Search
Close this search box.
எரிபொருள் விநியோகத்தில் பாரிய மோசடி!

எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு சுமார் 31,021 மில்லியன் ரூபா மேலதிக தரகு பணமாக செலுத்தப்பட்டமையினால் பொதுமக்களுக்கு எரிபொருளுக்கான மேலதிக செலவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் அறிக்கை மற்றும் தற்போதைய செயற்பாடுகளை ஆராய்வதற்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தை (Ceylon Petroleum Corporation) அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு முன்னிலையில் அழைத்த போதே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளது.

அதிகாரிகள் செலுத்திய இந்த கட்டணத்தால் தற்போது ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றருக்காக 05 ரூபாய் 85 சதமும், ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றருக்காக 07 ரூபாய் 50 சதமும், ஓட்டோ டீசல் லீற்றருக்காக 05 ரூபாய் 80 சதமும், சூப்பர் டீசல் லீற்றருக்காக 06 ரூபாய் 96 சதம் பணமும் மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விற்பனைப் பிரிவால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கான சுற்றறிக்கை வழங்கப்படுவதில் இழுபறி நிலை காணப்படுவதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில், 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சுமார் 3,416 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன்படி கூட்டுத்தாபனத்திற்கு பாரியளவான மோசடி செய்துள்ளமை தொடர்பில் விற்பனை பிரிவு பொறுப்பு கூற வேண்டும் எனவும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுவது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்திய கோப் (COPE) குழுவின் உறுப்பினர்கள், இந்த மோசடிகளுக்கு கூட்டுத்தாபனத்தின் உள்ளக அதிகாரிகளே பொறுப்பு கூற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இது தொடர்பில் கூட்டுத்தாபனம் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் வந்திருந்த அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, மோசடியில் ஈடுபட்டவர்களின் பெயர் பட்டியல் மற்றும் அந்த அதிகாரிகளின் முறைகேடுகள் குறித்து கூட்டுத்தாபனம் எடுத்த நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையை ஏழு நாட்களுக்குள் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோப் குழு பரிந்துரை செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Sharing is caring

More News