயனில்லை என சுட்டிக்காட்டிய தமிழ் தலைவர்கள் முக்கியமான இந்த இரண்டு விடயங்களிலும் உள்ள சாதக பாதகம் குறித்து துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்பதையும் தெரிவித்தனர்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும்13ம் திருத்தச்சட்டத்தில் உள்ள மாகாண சபை முறையை நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்ததையடுத்து இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆச்சிரியமடைந்துள்ளார்.
பொலிஸ் அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு குறித்த இருவரும் ஒப்புக்கொண்டனரா என்றும் வியப்புடன் கேட்டுள்ளார். இதன்போது சுமந்திரன் மௌனம் சாதித்ததாக கூறப்படுகிறது.
மேலும்,தமது கருத்துக்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அறிக்கை ஒன்றையும் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கையளித்தார்.
அதில், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் இரா.சாணக்கியன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறீதரன், சி.வி.விக்னேஸ்வரன், எஸ்.அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, இந்திய வம்சாவளித் தமிழர்கள் தொடர்பாக இலங்கை – இந்திய வளர்ச்சிக் கூட்டாண்மை மற்றும் கூடுதல் ஒத்துழைப்பு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் மற்றும் இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் 4000 வீடுகளின் நிர்மாணப்பணிகளை நிறைவு செய்யுமாறும்,பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மலையகத்தில் முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜெய்ஷங்கரை மேற்கோள்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்த உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது,இலங்கையின் பல முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்துள்ளார்.
அவர் இலங்கைக்கான தனது ஒரு நாள் விஜயத்தை நிறைவு செய்து நேற்று வியாழக்கிழமை (20.06.24) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இந்தியாவிற்கு சென்றுள்ளார்.